ஆகஸ்ட் 5 ந் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டம் சார்பாக ஒன்பது உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 288 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

இவர்கள் பன்னிரு அரசியல் கட்சிகள் மற்றும் பன்னிரு சுயேச்சைக் குழுக்கள் சார்பாகவும் போட்டியிடவுள்ளனர்.இவ்வரசியல் கட்சிகளில் தமிழ் வேட்பாளர்கள் 23 பேரும், சுயேச்சைக் குழுக்களில் தமிழ் வேட்பாளர்கள் 37 பேரும் 60 தமிழ் வேட்பாளர்கள் இருந்து வருகின்றனர். இவர்களில் 15 பேர் தமிழ் பெண் வேட்பாளர்களாவர். மாவட்டத்தின் முஸ்லீம் வேட்பாளர்களைப் பொறுத்தவரையில் 17 முஸ்லீம் வேட்பாளர்களும், முஸ்லிம் பெண் வேட்பாளரொருவரும் உள்ளடங்கியுள்ளனர்.

 இம்மாவட்டத்தின் மூன்று பௌத்த துறவிகள் அரசியல் கட்சிகள் சார்பிலும், பெரும்பான்மையினப் பெண்கள் எட்டுப் பேர் அரசியல் கட்சிகள் சார்பிலும்,  இருபத்தொரு பெரும்பான்மையினப் பெண்கள் சுயேச்சைக் குழுக்கள் சார்பிலும் மொத்தமாக 29 பெண்கள் தேர்தல் களம் இறங்கியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் மகியங்கனை வியலுவை, பசறை, பதுளை, ஹாலி-எலை, ஊவா – பரனகமை, வெலிமடை, பண்டாரவளை,  ஹப்புத்தளை ஆகிய ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் தலா ஒவ்வொருவர் வீதம் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில் பதுளை மாவட்ட பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

மகியங்கனை – 105150, வியலுவை – 54995,பசறை – 67195, பதுளை – 59353, ஹாலி-எலை – 74785, ஊவா – பரனகமை – 66278, வெலிமடை – 80482, பண்டாரவளை – 89861, ஹப்புத்தளை – 70066 என்ற வகையில் 6, 68,166 வாக்காளர்களாக மொத்தமாகவுள்ளனர்.

இவர்களில் ஒரு இலட்சத்து இருபத்தாறாயிரம் தமிழ் வாக்காளர்களாகவும், ஐம்பதாயிரத்தை அண்மித்த முஸ்லீம் வாக்காளர்களும் இருந்து வருகின்றனர்.

இத்தமிழ் வாக்காளர் தொகையில் 36 ஆயிரம் வாக்காளர்கள் தொழில் நிமித்தம் வெளி மாகாணங்கள் மற்றும் வெளிநாடுகளில் தொழில் செய்பவர்களையும், வாக்களிக்க விரும்பாத விரக்தியடைந்தவர்களாகவும் அடங்கியுள்ளனர். 90 ஆயிரம் வாக்காளர்களே வாக்களிப்பவர்களாக இருந்து வருகின்றனர். இவ்வாக்குகளை இலக்கு வைத்து, அரசியல் கட்சிகளில் 23 பேரும், சுயேச்சைக் குழுக்களில் 37 பேருமாக 60 தமிழ் வேட்பாளர்கள் இருந்து வருகின்றனர். இவர்களில் 15 பேர் தமிழ்ப் பெண் வேட்பாளர்களாவர்.

களம் இறங்கியிருக்கும் தமிழ் வேட்பாளர்களில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களாக அ. அரவிந்தகுமார், வடிவேல் சுரேஸ், முன்னால் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன், முன்னால் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதத்தின் புதல்வனான வேலாயுதம் பிரதீப்ராஜ் ஆகியோர் முன்னனியிலுள்ளனர். கட்சிகளுக்கப்பால், சமூக ரீதியில் மூன்று பேரை, நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு அனுப்பக் கிடைக்குமாகில், அது பதுளை மாவட்ட தமிழ் மக்களின் பெரும் சாதனையேயாகும். அச் சாதனையை ஏற்படுத்தும் வகையில், தமிழ் வாக்காளர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்துச் செயற்படல் வேண்டும். அரசியல் ரீதியிலான பலம் அதிகரிக்கப்படும் பட்சத்திலேயே எமது மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளதென்பதை, அனைவரும் உணர வேண்டும்.

