( மயூரன் )

வடமாகாண கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் சேமிப்பு மாதமாக வடமாகாண கூட்டுறவு அமைச்சால் யூலை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

வடமாகாண கூட்டுறவு அமைச்சால் கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு கடந்த மே மாதம் 15ஆம் திகதியில் இருந்து 100 நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தின் ஒரு திட்டமாகவே, கூட்டுறவாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக, யூலை முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதி கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் சேமிப்பு மாதமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினாலும், பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களினாலும் வடக்கில் 69 கூட்டுறவுக் கிராமிய வங்கிகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. 

இக்கிராமிய வங்கிகளினால் பல்வேறு வகையான சேமிப்புத்திட்டங்கள் மற்றும் இலகு கடன் வசதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் 1,20,000 வாடிக்கையாளர்கள் வடக்கில் பயன்பெற்று வருகின்றனர்.

கிராமிய வங்கிகளைக் கணனி மயப்படுத்தி, சேவைகளை விரிவுபடுத்தி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும் நோக்குடனேயே யூலை மாதம் கிராமிய வங்கிகளின் சேமிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு வடமாகாண கூட்டுறவு அமைச்சாலும், கிராமிய வங்கிகளாலும் இம்மாதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.