(ஆர்.யசி)

நல்லாட்சி அரசாங்கத்தில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்கு பதிலாக வவுச்சர் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை வழங்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்

அரச மற்றும் அரசாங்க்தின் உதவியை பெறும் பாடசாலைகளில் மாணவர்களுக்கும் அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பிரிவெனாக்களில் உள்ள பிக்கு மாணவர் உள்ளிட்ட மாணவர்களுக்கும் இலவசமாக சீருடைகளை வழங்குவதற்காக கல்வி அமைச்சின் மூலம் 1993 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையில் சீருடைக்கான துணியை வழங்குவதற்கு பதிலாக வவுச்சர் முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது நாட்டில் நிலவும் கொவிட் 19  தொற்று நிலைமையின் காரணமாக ஏற்றுமதி வருமானம் குறைவடைந்தமை , பாடசாலை சீருடைக்கான துணி இறக்குமதி செய்யும் பொழுது எதிர்கொள்ள வேண்டிய ஆகக்கூடிய வெளிநாட்டு செலாவணியை கவனத்தில் கொண்டு உள்ளுர் ஆடை தயாரிப்பாளர்களை ஊக்குவித்து பாடசாலை சீருடைக்குத் தேவையான துணி வகைகளை உள்ளூரில் தயாரிப்பது பொருத்தமானது என கண்டறியப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக எதிர்காலத்தில் பாடசாலை சீருடையை வழங்கும் பொழுது வவுச்சருக்குப் பதிலாக உத்தியோகபூர்வ சீருடையை வழங்குவதற்கும், தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள உள்ளூர் ஆடை வகை தயாரிப்பாளர்கள் மத்தியில் மாத்திரம் பெறுகை நடவடிக்கைகளை முன்னெடுத்து பாடசாலை சீருடைக்குத் தேவையான துணி வகைகளை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.