(நா.தனுஜா)


ஊடகவியலாளர் தரிஷா பாஸ்டியனின் மடிக்கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருப்பது ஊடக தர்மத்தின் மீது நிகழ்த்தப்படும் பாரிய அவதூறு எனக் குறிப்பிட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, அதிலிருந்து தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளிப்படுவது சாட்சியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கும் அவர்களுடன் சமரசங்களைச் செய்துகொள்வதற்கும் வாய்ப்பாக அமையலாம் என்றும் எச்சரித்திருக்கிறார்.சுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரத்தில் நீதிமன்றத் தேடுதல் உத்தரவிற்கு அமைவாக, சண்டே ஒப்சேவர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் ஊடகவியலாளருமான தரிஷா பாஸ்டியனின் நாரஹேன்பிட்டி வீட்டிலிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவரது மடிக்கணினி கைப்பற்றப்பட்டது. இதனைக் கண்டனம் செய்திருக்கும் மங்கள சமரவீர, இதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது:

கௌரவத்திற்குரிய ஊடகவியலாளரும், கோத்தபாய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து நாட்டிலிருந்து வெளியேறியவருமான தரிஷா பாஸ்டியனுக்கு எதிரான வேட்டை தங்கு தடையின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவருடைய மடிக்கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இது ஊடக தர்மத்தின் மீது இழைக்கப்படும் பாரிய அவதூறு என்பதுடன், தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளிப்படுத்தப்படுவதானது சாட்சியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கும் அவர்களுடன் சமரசங்களைச் செய்துகொள்வதற்கும் வாய்ப்பாகலாம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

அதேவேளை இதுகுறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், 'எமது ஜனநாயகத்தின் காவலராக ஊடகங்கள் விளங்குகின்றன. நாம் அதனைப் பாதுகாப்பது கட்டாயமானதாகும். அது முற்றுகையிடப்பட்டிருக்கும் நிலையில் நான் அதன் பக்கம் நிற்பதோடு, நாமனைவரும் அதன் பக்கம் கட்டாயமாக நிற்கவேண்டும்' என்று வலியுறுத்தியிருக்கிறார்.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக இதுபற்றிக் கூறியிருப்பதாவது:

குற்றப்புலனாய்வுப் பிரிவினால் சண்டே ஒப்சேவர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரின் மடிக்கணினி கைப்பற்றப்பட்டிருக்கிறது. அவர்கள் முதலில் சமூகவலைத்தள செயற்பாட்டாளரைக் கைது செய்தார்கள். தற்போது பிரதான போக்கு துறைசார் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த அரசாங்கம் ஜனநாயகத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரான ஒரு வைரஸாக மாறிவருகிறது. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.