அரச வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

முதல் கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் 04 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையில் வைத்தியர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.  

எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படல் மற்றும் மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியின் மாணவர்களை வைத்தியசாலையில் அனுமதி வழங்குவதற்கு முயற்சித்தல், வெளிநாட்டு பயிற்சிகளை முடித்து வரும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை வழங்காமை உள்ளிட்ட 6 காரணிகளை எதிர்த்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.  

இதேவேளை மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக சிகிச்சை மையம், புற்று நோய் வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வைத்தியர்கள் இந்த போராட்டத்தில் இணைத்து கொள்ள மாட்டார்கள் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் தொடர் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நல்லாட்சி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.