(எம்.ஆர்.எம்.வஸீம்)

வேட்பாளர்கள் திசைமாறிச்சென்றாலும் ஆதரவாளர்கள் எம்முடனே இருக்கின்றனர். அதனால்  எமது அணிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இவ்வாறான நிலைமைகள் இடம்பெறுவது சாதாரண விடயம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய  அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் சிலர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக எடுத்த தீர்மனம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கென எமது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்த ஒரு சிலர் தற்போது தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அவர்கள் இவ்வாறு வாபஸ் பெற்றுக்காெண்டதன் உண்மையான காரணம் எமக்கு தெரியாது.  என்றாலும் அவர்கள் அதுதொடர்பில் எமக்கு அறிவித்திருக்கின்றனர்.

சிலவேளை, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்கலாம். எவ்வாறு இருந்தாலும் தேர்தல்களின்போது வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகுவது புதிய விடயமல்ல. வேட்பாளர்கள் இவ்வாறு திசைமாறிச்சென்றாலும்  எமது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் எம்முடன் இருக்கின்றனர். அதனால் இவர்களின் விலகல் காரணமாக எமது அணிக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில்  மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த மங்கள சமரவீர, இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட இருந்த முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க மற்றும்  காலி மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெனட் பனியந்துவ ஆகியோர்  தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.