(நேர்காணல்:- ஆர்.ராம்)

தென்னிலங்கையில் வாக்குகளை அபகரித்துக்கொள்ளவே சில தரப்பினரால் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருக்கும் தமிழரான என்மீது திட்டமிட்ட வகையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் என்ற சாயம் பூசப்படுகின்றது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர்.ரட்ண ஜீவன் ஹுல் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- தேர்தலை நடத்துவதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுகாதாரத்துறையின் உறுதிப்பாடுகள் எவ்வாறுள்ளன?

பதில்:- உலக சுகாதார நிறுவனத்தினைப் பொறுத்தவரையில் தேர்தலை நடத்துவதற்கு அவர்கள் எதிரான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தவில்லை. ஆனால் மிகவும் கவனமான பாதுகாப்பு பின்பற்றல்கள் அவசியமென்றே கூறியிருந்தார்கள்.

உள்நாட்டு சுகாதார தரப்பினரைப் பொறுத்தவரையில் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் தேர்தலை நடத்துவதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லையென்றே கூறுகின்றார்கள். ஆனால் பக்கச்சார்பற்ற தரப்பினர் உலக சுகாதார நிறுவனம் கூறியதைப்போன்றே கொரோனா பரவலின் ஆபத்துக்களை உதாரணங்காட்டி மிகக் கவனமான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

உண்மையிலேயே கொரோனா வைரஸ் பரவலானது ஐந்து படிநிலைகளைக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஆகவே ஒருபடிநிலையிலிருந்து இன்னொருபடிநிலைக்கு செல்வதற்கு தேர்தல் வித்திட்டுவிடக்கூடாது என்பதே சுகாதார தரப்பினரின் கரிசனையாகவுள்ளது.

கேள்வி:- பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பின்போது எவ்விதமான சவால்கள் உருவாகலாம் என்று கருகின்றீர்கள்?

பதில்:- முதலாவது ஒத்திகை நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்த ஒத்திகைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். முதலாவது ஒத்திகையின் அடிப்படையில் பார்க்கையில் வாக்களர்களிடையே சமூக இடைவெளிகளைப் பேணுதல், கைகழுவுதல், அவர்களின் விபரங்களை பரிசோதனைக்கு உட்படுத்தல், வாக்களிப்பு நிறைவடைந்து வாக்கெண்ணுதல் ஆகிய அனைத்துச் செயற்பாடுகளுமே சவால் மிக்கவையாகவே உள்ளன.

இதனைவிடவும் இதற்கான செலவீனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் தேர்தலுக்கான செலவீனம் 7ஆயிரம் மில்லியன்களாக இருந்த நிலையில் அது இரண்டு மடங்காகலாம் என்று கருதினோம். இருப்பினும் சுகாதார அமைச்சு சவர்க்காரம், கைசுத்திகரிப்பு திரவகம், கையுறுகைள் போன்றவற்றை வழங்குவதால் தற்போது தேர்தல்செலவீனம் 9ஆயிரம் மில்லியன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைவிடவும் குறிப்பிட்ட காலத்திற்குள் வாக்கெடுப்பை நிறைவுசெய்வதும் வாக்கெண்ணுவதும் மிகச்சவாலான விடயமாகின்றது. ஆனால் இவை அனைத்துமே தீர்க்க கூடிய பிரச்சினைகளாக உள்ளன. ஆனால் தீர்வே காணமுடியாத பிரச்சினைகளும் இருக்கின்றன

கேள்வி:- கொரோனா பாதுகாப்பு நெறிகளை கடைப்பிடிப்பதால் வழமையாக வாக்களிப்புக்கு வழங்கப்படும் காலம் போதுமானதாகுமா?

