கொழும்பு, (சின்ஹூவா); கொவிட் -19 தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மார்ச் மாதம் 20 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இலங்கை அரசாங்கம் ஊரடங்கை அறிவித்த போது இலங்கை - சீனா சங்கத்தின் (Srilanka - China society (SLCS)) பதில் தலைவர் ஜினித் டி சில்வா இலங்கைக்கு உதவியை பெற்றுக் கொடுப்பதில் சீனாவுடனான தனது தொடர்புகளைப் பயன்படுத்துவதில் தீவிர ஆர்வம் காட்டினார்.

'வைரஸை எதிர்த்து போராட எமக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து சீனாவிலுள்ள பல்வேறு அமைப்புகளுக்கு நான் கடிதங்களை எழுதினேன். நான் ஜிங்கில் உள்ள நட்புறவு மன்றம் (Amity Foundation) வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்களின் சங்கம் ஆகியவை உட்பட 16 அமைப்புக்கள் பெருந்தன்மையுடன் பதிலளித்தன' என்று டி சில்வா பெருமிதத்துடன் கூறினார்.

அந்த அமைப்புகளின் அன்பளிப்புகள் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்திலும் ஷங்காயிலும் குவாங்ஷூவிலும் உள்ள இலங்கையின் துணை தூதரகங்களிலும் கையளிக்கப்பட்டன. அவற்றின் பெறுமதி 126,564 அமெரிக்க டொலர்களாகும். 308,600 முகக்கவசங்கள் , 1600 பாதுகாப்பு கண்ணாடிகள் மற்றும் 400 பாதுகாப்பு அங்கிகள் உட்பட வேறு பல பொருட்களும் அந்த அன்பளிப்புகளில் உள்ளடங்குகின்றன.

ஒவ்வொரு சீன நண்பரும் உடனடியாகவே உதவி செய்ய முன்வந்ததைக் கண்டு நான் பரவசப்பட்டுப் போனேன். சில சீன வெளிநாட்டு நட்புறவு அமைப்புகள் உறுதியளித்ததையும் விட கூடுதலான உதவிகளை அனுப்பிவைத்தன. சில அமைப்புகள் இரண்டு மடங்கு உதவிகளை அனுப்பி வைத்தன என்றும் டி சில்வா குறிப்பிட்டார்.

இந்த சீன அன்பளிப்புகளுக்கு இலங்கை சுகாதார அமைச்சிடமிருந்தும் , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடமிருந்தும் பெரும் பாராட்டு கிடைத்தது. அன்பளிப்புகளை வழங்குவதில் ஒருங்கிணைந்து செயற்பட்டமைக்காக இலங்கை - சீன சங்கத்துக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து அவர் டுவிட்டர் பதிவு ஒன்றையும் செய்திருந்தார்.

சீனாவிலுள்ள நட்புறவு அமைப்புகளுக்கும் இலங்கை - சீன சங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இரு நாடுகளினதும் மக்களுக்கிடையிலான தொடர்பை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் நாளிலிருந்து டி சில்வா கடுமையாக பாடுப்பட்டுக் கொண்டிருந்தார். கடந்த சில வருடங்களாக இலங்கை - சீன சங்கம் சீனாவின் பல்வேறு அமைப்புக்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளது.

'ஒரு அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்ற வகையில் தொற்று நோய்க்கு எதிராக போராடுவதில் இலங்கை எதிர்நோக்குகின்ற மிகப் பெரிய இடர்நிலைக்கு போதுமான அளவு மருத்துவ வளங்கள் இல்லாமையே காரணமாகும்.நாங்கள் சீன அமைப்புக்களிடம் கேட்ட அன்பளிப்புகளை விசாரித்து அறிந்துக் கொள்வதே நான் ஒவ்வொரு நாளும் காலையில் செய்யும் முதல் காரியமாகும்'என்று டி சில்வா கூறினார்.

சீனாவின் அரசாங்கத்தையும் மக்களையும் நெருக்கடிகளின் போது பெருமளவு உதவிகளை செய்கின்ற எல்லாக் காலத்துக்குமான நண்பர்களாக டி சில்வா மதிக்கிறார். கொரோனா வைரஸ் பரவலை இலங்கையில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் சீன அரசாங்கத்திடம் இருந்தும் சீனாவின் தனியார் கம்பனிகள் மற்றும் தனிநபர்களிடமிருந்தும் வருகின்ற அன்பளிப்புகள் முக்கியமானவையாக இருக்கின்றன என்று அவர் கூறினார்.

'தற்போது இலங்கையில் நிலைவரம் மேம்பட்டு இருக்கின்றது. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது. ஊரடங்கு காலக்கட்டத்தை நாம் வீணாக விரயம் செய்துக் கொள்ளவில்லை என்பது குறித்தும் ஊரடங்குக்கு மத்தியிலும் சீனாவிலிருந்து தொற்றுநோய் தடுப்பு பொருட்களை விரைவாக எம்மால் பெறக்கூடியதாக இருந்தமை குறித்தும் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் டி சில்வா சிங்குவாவுக்கு தெரிவித்தார்.

இலங்கை - சீன சங்கத்தின் உறுப்பினர்கள் கொரோனா வைரஸூக்கு எதிரான சீனாவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதாதைகளுடன் கொழும்பில் ஒன்றுக்கூடி படத்தில் நிற்பதை காண்கிறீர்கள்.