(எம்.எப்.எம்.பஸீர்)

பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில்,  ஜனாதிபதியின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி, மீள சேவையில் சேர முயற்சித்த விவகாரத்தில், அந்த போலி கையொப்ப கடிதத்தின் பின்னணியில் ஜனாதிபதி செயலகத்தில்  சேவையாற்றும் நபர் ஒருவருக்கும் தொடர்புள்ளதா என விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சி.ஐ.டி. இன்று கோட்டை நீதிவான்  ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்தது. 

அத்துடன் கடந்த தவணையில் பிரதமர்  அலுவலக  அதிகாரி ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரி திறந்த மன்றில் கூறிய கூற்று  தொடர்பிலும் நீதிமன்றம் அவதானம் செலுத்தியது.

ஜனாதிபதியின் கையொப்பம் இடப்பட்ட போலி பத்திரமொன்றை  தயாரித்து மீள தனது வேலையைப் பெற முயற்சித்ததாக கூறப்படும் குருணாகல்,  யந்தம்பலாவ பகுதியைச் சேர்ந்த பிரசன்ன அருண குமார எனும் நபர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதன்போது சந்தேக நபர் மன்றில் ஆஜர் செய்யப்படவில்லை.

இந்நிலையில் மேலதிக விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பித்த  சி.ஐ.டி., மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக கூறியது.

இதன்போது சந்தேக நபர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி, கடந்த தவணையின் போது மன்றில் ஆஜரான விசாரணை அதிகாரி பிரதமர் அலுவலக உத்தியோகத்தர் ஒருவருக்கு இதனுடன் தொடர்புள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறியிருந்தார். எனினும் மறுநாள்அவ்வாறு எந்த தொடர்பும் இல்லை என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது. உண்மையில் அந்த விசாரணைகள் நிலை என்ன என கோரினார்.

இதற்கு பதிலளித்த இன்று மன்றில் ஆஜரான சி.ஐ.டி.யின்  அதிகாரி, தாம் அவ்வாறு பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் தொடர்பில் மன்றுக்கு அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

இதன்போது நீதிவான் ரங்க திஸாநாயக்க,  அவ்வாறு கூறாதீர்கள். பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக  கடந்த தவணையில் ஆஜரான விசாரணை அதிகாரி மன்றுக்கு கூறினார். எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது. நீங்கள் தவறுதலாக அதை கூறியிருந்தாலும், பிரதமர் அலுவலக  அதிகாரி ஒருவர் குறித்து விசாரிப்பதாக கூறினீர்கள். என்றார்.

இதன்போது குறித்த அதிகாரி, இந்த விவகாரத்துடன் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கும் தொடர்புள்ளதா என விசாரணை நடப்பதாக கூறினார்.

முன்னதாக இலங்கை வங்கியின் தலைமைகாரியாலயத்தின் முகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து  குறித்த நபர் கைது  செய்யப்பட்டிருந்தார்.

கடந்த மே மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில் இலங்கை வங்கியின் தலைவருக்கு கிடைக்கப் பெற்ற கடிதமொன்று தொடர்பிலே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் போது இலங்கை வங்கியிலிருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ள குறித்த நபரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு குறிப்பிட்டு தயாரிக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் ஜனாதிபதியின் கையொப்பத்திற்கு சமமான கையொப்பம் இடப்பட்டிருந்துள்ளதுடன் , அது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடித உரைக்கு சமமான உரையில் அடைக்கப்பட்டே அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்க டந்த 3 ஆம் திகதி  புதன்கிழமை இலங்கை வங்கியின் தலைவரை சந்திக்கும் முகமாக வருகைத்தந்திருந்த நபர்களுள் ஒருவரான சந்தேக நபரை அழைத்து விபரங்களை கேட்டபோது , அவர் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட கடிதத்தை போன்ற கடிதமொன்றை காண்பித்துள்ளார். இந்த கடிதம் தொடர்பில் சந்தேகம் எழுந்ததை அடுத்து வங்கி அதிகாரிகள் குறித்த சந்தேக நபரை மோசடி தடுப்புப்  பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்  மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர் தனது சொந்த மடிக்கணணி மூலமே குறித்த பத்திரங்களை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து குருணாகலையிலுள்ள சந்தேக நபரின்  வீட்டை சோதனைக்குட்படுத்திய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர்  மடிக்கணணி மற்றும் பென்ரைவ்  ஒன்றினையும்  மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயத்தில் இன்றும் சந்தேக நபருக்கு பிணை கோரப்பட்ட போதும் அதனை நிராகரித்த நீதிவான் அவரை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.