(இராஜதுரை ஹஷான்)

கிழக்கில்  தொல்பொருள் வளங்களை பாதுப்பதற்கு  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள  செயலணியில் தமிழ், முஸ்லிம்  சமூகத்தினரது கருத்துக்கள், உணர்வுகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கும் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்த  கடற்தொழில், கடல்வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  ஜனாதிபதி செயலணி தொடர்பில் எழுந்துள்ள பலதரப்பட்ட கேள்விகள் குறித்து  ஜனாதிபதிக்கு கடிதம்  அனுப்பி வைத்துள்ளதாகவும்,  விரைவில் திருப்திகரமான தீர்வு கிடைக்கப் பெறுவதாகவும்  குறிப்பிட்டார்.

கிழக்கிலங்கையில் தொல்பொருள் வளங்களை  பாதுகாப்பதற்கு ஜனாதிபதியால் நிறுவப்பட்ட  செயலணியில்  தமிழ், முஸ்லிம் சமூகத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள்  உள்ளடக்கப்படவில்லை என்ற விடயம் பல்வேறு கேள்விகளை  தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

கிழக்கில் தொல்பொருள் தொடர்பான பிரச்சினை   காலம் காலமாக காணப்படுகின்றது. சில ஆக்கிரமிப்புக்களை தொடர்ந்து ஜனாதிபதி  கோத்தபய ராஜபக்ஷவினால் தொல்பொருள் வளங்களை பாதுகாக்கும் விசேட செயலணி  ஸ்தாபிக்கப்பட்டது.  செயலணின்  செயற்பாடுள்  முரண்பட்ட தன்மையாக அமையாமல்  அனைத்து இன மக்களுக்கும் திருப்திகரமாக அமைந்து தொல்பொருள் மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே   எமது நிலைப்பாடாகும்.

 

செயலணியில்  தமிழ், முஸ்லிம் பிரநிதிகள் உள்வாங்கப்பட்வில்லை என்பது  கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.  செயலணியின் செயற்பாடுகள் தமிழ், முஸ்லிம்  மக்களின்  உணர்வுகளையும், அவரவர்  உரிமைகளையும்   பாதுகாக்கும் விதமாக அமைவதற்கு  விசேட பொறிமுறையினை  கையாள  வேண்டும். என்றும்,  செயலணி தொடர்பில்   தற்போது எழுந்தள்ள பல்வேறுப்பட்ட கேள்விக்கு தீர்வு கோரியும் ஜனாதிபதிக்கு  கடிதம் அனுப்பியுள்ளேன். சாதகமாதன மற்றும் திருப்திகரமான  பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

 

தமிழ் மக்கள் சிறந்த  அரசியல் தலைவர்களை தெரிவு செய்யாமை பல பிரச்சினைகள் தொடர்வதற்கு  பிரதான  காரணம்.   நல்லாட்சி அரசாங்கத்தில்  வடக்கு கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் தரப்பினர்கள் அரசாங்கத்தில் பலம் பொருந்தியவர்களாக காணப்பட்டார்கள். 

ஆனால் தமிழ் , முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய  நடவடிக்கைகளை  முன்னெடுக்கவில்லை.  ஆகவே தமிழ் மக்கள் இம்முறை அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

 

தொல்பொருள் தொடர்பான செயலணி குறித்து அமைச்சரவை கூட்டத்தில்   கலந்துரையாடியுள்ளேன். தமிழ், முஸ்லிம்  சமூகத்தினரது  உரிமைகளுக்க ஒருபோதும்  பாதிப்பு  ஏற்படாது. பாராளுமன்றத்தில் பலமான அரசாங்கம்  தோற்றம் பெறும்.   என்ற நம்பிக்கை உள்ளது. என்றார்.