பதில்:- அதில் பிரச்சினைகள் உள்ளன. 200பேரை மையப்படுத்திய கடந்த ஒத்திகையின்போது வாக்களிப்பு நிலையத்தின் அளவு பெரிதாக இருந்தமையால் நிமிடத்திற்கு இரண்டு முதல் மூன்று பேர் வரையில் வாக்களிக்க முடிந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் அனைத்து வாக்களிப்பு நிலையங்களும் அவ்வாறான அளவினைக் கொண்டிருக்காதல்லவா? ஆகவே தான் வழமையான வாக்களிப்பு நிலையங்களுக்கு ஒத்தவகையிலான நிலையங்களை அமைத்து அடுத்து வரவுள்ள ஒத்திகைகளை மேற்கொள்ளவுள்ளோம். அதன்போதே வாக்களிப்புக்கான காலம் தொடர்பான பிரச்சினைக்கு பதிலளிக்கலாம்.

கேள்வி:- ஒருவேளை வாக்களிப்புக்கான காலம் மேலதிகமாக தேவைப்படுகின்றது என்ற நிலைமை ஏற்பட்டால் என்னசெய்வதாக உத்தேசித்துள்ளீர்கள்?

பதில்:- இந்தவினாவுக்கு எனக்கு பதிலளிக்கமுடியாது. காரணம், தேர்தல்கள் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக இரண்டு நாட்களில் வாக்கெடுப்பை நடாத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை.

அதுபோன்று தபால் மூல வாக்களிப்பிற்கு வேறு சில தரப்பினரையும் உள்ளீர்ப்பதற்கும் சட்டத்திலேயே மாற்றங்களை செய்ய வேண்டும். அவ்வாறான சட்ட ஏற்பாடுகளை செய்வதாக இருந்தால் பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். இதுபோன்று சில தேர்தல் சட்ட திருத்தங்களை மேற்கொண்டால் நியாயமான தேர்தலொன்று உறுதிப்படுத்தப்படும். இத்தகைய நல்லகாரியங்களை எதிர்க்கட்சியினர் எதிர்க்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து ஜனாதிபதியே தீர்மானங்களை எடுக்க வேண்டும். எவ்வாறாயினும் தற்போது காலம் கடந்தாகிவிட்டது.

கேள்வி:- தீர்வு காணமுடியாத சில பிரச்சினைகள் இருப்பதாக கூறியுள்ளீர்களே அவற்றுடன் எவ்வாறு தேர்தலை நடத்தப்போகின்றீர்கள்?

பதில்:- கொரோனாவால் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுத்து தேர்தலை நடத்தும் இயலுமை ஆணைக்குழுவிற்கு இருக்கின்றபோதும், தேர்தலை நேர்மையாக நடத்துவதில் தான் பிரச்சினைகள்

காணப்படுகின்றன. குறிப்பாக கூறுவதானால், அங்கஜன் இராமநாதன், தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் ஆணைக்குழுவினை அச்சுறுத்துகின்றனர். அவர்கள் தேர்தல்கள் சட்டங்களை மீறுகின்றபோது ஆணைக்குழு அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். அவற்றை சுட்டிக்காட்ட விளைகின்றபோது அவர்கள் எமக்கு எதிராக சேறுபூச விளைகின்றார்கள். அதுமட்டுமன்றி தங்களுடைய குற்றங்களை வெளிப்படுத்தினால் பதவியிலிருந்து அகற்றுவோம் என்றும் கூறுகின்றார்கள். தவிசாளருடன் நேரடியாக மோத முடியாததன் காரணத்தினால் என்னை அச்சுறுத்தி ஆணைக்குழுவை ஒடுக்குவதற்கு முனைகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் நீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கு பெரும் சவாலாக இருக்கின்றது. எம்மைப்பொறுத்தவரையில் தேர்தல் சட்டங்களை மீறும் அனைவரையும் வெளிப்படுத்துவோம். அதில் பின்னிற்கப்போவதில்லை.

கேள்வி:- நீங்கள் பக்கச்சார்பாக செயற்படுவதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் விமல் வீரவன்ச, தயாசிறி ஜெயசேகர என்று குற்றம் சாட்டுபவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு செல்கின்றதே?

