(செ.தேன்மொழி)

ஐக்கிய தேசிய கட்சி மனோகணேசன் , ரிஷாத் பதியுர்தீன் மற்றும் ரவூப் ஹக்கீமை அரசியலில் வளர்த்து விட்டது. அதனை மறந்து சம்பிக்க என்ற இனவாத கூடத்தில் இணைந்து  செயற்பட்டு வருகின்றார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சன் குகவரதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொழும்பு மாவட்டம் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாகும். இம்முறை பொதுத் தேர்தலின் போதும் ஐ.தே.க. அதனை தக்கவைத்துக் கொள்ளும்.

சிறுபான்மை மக்கள் தொடர்பில் உண்மையான அக்கறையுடன் செயற்பட்டு வரும் ஐ.தே.க. பலதடவை அதனை உறுதிப்படுத்தியும் உள்ளது.

முன்னாள் அமைச்சர்களான மனோகணேஷன் , ரிஷாத் பதியுர்தீன் , ரவூப் ஹக்கீம் ஆகியோரை அரசியல் வாழ்கையில் வளர்த்துவிட்டது ஐ.தே.க.தான். அவர்கள் இன்று இதனை மறந்து செயற்பட்டு வருகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின்போது மனோகணேஷன் அமைச்சராக பதவி வகித்தார். இதன்போது வத்தளை மற்றும் மத்துகம ஆகிய பிரதேசங்களில் தமிழ் பாடசாலைகளை அமைத்துக் கொடுப்பதாக உறுதியளித்திருந்த போதிலும் அது எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. ஐ.தே.க. வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தூரநோக்கு சிந்தனையுடன் செயற்படுபவர். உபதலைவர் ரவி கருணாயக்க சிறுபான்மை மக்களின் நலன் தொடர்பில் அக்கறையுடன் செயற்படுபவர்.

இந்நிலையில் சிறுபான்மை மக்கள் தொடர்பில் ஐ.தே.க.வே எப்போதும் அக்கறையுடன் செயற்படும். யார் கட்சியை விட்டு  விலகினாலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு கோட்டையை ஐ.தே.க.வே வெற்றிக் கொள்ளும்.  சம்பிக்க என்ற இனவாத கூடத்திலே உறுப்புரிமை பெற்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வரும் மனோ கணேஷன் இம்முறை படுந்தோல்வியடைவார்.