(இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட மலையக மக்களின் 1000 ரூபா கொடுப்பனவு,  அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகிய கோரிக்கைகளுக்கான இறுதி தீர்மானத்தை  எடுக்கும் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெருந்தோட்டத்துறை கம்பனி உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 

இறுதி தீர்மானம் தொடர்பான தீர்மானமிக்க பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் தலைமையில் இடம் பெறவுள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 700 ரூபாய் ஆரம்ப ஊதியம், வருகைக்கான கொடுப்பனவு, ஊக்குவிப்பு கொடுப்பனவு  உட்டப  மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா  நாளாந்த கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை  தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தோட்ட கம்பனி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

மலையக மக்களின் 1000ம் ரூபா சம்பள கோரிக்கை,  மற்றும்   ஏனைய  அடிப்படை பிரச்சினை ஆகியவை தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்  அலரி மாளிகையில் இடம் பெற்றது. இச்சந்திப்பில்  தோட்ட கம்பனிகளின் உரிமையாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

மலையக மக்களின் சம்பள,  அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில்  முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெளிவுப்படுத்தி, காலம்காலமாக எழும் கோரிக்கைகளுக்கு தோட்ட கம்பனிகள் அவதானம் செலுத்த வேண்டியவு அவசியம் என்றார்.

மலையக மக்களின் கோரிக்கைகளுக்கு  தோட்ட கம்பனிகளின் உரிமையாளர்கள் இப்பேச்சுவார்த்தையின் போது இணக்கம் தெரிவிக்க மறுத்தனர்    இந்த கோரிக்கைகள் தொடர்பில் இறுதி தீர்மானத்தை விரைவாக தோட்ட  கம்பனிகள் எடுக்க வேண்டும் என   பிரதமதர் இதன் போது குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட மக்களின்   சம்பள கோரிக்கை, அடிப்படை பிரச்சினை ஆகியவை தொடர்பான  தீர்மானமிக்க பேச்சுவார்த்தை இம்மாதம் 26 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை  பிரதமர் தலைமையில் இடம் பெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில்  பெருந்தோட்டத்துறை அமைச்சர், ரமேஸ் பதிரன,பிரதமரின் செயலாளர்,   முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானநத அளுத்கமகே,     இலங்கை  தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள்,   பெருந்தோட்ட கம்பனிகளின் உரிமையாளர்கள்   கலந்தக் கொள்ளவுள்ளார்கள்.