பதில்:- அவர்களின் விருப்புக்கு ஏற்றவாறு செயற்படவில்லை என்பதனால் ஏற்பட்டுள்ள ஆதங்கங்களின் வெளிப்பாடே அவை. அவர்கள் போடும் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு “சலாம்” போட்டால் நான் நடுநிலையான ஆணைக்குழு உறுப்பினர் என்று கௌரவிக்கப்பட்டிருப்பேன். என்னால் மனச்சாட்சிக்கு, சட்டத்திற்கு மாறாக செயற்பட முடியாது.

கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் “பெரிய பிசாசைவிடவும் சிறிய பிசாசு மேலானது” என்று கூறியது முதல் அண்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நீங்கள் வழங்கிய நேர்காணலில் வெளிப்படுத்திய கருத்துக்கள் வரையில் குறிப்பிட்ட அரசியல் குழுவொன்றை இலக்கு வைத்ததாகவே இருக்கின்றதல்லவா?

பதில்:- அப்படியில்லை. இரண்டு பிரதான தரப்பினருடன் ஒப்பிடுகையில் ஒருதரப்பினர் சட்டத்தினை அதிகளவில் மீறுகின்றார்கள். அதனால் தான் அவர்கள் மீது அதிகளவு குற்றச்சாட்டுக்கள் ஏற்படுகின்றன. இந்த விடயத்தில் நான் என்ன செய்வது. ஒருதரப்பினர் தொடர்ச்சியாக சட்டங்களை மீறும் போது சுட்டிக்காட்டாது, கேள்விகளைக் தொடுக்காது கைகட்டி வேடிக்கை பார்க்குமாறு கூறுகின்றார்களா? நான் தனியொரு தரப்பினரை மட்டும் அவ்வாறு குற்றம்சாட்டவில்லை. சட்டமீறல்களைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தொடர்பில் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றேன். முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், விநாயாக மூர்த்தி முரளிதரன் போன்றவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை செய்துள்ளேன்.

கிளிநொச்சியில் தமிழரசுக்கட்சியின் கிளையானது சட்டத்திற்கு மீறி அமைக்கப்பட்டிருந்தபோது நானே அதனைப் புகைப்படம் பிடித்து ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன். இப்படியான எனது செயற்பாடுகளை மறைத்து வெறுமனே தமக்கு எதிராக செயற்படுவது போன்று சித்திரிக்கின்றார்கள்.

அண்மையில் யாழ்.மேயர் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராகிய பின்னர் அவர் மேயருக்குரிய அதிகாரங்களை பயன்படுத்துவது தேர்தல்கள் சட்டமீறலாக அமையும் என்பதை அவரை நேரடியாக அழைத்து கூறினேன். அதனையடுத்து அவர் பொறுப்புக்களை முறையாக ஒப்படைத்துவிட்டார். இவ்வாறு சுட்டிக்காட்டப்படுகின்றபோது தேர்தல்கள் சட்டங்களை ஏற்று கடைப்பிடித்தால் பிரச்சினைகளே எழாது.

கேள்வி:- தொலைக்காட்சி நேர்காணலில் ஒருதரப்பினரை கடுமையாக விமர்சித்து அவர்களுக்கு வாக்களிக்க கூடாது என்று கோரியதாக உங்கள் மீது குற்றச்சஞ்சாட்டப்படுகின்றதே?

பதில்:- தொலைக்காட்சியில் நான் தெரிவித்த கருத்துக்களை திரிவுபடுத்தி பத்திரிகையொன்றுதிட்டமிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையிலேயே மார்ச்-12 இயக்கத்தின் கூட்டமொன்றுக்குதவிசாளர் உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சென்றிருந்தோம். அதன்போது தேர்தலில்வாக்களிக்கப்படும்போது வேட்பாளர்களின் குணாம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

