(செ.தேன்மொழி)

நாடு தற்போது எதிர்நோக்கிவரும் பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கான ஆக்கபூர்வமான யோசனைகளை விரைந்து முன்வைக்குமாறு மத்திய வங்கி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ கடுந்தொனியில் வலியுறுத்தியதை அடுத்து , மத்திய வங்கி நிதி ஒதுக்கு விகிதத்தில் குறைப்பைச் செய்திருப்பதுடன், புதிய கொடுகடன் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன மற்றும் அஜித் பீ பெரேரா ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவரகள்; 

மேலும் கூறியதாவது,

பொதுத் தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ சிறந்த நாடகமொன்றை அரங்கேற்றியிருந்தார். இந்த நாடகத்திலே ஜனாதிபதி கதாநாயகனைப் போன்றும் , மத்தியவங்கி உத்தியோகத்தர்களை வில்லன்கள் போன்றும் சித்தரித்தரிக்கப்பட்டிருந்தார்கள்.

தற்போதைய அரசாங்கத்திடம் சிறந்த வேலைத்திட்டம் எதுவும் இல்லாதப்போதிலும் , காலத்திற்கு காலம் சிறந்த நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதன்போது தான் ஒரு சிறந்த நடடிகர் என்பதை ஜனாதிபதி தொடர்ந்தும் உறுதிப்படுத்தி வந்துள்ளார்.

கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பின்னர் நாடு எதிர்நோக்கிவரும் பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்காக ஆக்கபூர்வமான யோசனைகளை விரைந்து முன்வைக்குமாறு மத்தியவங்கி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி கடுந்தொனியில் வலியுறுத்துவதை ஊடகங்கள் ஊடாக அவதானிக்க முடிந்திருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதியிடம் நாங்கள் சில கேள்விகளை கேட்க விருப்புகின்றோம். இந்த மத்தியவங்கி ஊழியர்களுக்கு வலியுறுத்தல் விடுவதற்கு முன்னர். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிதி அமைச்சர் , நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்தியவங்கியின் ஆளுனர் ஆகியோரிடம் இது தொடர்பில் வினவியுள்ளாரா?

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது கோதாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 'சுபீட்சமான எதிர்காலம் ' திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை அவர் முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். இவர்கள் ஆட்சியமைத்து எட்டு மாதங்கள் கடந்துள்ளன.

ஆனால் நாட்டுக்கு நன்மை தரும் வகையிலான ஒரு வேலைத்திட்டத்தையாவது செயற்படுத்தியுள்ளார்களா?  கோதாபயவின் அரசாங்கம் ஆட்சியமைத்ததை அடுத்து நிதி அமைச்சு மற்றும் மத்தியவங்கி ஆளுனர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் பலர் புதிதாகவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எமது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் எவரும் தற்போது பதவியில் இல்லை.

அரசாங்கத்தின் முறையற்ற நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வற் வரியினூடாக அரசாங்கத்தின் வருமானத்திற்கு கிடைக்க வேண்டிய 600 பில்லியன் ரூபாய் நிதி கிடைக்காமல் போயுள்ளது. இது கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னரே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாகும்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி மத்தியவங்கியின் செயற்பாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆளும் தரப்பினரின் அழுத்தம் காரணமாகவே நாணயச்சபையின் உறுப்பினர்கள் இருவர் இராஜநாம செய்திருந்தனர். அரசாங்கத்தினால் அரச வங்கிகளின் பணிப்பாளர் சபையை மாத்திரமே நியமிக்க முடியும். வங்கியின் ஏனைய செயற்பாடுகள் தொடர்பில் தலையிட முடியாது.

மத்தியவங்கி உத்தியோகத்தர்களை அழைத்து ஜனாதிபதி கடுந்தொனியில் வலியுறுத்தியமையினால் அதற்கு அச்சம் கொண்ட உத்தியோகத்தர்கள் அவசரமாக இரு திட்டங்களை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தனர்.

அதாவது மத்தியவங்கி நிதி ஒதுக்கு விகிதத்தில் குறைப்பு மற்றும்  புதிய கொடுகடன் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளன. இதனால் அனுகூலமான பலன்கள் கிடைப்பதுடன் , பிரதிகூலமான பலன்களும் கிடைக்பபெறும். இந்நிலையில்  ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைவதுடன், ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்பிலிட்டு அதிலிருந்து கிடைக்கப் பெறும் வட்டிப்பணத்தைக் கொண்டு வாழ்ந்துவரும் சாதாரண மக்களுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளது.

மத்தியவங்கியின் செயற்பாடுகள் சுயாதீனவையாக இருக்கவேண்டும். அதில் அரசியல்வாதிகள் தலையிடுவதால் பெரும் நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்பிருக்கின்றது.

பொருளாதார முகாமைத்துவம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் பல்வேறு தேர்ச்சிகளைப் பெற்றவர்களே மத்தியவங்கியில் கடமையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அவர்களது செயற்பாடுகளுக்கு அந்த செயற்பாடுகள் தொடர்பகில் தேர்ச்சி பெறாத ஒருவர் அழுத்தம் கொடுப்பதால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை தோற்றுவிக்கும்.எந்தவொரு வேலைத்திட்டம் தொடர்பிலும்  துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னரே முடிவெடுக்க வேண்டும்.

வெறுமனே முடிவுகளை எடுப்பதால் பாரிய நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவலின் போதும் வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கு புறம்பாக செயற்பட்டதன் விளைவாலே பல உயிரிழப்புகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது என்பதை அரசாங்கம் நினைவிற் கொண்டு செயற்பட வேண்டும்.