(நா.தனுஜா)

நாட்டில் கடந்த 7 மாதகாலத்தில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய சுமார் 44,000 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய குற்றங்களைக் குறைப்பதற்கு, உரிய சட்டதிட்டங்களின் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவருகின்றோம். சட்டங்களை இறுக்கமாக்குவதன் ஊடாக போதைப்பொருட்களற்ற ஒரு இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும் என்று பிரதி பொலிஸ்மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சைபர் இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய குற்றங்களை விசாரிப்பதற்குரிய பொறுப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கே இருக்கிறது. அந்தவகையில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் கணினியுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை ஆராய்வதற்கு தற்போது சகல நவீன வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி இவைகுறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நன்கு பயிற்றப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஆரம்பத்தில் கொழும்பில் மாத்திரமே சைபர் இணையவழிக் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்கக்கூடிய வசதி காணப்பட்டது. தற்போது அதற்கு மேலதிகமாக பலாங்கொடையிலும், மாத்தளையிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் இரண்டு கிளைகள் உருவாக்கப்பட்டிருப்பதுடன், அங்கும் இதுபற்றிய முறைப்பாடுகளைச் செய்யமுடியும். இவற்றுக்கு மேலாக கணினியுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் பற்றிய சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கும் திட்டமிட்டிருக்கின்றோம்.

அடுத்ததாக போதைப்பொருள் குற்றங்களைப் பொறுத்தவரையில் கடந்த 7 மாதகாலத்தில் ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்செயல்களின் ஈடுபட்ட சுமார் 44,000 பேரைக் கைது செய்திருக்கின்றோம். அதேபோன்று சுமார் 8000 கிலோகிராம் பெறுமதியான ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இத்தகைய குற்றச்செயல்கள் சிறைச்சாலைகளுக்குள் நடைபெறுகின்றன.

இலங்கையில் 1929 ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதைப்பொருள் தொடர்பான சட்டமே தற்போதும் நடைமுறையில் இருக்கின்றது. எனினும் 1984 ஆம் ஆண்டில் இச்சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மிகமுக்கிய திருத்தத்தின் ஊடாகவே போதைப்பொருள் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை வழங்கக்கூடிய நிலையேற்பட்டது. எனவே தற்போது அச்சட்டத்தில் மேலும் இறுக்கமான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றோம்.

மேலும் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிட வரும்போது குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய பொருட்கள் பரிமாறப்படும் வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளன. எனவே இவ்வாறு சிறைக்கைதிகளை பார்வையிடுவது தொடர்பிலும் வரையறைகளை இறுக்கமாக்குவது பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. அவற்றின் ஊடாக போதைப்பொருளற்ற நாடொன்றாக இலங்கையை மாற்றியமைப்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்றார்.