பதுளை மாவட்டத்தில் ஏற்கனவே எமது சமூகம் சார் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து வந்தனர். அவ்விருவரும் சமூகத்திற்கு முழுமையான சேவைகளை வழங்க முடியாது போனாலும் இயன்றளவில் செய்துள்ளனர்.

அவர்களின் காலப் பகுதியில் எமது சமூகத்திற்கு ஏற்பட்டிருந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு ஓரளவிலாயினும் தற்காலிகத் தீர்வினைப் பெற்றுக் கொடுத்ததுடன் சமூகத்திற்கு பாதுகாவலர்களாக இருந்து வந்துள்ளதை மறுக்கவோரூபவ் மறைக்கவோ முடியாது. ஆகஸ்ட் 5ந் திகதி நடைபெறப் போகும் தேர்தலில் சமூமூகத்திற்கு சேவையாற்ற வேண்டுமென்ற உணர்வுப் பூர்வமான குறிக்கோளில் இருக்கும் வேட்பாளர்கள் இருக்கவே செய்கின்றனர். 

இத்தகையவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியளவிலேயே உள்ளனர். ஏனையோர் சமூக வாக்குகளை சிதறடிப்பதற்குரூபவ் ஒப்பந்த அடிப்படையில் வாக்குகளை பெறுவோராகவும் உள்ளனர். சமூகப் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்வதே அத்தகையவர்களின் குறிக்கோளாக உள்ளன. இத்தகையவர்களை சமூக வாக்காளர்கள் இனம் காணவேண்டும். யார் ஒப்பந்த வேட்பாளர்கள், யார் சமூகப் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்வோர், யார் உண்மையாகவும், உணர்வு பூர்வமாகவும் சேவையாற்றக்கூடியவர்கள் என்ற வகையில் இனம் கண்டு, செயற்பட வேண்டிய பாரிய கடப்பாடுகளும், பொறுப்புக்களும், சமூகவாக்காளர்களுக்கு இருந்து வருகின்றன. 

இக்கடப்பாடுகளையும், பொறுப்பினையும் மேற்கொள்வதில் தவறு விட்டுவிடக் கூடாது.  அத்துடன் தமிழ் வாக்காளர்களில் கணிசமானவர்கள் தமிழ் வேட்பாளர்கள் மீது அதிர்ப்த்தி கொண்டு, பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் நிலையும் இருந்து வரும் கசப்பான உண்மையையும் இங்கு கூற வேண்டியுள்ளது.

மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில், 50 ரூபா சம்பள உயர்வு, 1000 ரூபா சம்பள உயர்வு என்ற விடயங்களும், பெருந்தாக்கங்களை ஏற்படுத்தவே செய்யும்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி பட்டியலில் பத்து பெரும்பான்மையினத்தவர்களும், ஒரு பெண் வேட்பாளரும் ஒரு தமிழ் வேட்பாளருமாக பன்னிருவர் அடங்கியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் ஒன்பது பெரும்பான்மையினத்தவர்களும் இரு தமிழர்களும் ஒரு முஸ்லீமும் அடங்கியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி பட்டியலில் ஒன்பது பெரும்பான்மையினத்தவர்களும் இரு தமிழர்களும்,  ஒரு முஸ்லீமும் அடங்கியுள்ளனர். தேசிய மக்கள் சக்தி பட்டியலில் பத்து பெரும்பான்மையினத்தவர்களும் ஒரு தமிழரும் ஒரு முஸ்லீமும் அடங்கியுள்ளனர். இம்மூன்று கட்சிகளிலும் பெண் வேட்பாளர்கள் எவருமில்லாதமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஏனைய ஸ்ரீலங்கா சமத்துவக் கட்சி, சோஷலிச சமத்துவக் கட்சி, லிபரல் கட்சி, எமது மக்கள் சக்தி, சிங்கள தீப தேசிய மன்னணி, ஸ்ரீலங்கா தொழில் கட்சி, ஐக்கிய இடதுசாரி முன்னணி, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் வேட்பாளர்கள் அடங்கிய மூன்று சுயேச்சைக் குழுக்கள், முஸ்லீம் வேட்பாளர்கள் அடங்கிய சுயேச்சைக் குழுவொன்று, பெரும்பான்மையினத்தவர்களை முன்னிலைப்படுத்திய எட்டு சுயேச்சைக் குழுக்கள் ஆகியவற்றில் பெண் மற்றும் இன சமத்துவ அடிப்படையில் வேட்பாளர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.

