இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாக இருந்தபோதிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக பலதரப்பட்ட நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஆளாகி வருவது சகலரும் அறிந்த விடயமாகும்.

இதேவேளை, சிறுபான்மை மக்களின் மத சுதந்திரத்தை மீறும் வகையிலும் அதை மலினப்படுத்தும் வகையிலும் அவ்வப்போது காரியங்கள் தொடர்ந்து வருகின்றன. 

இந்நிலையில் அவர்கள் வேறு வழியின்றி சர்வதேச சமூகமே தமக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில்  சர்வதேச சமூகம் இலங்கை விவகாரங்களில் மூக்கை நுழைப்பதாக அவ்வப்போது இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, சிறுபான்மையின மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் இலங்கை அரசாங்கத்தால்  பாகுபாடு காண்பிக்கப்படுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மதச்சுதந்திரம் தொடர்பான அறிக்கையிலேயே அமெரிக்க இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரசாங்கம் சிறுபான்மையின மக்கள் மீதான திட்டமிடப்பட்ட பாகுபாட்டைக் காண்பிப்பதாக, சிறுபான்மையின மதக்குழுக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறியிருப்பதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

சிறுபான்மையின மக்கள் மீது மதரீதியாக முடுக்கிவிடப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், அரச அதிகாரிகளோ அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்களோ அக்கறை காண்பிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுபான்மையினத்தவர் மற்றும் அவர்களது மதவழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கு, பாதுகாப்பு தரப்புக்கள் முயற்சிகளை மேற்கொள்வில்லை என்று சிவில் சமூக அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுள்ளது.

சிறுபான்மையினத்தவரையும், மதச்சுதந்திரத்தையும் பாதுகாக்குமாறு அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள் என்றும் அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டேனும்  அரசு அனைத்து மக்களையும் அரவணைத்து செல்வது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட  விரும்புகிறோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்