அதனை அடியொற்றித்தான் நான் கருத்துக்களை வெளியிட்டிருந்தேன். தற்போது கூட சட்டங்களை மீறுபவர்கள், ஜனநாயக விரோதிகள், பொய்யுரைப்பவர்கள், ஏமாற்றுபவர்கள், மோசடிக்காரர்கள், மதுபானநிலையங்கள் உட்பட சட்டவிரோத வியாபாரங்களைக் செய்பவர்கள் ஆகியோருக்கு பொதுமக்கள் வாக்களிக்க கூடாது. அவர்களை தமது பிரதிநிதிகளாக அங்கீகரிக்க கூடாது என்றே கூறுவேன். அவ்வாறு கூறுவதில் என்ன தவறுள்ளது. நல்லலொதொரு பிரதிநிதிகளைக் கொண்ட ஒழுக்கமான அரசியல் கலாசாரம் உருவாக வேண்டுமல்லவா.

கேள்வி:- சரிபிழை என்பதற்கு அப்பால் பொதுவெளியில் உங்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மையை கேள்விக்குள்ளாக்குவதோடு பொதுமக்கள் மத்தியிலும் மாறுபட்ட எண்ணப்பாட்டை உருவாக்கின்றதல்வா?

பதில்:- முதலாவதாக 19ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக தற்போதுள்ளவர்களுக்கு மாறுபட்ட நிலைப்பாடு காணப்படுகின்றது என்பதை அனைவரும் அறிவார்கள். அதேநேரம், 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டபோது பாராளுமன்றில் சபாநாயகராக இருந்தவர் சமல்ராஜபக்ஷ. அதுமட்டுமன்றி ஒருவரைத்தவிர அனைவரும் அதனை ஆதரித்திருந்தார்கள். இப்போது மாறுபட்ட நிலையில் இருந்துகொண்டு மக்கள் மத்தியில் தவறான கருத்துருவாக்கத்தினைச் செய்கின்றார்கள். மக்களை ஏமாற்றுவதற்கே விளைகின்றார்கள்.

அத்துடன் ஆணைக்குழுவின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்காக தமிழராக இருக்கும் என்னைபயன்படுத்த முனைகின்றார்கள். ஆணைக்குழு சுயாதீனமாக இருப்பதால் தான் அதன் மீது சில தரப்பினருக்கு கடுமையான வெறுப்புணர்வு ஏற்படுகின்றது. இதனாலேயே என்போன்றவர்கள் மீது பொய் குற்சற்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி என்னை விடுதலைப்பு புலிகளுடன் தொடர்புபடுத்தியும் கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள். நான் புலிகளுக்காக நிதிசேகரித்ததாக கூறி தற்போது பிரசாரங்களை மேற்கொள்கின்றர்கள். தென்னிலங்கை மக்களை ஏமாற்றி தாம் வாக்குகளைப் பெறுவதற்காகவே என்னை புலிகளுடன் தொடர்பு படுத்தியுள்ளார்கள். உண்மையில் புலிகளுக்கும் எனக்கும் எவ்வாறான உறவிருந்தது என்பதை தமிழ் மக்களே அறிவார்கள். தென்னிலங்கை மக்களுக்கு அந்த உண்மை தெரியாது.

கேள்வி:- விடுதலைப் புலிகளுக்கும் உங்களுக்கும் பிரச்சினையேற்பட என்ன காரணம்?

பதில்:- ‘முறிந்த பனைகள்’ நூலை எனது சகோதரரே எழுதியிருந்தார். நான் வெளிநாட்டில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அதனை அச்சிடும் பணிகளை முன்னெடுத்திருந்தேன். பின்னர் 1995ஆம் ஆண்டு நாடுதிரும்பி மனித உரிமைவிடயங்கள் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈபட்டிருந்தேன். 2006ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் நியமனம் பெற்றேன்.

அதனையடுத்து சொற்பகாலத்தில் பதவி விலகுமாறு நெருக்கடிகள் ஏற்படவும் பதவி விலகினேன். .பி.ஆர்.எல்.எப்.இற்கு கொள்கலன்களில் ஆயுதங்களை நானே அனுப்பியதாக என்மீதுபுலிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். ஆயுதத்திற்கும் எனக்கும் வெகுதூரமாக இருந்தாலும்புலிகள் அவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அழுத்தங்களை பிரயோகித்தமையால் நாட்டை விட்டு வெளியேறியிருந்தேன். அப்படியான என்மீது தான் தற்போது புலிச்சாயம் பூச விளைகின்றார்கள்.

