இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் பயணித்த கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. 

இதன்போது இங்கிலாந்து பிரதமர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளார்.

 நேற்றையதினம் பாராளுமன்றம் சென்ற பிரதமர் போரிஸ் ஜோன்சன் அங்குள்ள பணிகளை முடித்துக்கொண்டு பிரதமர் அலுவலகத்திற்கு காரில் புறப்பட்டார். 

அப்போது, பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே நேற்று சில குழுக்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தன.

பிரதமர் ஜோன்சனின் கார் பாராளுமன்றத்தை விட்டு வெளியே சென்றபோது அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்களில் ஒருவர் பிரதமரின் காரை வேகமாக சென்று இடைமறித்தார். 

போராட்டக்காரர் திடீரென காரின் முன் வந்து நின்றதால் பிரதமரின் கார் சாரதி வேகமாக காரை கட்டுப்படுத்தினார். 

அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த பாதுகாப்பு படையினரின் வாகனம் எதிர்பாராத விதமாக பிரதமரின் கார் மீது வேகமாக மோதியது.

இதன்போது பிரதமர் ஜோன்சன் பயணித்த காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. 

இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பிரதமர் சென்ற காரை இடைமறித்து விபத்து ஏற்பட காரணமாக இருந்த அந்த போராட்டக்காரரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.