(எம்.எம்.சில்வெஸ்டர்)

46 ஆவது தேசிய விளையாட்டு விழாவை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த   விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆகையால், மாவட்ட மட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகள் அனைத்தும் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என மாகாண மட்ட விளையாட்டுத்துறை பணிப்பாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண மட்ட விளையாட்டுத்துறை பணிப்பாளர்கள் ஆகியோருக்கிடையே விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற கலந்துரையாடல்களை அடுத்தே விளையாட்டுத்துறை அமைச்சு இந்த முடிவு எடுத்துள்ளது.

46 ஆவது தேசிய விளையாட்டு விழா செப்டெம்பர் மாதம் 4,5,6 ஆம் திகதிகளில்  கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்த ஏற்பாடாகியிருந்ததுடன், ஏனைய விளையாட்டுப் போட்டிகள் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டப்படி போட்டிகளை நடத்த முடியாது போனது.

எவ்வாறாயினும், நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இந்த ஆண்டு இறுதிக்குள் 46 ஆவது தேசிய விளையாட்டு விழாவை நடத்த முடிப்பதற்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர்கள் அனைவரும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தேசிய விளையாட்டு விழாவின் முதற்கட்டமான பிரதேச மட்ட போட்டிகளில் அநேகமான போட்டிகள் கொரோன அச்சுறுத்தலுக்கு முன்னதாகவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் குறைவடைந்து வருவதால் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களான மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாம் 31 ஆம் திகதிக்குள் நடத்த முடியும் என நம்புவதாகவும் நேற்றைய கலந்துரையாலின்போது மாகாண மட்ட விளையாட்டுத்ததுறை பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்குள் மாவட்ட மட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகளை நடத்தி முடிப்பதுடன், 46 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மாபெரும் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் , டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் நடத்தி முடிக்க விளையாட்டுத்துறை அமைச்சு எதிர்பார்த்துள்ளது.