(செ.தேன்மொழி)

தமிழ், முஸ்லீம் மக்கள் தனக்கு உதவி செய்பவர்களை மாத்திரமே பொதுத் தேர்தலில் தெரிவு செய்யவேண்டும் என்ற நோக்கில் வாக்களிக்காமல் , தங்களது உரிமைகளை வென்றெடுப்பதன் நோக்கத்திலே வாக்களிக்க வேண்டும்.

கொழும்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் ஐந்து சிறுபான்மை பிரதிநிதிகளை தெரிவுச் செய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

அதனால் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் அதிகளவான சிறுபான்மை பிரதிநிதிகளின் தெரிவை உறுதிப்படுத்தும் வகையில் வாக்களிக்க வேண்டும் என்று பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களில் ஒருவரான ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

வெள்ளவத்தையில் அமைந்துள்ள ஐ.டி.எம். நேசன்ஸ் கெம்பஸ் நிறுவனத்தின் கட்டிடத் தொகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் நாட்டில் சிறுதொழில் மற்றும் நுண்கடன் திட்டங்கள் தொடர்பில் பெரும் நெருக்கடி நிலைமைகள் தோற்றம் பெற்றுள்ளன.

குத்தகைக்கு பெறப்பட்ட முச்சக்கர வண்டியின் கட்டணம் மீளச் செலுத்தப்படாமையின் காரணமாக சம்பந்தப்பட்ட குத்தகை நிறுவனம் முச்சக்கர வண்டியை பறிமுதல் செய்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் குத்தகை நிலையத்தில் கலந்தாலோசிக்க சென்றிருந்த இலங்கை சுயதொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன அந்த நிறுவனத்தின் முன்பாக கொலைச்செய்யப்பட்டார். 

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு ஆதரவை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

இதனை அனைவரும் வேறுகோணத்தில் காண்பித்து வருகின்றனர். இதனால் அவர் அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார் என்று அர்த்தப்படுத்த முடியாது. அவர் தெளிவாக ஒரு விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது 'எந்த அரசாங்கமாக இருந்தாலும் அரசியலமைப்பு திருத்தப்படுவதற்கான வாய்ப்பை கொண்டுவந்தால் அதில் தமிழ் மக்களின் அபிலாசனைகளை நிறைவேற்றும் வகையிலான ஏற்பாடுகள் காணப்பட்டால் அவற்றுக்கு  ஆதரவைப் பெற்றுக் கொடுப்போம்' என்றே குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சியாகவே செயற்பட்டது. ஆனால் தமிழ் மக்களுக்கு சாதகமாக ஏதாவது கிடைக்கப் பெறும் போது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்தது.

இதேவேளை இலங்கையில் எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வை நாம் அமெரிக்கவில் சென்று  பெற்றுக் கொள்ளமுடியாது.

எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாம் இலங்கை அரசாங்கத்திடமே பெற்றுக் கொள்ள முடியும். அதைதான் தமிழ் தேசியக் கூட்டமைப்புச் செய்து வருகின்றது.

எந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றினாலும் அவர்கள் தங்களின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யும் போது நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவார்கள்.

இதனால் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தோல்வியுற்றார். இதேவேளை அரசாங்கம் நாட்டுக்கும் , நாட்டு மக்களுக்கும் நன்மைதரும் வகையில் ஏதாவது திட்டங்களை கொண்டுவந்தால் அதற்கு கட்சிபேதமின்றி அனைவரும் ஆதரவை கொடுப்பார்கள். நாங்களும் அவ்வாறே ஆதரவை பெற்றுக் கொடுப்போம்.

கொழும்பில் தமிழ் மற்றும் முஸ்லீம் வாக்குகள் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான  நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் மலையகம் மற்றும் வடக்கு , கிழக்கு பகுதிகளிலிருந்து இங்குவந்து பதிவு செய்துக் கொண்டுள்ள பலர் வாக்களிப்பதை புறக்கணித்து வருகின்றனர். இது கவலைக்கிடமான நிலையாகும். இம்முறை தேர்தலில் கொழும்பில் மாத்திரம் 924 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் , அவர்களுள் ஆறு பேர் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் படுத்தும் உறுப்பினர்களாவர்.

அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தி , ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியில் இந்த சிறுபான்மை மக்களின் பிரதிநிகள் போட்டியிடுகின்றனர்.

ஏனையவர்கள் அனைவரும் பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவ படுத்துபவர்கள். மொட்டுக்கள் கட்சியை பொறுத்தமட்டில் ஒரு சிறுபான்மை வேட்பாளர் கூட களமிறங்கவில்லை. காரணம் ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் சிறுபான்மை மக்களை புறக்கணித்து வந்தமையே .

அவ்வாறான நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக வாக்களித்தமையினால் , அவரது கட்சி உறுப்பினர் ஒருவருக்கே பொதுத் தேர்தலில் வாக்களிப்பது என்பது சிறந்த செயற்பாடு அல்ல.

அவர்கள் தமிழ் பிரதிநிதிகளை புறக்கணித்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இதேவேளை தனக்கு உதவி செய்தவர்களுக்கு மாத்திரமே நாம் வாக்களிப்போம் என்ற கொள்கையையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

வாக்களிக்கும் போது உதவியை கருதாமல் எமது உரிமையை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரையே நாங்கள் தெரிவு செய்யவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இம்முறை கொழும்பு வாழ் தமிழ்,முஸ்லீம் மக்கள் இந்த விடயம் தொடர்பில் சிந்தித்து வாக்களிப்பார்களானால் 5 சிறுபான்மையின  உறுப்பினர்களை தெரிவு செய்துக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது எனத் தெரிவித்தார்.