(தி.சோபிதன்)

இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் நாக விகாரை மீது தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ள நாகவிகாரையின் விகாராதிபதி  ஸ்ரீ விமல தேரர்  இது தொடர்பில் மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தி ஸ்ரீ நாக விகாரை சர்வதேச பௌத்த  நிலையத்திற்கு இனம்தெரியாத நபர்களினால்  தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி  ஸ்ரீ விமல தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது நாக விகாரையில் ஒரு சிறிய தாக்குதல் சம்பவம்  ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்று இருக்கின்றது.

நான் நினைக்கின்றேன் யாரும்  வேண்டத் தகாதவர்களால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்   நான் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்விடுக்கின்றேன்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் தமிழர் சிங்களவர் முஸ்லிம் என்ற வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

இது தொடர்பில் மக்கள் குழம்ப வேண்டாம் நாங்கள் தமிழர் சிங்களவர் முஸ்லிம் என்ற இன வேறுபாடு இன்றி இலங்கையில் வசித்து வருகின்றநிலையில் அதனை குழப்புவதற்காக சிலரால்.இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதுதான் எனது கருத்து.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த விடயம் தொடர்பில் தென்பகுதியில் உள்ள பௌத்த மக்களோ அல்லது வேறு இன மக்களோ இது தொடர்பில் குழப்பமடைய வேண்டாம் எமது இன ஒற்றுமையை குழப்புவதற்காக இந்த விடயம் இடம்பெற்றிருக்கலாம்.

இன ஒற்றுமையை குழப்புவதற்காக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம்  இந்த விடயத்தினை  பெரிதாக்கி எமது இன ஒற்றுமையை குலைக்காது. அனைவரும் ஒற்றுமையாக செயற்படுமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

சில இனவாதத்தை தூண்டுபவர்களால்   இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனினும் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய விசாரணைகளை முன்னெடுத்து உரிய சம்பந்தப்பட்டவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

புத்த பகவானின் கருத்துப்படி  அனைவர் மீதும் இரக்கம் காட்ட வேண்டும்.

எனவே இது தொடர்பில்  பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

தெற்கில் உள்ள பௌத்த மக்கள் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள பௌத்த மக்களுக்கும் நான் இது தொடர்பில் தெரிவிக்க விரும்புவது இது தொடர்பில் நீங்கள் குழப்பமடைய வேண்டாம் தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.