(எம்.மனோசித்ரா)

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் செயற்படுகின்ற அனைத்து தேசிய பூங்காக்களையும் இன்று திங்கட்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய இன்று முதல் தேசிய பூங்காக்களுக்கு பொது மக்கள் வருகை தர முடியும் என்று வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.சி.சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தோடு இன்று முதல் மிருக காட்சிசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 தொற்று காரணமாக சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் இவை திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா கட்டுப்படுத்தல் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய இவை நடத்திச் செல்லப்பட வேண்டும் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாலா , வில்பத்து , உடவளவ , மின்னேரியா , கவுடுல்ல , ஹோட்டன் உள்ளிட்டவையும் ஏனைய சுற்றுலாத்தளங்களையும் பகல் வேலையில் மாத்திரம் (காலை முதல் மாலை வரை மாத்திரம் ) பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளன.

இதன் போது சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பி.சி.சூரிய பண்டார மேலும் தெரிவித்தார்.