கழுத்தைச் சுற்றிய பாம்பைப் போல கொரோனா விவகாரம் ஆட்டிப்படைத்து வருகின்றது. இதேவேளை சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் அதிகமானவர்கள் செயற்பட்டு வருவதாகவும் இதனால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் இந்நோய் வேகமாக பரவி வருவதால் , இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று தாக்கம் குறைவடைந்து வரும் நிலையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இருந்த போதிலும் அவர்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிவிடுகின்றனர். 

முகக்கவசங்களை பயன்படுத்திவிட்டு ஆங்காங்கே வீசிச் செல்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது. எமது அயல் நாடான இந்தியாவில் கொரோனா நோய் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவிலிருந்து கடற்றொழிலாளர்கள் படகுகள் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்கின்றனர்.

இதனால் கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளது என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதேவேளை அனுராதபுரம் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில்  கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பெண் ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் முழுமையாக கொரோனா தொற்று நீக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் கொரோனா தொற்றை மறந்து செயல்படுவதே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டிருந்தார் .

இதனிடையே உலகளாவிய ரீதியில் கடந்த இரு வாரங்களாக தினமும் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வைரஸ் மறு எழுச்சி பெறலாம் என்பதால் உலக நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக உலகில் இதுவரை  4 லட்சத்து 38 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இது ஒருபுறமிருக்க நமது அயல் நாடான இந்தியாவிலும் வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் சென்னை வாசிகள் பலர் தமது குடும்ப சகிதம் கிராமங்களை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு நாட்டுமக்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் அலட்சியம் காட்டாது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.