(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிபதிகளை உள்ளக பொறிமுறையை உள்ளீர்க்கும் விடயத்தில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. எனவே அரசாங்கம் உள்ள விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கி நீதி வழங்கும் என ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என ஜெனிவாவில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள், புலம்பெயர் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலதரப்பட்டோரும் வலியுறுத்தினர். 

ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நேற்று  நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உப குழுக்கூட்டத்திலேயே இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

இந்த உப குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாமர் பொன்னம்பலம் உரையாற்றுகையில், 

ஜெனிவாவில் கடந்த வருடம் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் சர்வதேச பொதுநலவாய நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் இடம்பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால் இலங்கை அரசாங்கமானது சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்க மாட்டோம் என கூறிவருகிறது. 

இந் நி்லையில் ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் இந்த விடயத்தில் என்ன செய்யப் போகிறது ? அதாவது ஜெனிவாவில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக நிறைவேற்றுமாறு அரசாங்கத்திற்கு ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் அழுத்தம் பிரயோகிக்க  வேண்டும். 

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியானது சர்வதேச நீதிபதிகளுடன் கூடிய பொறிமுறையிலேயே உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழில் தேசிய கீதத்தை பாடிய பின்னர் வடமாகாண முதலமைச்சர் விகாரைக்கு செல்வதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றார். 

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உரையாற்றுகையில், 

சர்வதேச நீதிபதிகள் உள்ளக பொறிமுறையில் பங்கேற்பதை நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பின்றி தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை. எனவே இந்த விடயத்தை சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றார். 

புலம்பெயர் ஊடவியலாளர் கே.வி. ரட்ணம் என்பவர் உரையாற்றுகையில்,

சர்வதேச நீதிபதிகளின்றி நீதியான  விசாரணையை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. எனவே ஐக்கிய நாடுகள் சபை பிரேரணையின் முழுமையான அமுலாக்கத்திற்கு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.