“யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே”  என்று பலரும் கூறுவார்கள். இங்கு தேர்தல் பேச்சு ஆரம்பமான உடனேயே அது தொடர்பான வன்முறைகளும் உருவெடுக்கத் தொடங்கியுள்ளன.

தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவது, இனவாத கருத்துக்களை தெரிவிப்பது, இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவது மற்றும் மதச் சின்னங்களை சேதம் அடைய செய்வது, போன்ற சம்பவங்கள் திட்டமிட்ட விசமிகளால் ஏற்படுத்தப்படுவது வழக்கமான விடயமாகும்.

இதேவேளை அரசாங்கம் தேர்தலுக்கான திகதியை அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே நேற்றுக் காலை இனந்தெரியாத நபர்கள் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நாகவிகாரை மீது கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் நாக விகாரையின் முகப்பில் உள்ள புத்தர் சிலையின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து  படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இன ஒற்றுமையை விரும்பாதவர்களால்  குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே இது தொடர்பில் எவரும் குழப்பமடையத் தேவையில்லை எனவும் யாழ்ப்பாண நாக விகாரையின் விகாராதிபதி கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மூவினங்களும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டு வருகின்றன. இதனை சீர்குலைக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் .

 

மேலும் யுத்தம் நடந்த காலப்பகுதியில் கூட  நாக விகாரைக்கு  எவ்வித சேதங்களும் ஏற்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில் திடீரென தற்போது நாகவிகாரை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதாகும். இதேபோன்றே தென்பகுதியிலும் புத்தர் சிலைகள் தொடர்ந்து சேதமாக்கப் பட்டன. இதனை அடுத்து இன ரீதியான  முறுகல் நிலை தோன்ற வழி  வகுத்தது.

வடக்கில் ஏதேனும் சில தீய சக்திகளின்  தூண்டுதலிலேயே இந்த விஷமிகள் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வட பகுதியில் இத்தகைய சம்பவங்கள் தொடராதிருக்க  அனைத்து தரப்பினரும் விழிப்பாக இருப்பது அவசியம். 

வடக்கில்  பெளத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்ட பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பலரும் தமது கண்டனத்தை வெளியிட்டனரே தவிர எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்கவில்லை.

எனவே இந்த சம்பவம் தொடர்பில் மக்கள் குழப்பமடையாது விழிப்பாக இருக்க வேண்டும். வெறுமனே வடக்கில் நிலவும் அமைதியை சீர்குலைக்க இடமளிக்கக்கூடாது . அரசியல் வாதிகளும்  இதனை தங்கள் அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. அதேவேளை குற்றவாளிகள் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது அவசியம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்