இந்திய தமிழகத்தின் திரவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான (எம்.எல்.ஏ) ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். 

அன்பழகன் தனது 62 வயதிலேயே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது பிறந்தநாளிலேயே உயிரிழந்துள்ளார்.

பிறந்த நாளான இன்று அவரது உயிர் பிரிந்துள்ளமையானது, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

திமுக சட்டமன்ற உறுப்பினரான (எம்.எல்.ஏ) ஜெ. அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2 ஆம் திகதி குரோம்பேட்டையில்  உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து வைத்தியர்கள் கண்காணித்து வந்தனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) பொருத்தப்பட்டது.

கடந்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனியார் வைத்தியசாலை மருத்துவரிடம் ஜெ. அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் வைத்தியசாலைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

ஜெ அன்பழகன் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில் திமுக சட்டமன்ற  உறுப்பினரான ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்துள்ள நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடைமுறைகளுக்கு பிறகு ஜெ அன்பழகன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.