கேள்வி:-தேர்தல் பிரசாரங்களுக்கான நெறிகளை வெளியிட்டுள்ள போதும் அது நடைமுறைச்சாத்தியமாகுமெனக் கருதுகின்றீர்களா?

பதில்:- அதில்தான் நெருக்கடிகள் இருக்கின்றன. பிரசாரக் கூட்டமொன்றுக்கு ஆகக்கூடுதலாக நூறுபேர் வரையில் தான் அழைக்கமுடியும் என்று கூறியிருக்கின்றோம். இதுசட்டமல்ல. ஆகவே இதனை மேற்பார்வை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டியது பொலிஸாருக்குரிய கடமையாகின்றது. எனினும், ஆளும் தரப்பினர் நெறிமுறைகளை மீறும்போது பொலிஸார் எதனையும் செய்வதில்லை என்பதை அனுபவ ரீதியாக கண்டிருக்கின்றோம்.

ஆகவே தனிமைப்படுத்தலுக்கான தொற்றுநோயாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளையும் தண்டனைக்குரிய குற்றமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். இதனை அமைச்சரின் அதிகாரத்திற்கு உட்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மேற்கொள்ள முடியும்.

கேள்வி:- உங்களுக்கு எதிராக ஆணைக்குழுவின் தவிசாளர் அரசியலமைப்புச்சபையில் முறைப்பாடு செய்யப்போவதாக கூறியிருந்தாரே?

பதில்:- அந்த செய்தி புனையப்பட்டதொன்று. அதுகுறித்து ஆணைக்குழு மறுத்துரைத்துள்ளது.

கேள்வி:- ஆணைக்குழுவின் தவிசாளருக்கும் உங்களுக்குமிடையிலான முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டீர்களா?

பதில்:- முரண்பாடுகள் பகைமை ரீதியானவை அல்ல. கருத்தியல் ரீதியானது. வாதப்பிரதிவாதங்கள் ஊடாக அவை நிறைவுக்கு வந்துவிடும். அவர் இயல்பாகவே சிறந்த மனிதர்.

கேள்வி:- தேர்தலின் பின்னரும் ஆணைக்குழுவின் உறுப்பினராக தொடர்வீர்களா?

பதில்:- ஆம், பதவிக்காலம் நிறைவடையும் வரையில் தொடர்வேன். இடையில் விலகி வெளியேறும் எண்ணமில்லை.

கேள்வி:- மீண்டும் ஆணைக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:- அவ்வாறு வழங்கப்படாது.அவ்வாறு வழங்கப்பட்டாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்தப்பதவியில் இருப்பால் எனது குடும்பத்தவர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி விசமத்தமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் எனக்கும், குடும்பத்தாருக்கும் தொடர்ந்தும் இப்பதவியில் நீடிக்க விரும்பில்லை.

கேள்வி:- நீங்கள் தேசியக் கட்சியொன்றின் தேசியப்பட்டியல் ஊடாக அரசியலுக்குள் பிரவேசிக்கவுள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்:- நான் ஏற்கனவே கூறியதைப்போன்று தென்னிலங்கை மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்கு வேறெந்தவிடமும் இல்லாததன் காரணத்தால் என்னை தேர்தல் பிரசார பொருளாக பயன்படுத்துகின்றார்கள். அவர்களே இத்தகைய கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்றார்கள். நான் இரட்டைக் குடியுரிமை கொண்டவொரு நபர்.

கேள்வி:- மக்கள் சேவைக்காக இரட்டைக்குடியுரிமையை நீக்க மாட்டீர்களா?

பதில்:- தற்போதே அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் எனக்கு இந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டால் புகலிடமொன்று தேவையல்லவா. ஆகவே அமெரிக்க குடியுரிமையை நீக்கவே மாட்டேன்.