பதுளை மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் ஜனசெத முன்னணி மற்றும் ஜெயராம் தலைமையிலான தமிழ் சுயேச்சைக் குழுவொன்றும் நிராகரிக்கப்பட்டுள்ளன. 12 வேட்பாளர்களை உள்ளடக்க வேண்டியிருந்தும் 11 பேரை மட்டும் உள்ளடக்கி சமர்ப்பிக்கப்பட்டதினால், அவ் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. ஜெயராம் தலைமையிலான தமிழ் சுயேச்சைக் குழுவில்,  கட்டுப்பணம் செலுத்தியவரின் பெயர் வேட்புமனுவில் உள்ளடக்கப்படாமையினால், அவ்வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.

ஏற்கனவே, அரசியல் கட்சிகள் 13ம் சுயேச்சைக் குழுக்கள் 13ம் வேட்பு மனுக்களை சமர்ப்பித்த போதிலும் இரு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையினால் 12 அரசியல் கட்சிகளினதும், 12 சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்களே தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலர் தமயந்தி பரணகமையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

பதுளை மாவட்டத்தில் ஐம்பதாயிரம் வாக்காளர்களை அண்மித்த முஸ்லீம் வாக்காளர்களை முன்னிலைப்படுத்திய வகையில் 17 முஸ்லீம் வேட்பாளர்களும் ஒரு முஸ்லீம் பெண் வேட்பாளரும் களம் இறங்கியுள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பாக ஆறு முஸ்லீம் வேட்பாளர்களும் முஸ்லீம் சுயேச்சைக் குழு சார்பாக பதினொரு முஸ்லீம் ஆண் வேட்பாளர்களும்ர பெண் வேட்பாளர் ஒருவரும் உள்ளடங்கியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தின் முஸ்லீம் வாக்காளர்கள் நன்கு சிந்தித்துச் செயற்படுவார்களேயானால் தமது சமூக பிரதிநிதித்துவமொன்றினை இம்முறையாவது ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதனை கருத்திற்கொண்டு முஸ்லீம் வாக்காளர்கள் ஒன்றிணைந்து செயற்படல் வேண்டும். முஸ்லீம் சமூகத்தைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டம் சார்பாக எவரும் தெரிவாகாமலிருப்பதும்  ஊசவா மாகாண சபையில் அதே நிலை தொடர்வதும்,  அச் சமூகத்திற்கு ஏற்படும் பெரும் பின்னடைவாகுமென்பதையும் முஸ்லீம் சமூகம் உணர வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி பட்டியலில் பெண் ஒருவருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருகின்றது. ஆனால் முஸ்லீம் வேட்பாளர் எவரும் உள்ளடக்கப்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சிரூபவ் தேசிய மக்கள் சக்தி ஆகிய மூன்று பிரதான அரசியல் கட்சிகளில் பெண் வேட்பாளர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை.

மேலும், பதுளை மாவட்ட பாராளுமன்றத் தேர்தலில் மூன்று பௌத்த துறவிகளும் அரசியல் கட்சி சார்பில் களம் இறங்கியுள்ளனர். அத்துடன் அரசியல் கட்சிகள் சார்பில் எட்டுப் பெரும்பான்மையினப் பெண்களும், சுயேச்சைக் குழுக்கள் சார்பில் இருபத்தொரு பெண்களுமாக 29 பெரும்பான்மையினப் பெண்கள் களம் இறங்கியிருக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி பதுளை மாவட்டப் பட்டியலில் முதன்மை வேட்பாளராக உபாலி சமரவீரவும், அவரது சகோதரர் ரவி சமரவீர சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளராகவும் இருந்து வருகின்றனர். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சி பதுளை மாவட்டப் பட்டியலில் வேலாயுதம் பிரதீப்ராஜ் போட்டியிட அவரது சகோதரன் வேலாயுதம் தினேஸ் நுவரெலியா மாவட்டத்தில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடுகின்றார்.