இலங்கை மத்திய வங்கியானது இம்மாதம் 12 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் ஒரு பில்லியன் ரூபா மதிப்புள்ள நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது.

அவ்வாறு இதுவரையில் 242.57 பில்லியன் ரூபா பணத்தை மத்திய வங்கி அச்சிட்டிருக்கிறது.


அதேபோன்று வங்கித்துறையைப் பொறுத்தமட்டில் ஒரே இரவில் பணப்புழக்கமானது 21.42 பில்லியன் ரூபா குறைந்து 88.19 பில்லியன் ரூபாவாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மத்திய வங்கியின் நிதியிருப்பின் அளவு குறைவடைந்திருக்கிறது.

குறிப்பாக வர்த்தக வங்கிகளால் மத்திய வங்கியுடன் மேற்கொள்ளப்படும் நிதிக்கொடுக்கல் வாங்கல்களைப் பொறுத்தவரை வைப்புச் செய்யும் நிதியினளவில் வீழ்ச்சியொன்று ஏற்பட்டிருக்கிறது.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைத் தொடர்ந்து உலகலாவிய ரீதியில் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்திக்கும் நிலையொன்று ஏற்பட்டது. நாட்டின் பொருளாதாரத்திலும் இது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியதுடன், நிதியிருப்பில் வீழ்ச்சியேற்படுவதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது.