ஐக்கிய அமெரிக்காவா? பிளவுபட்ட அமெரிக்காவா? 

09 Jun, 2020 | 10:17 PM
image

'“ஜோர்ஜ் ப்ளாய்டின் கொலை உடனடிக் காரணமாக இருப்பினும், உண்மையில் தற்போதைய கலவரங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுவது இலட்சக்கணக்கான அமெரிக்கர்களின் அடக்கிவைக்கப்பட்ட ஆத்திரமே“

-ஸ்டான்லி ஜொனி

அது ஒரு மேற்குலக நாடாக இல்லாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அதன் நகரங்கள் பூராகவும் பலநாட்களாக வன்முறை ஆர்ப்பாட்டங்கள்: வன்முறைக் கும்பல்களைக் கலைக்கக் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் இறப்பர் குண்டுப்பிரயோகம்: ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்குமிடையே நேருக்கு நேர் கைகலப்புக்கள்.

George Floyd: பற்றி எரியட்டும் ...

அவர் மேற்குலக நாடொன்றின் ஜனாதிபதியாக இல்லாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்குமென நினைத்துப் பாருங்கள். ஆர்ப்பாட்டக்காரர்களைக் குண்டர்களென்று அழைக்கும் அவர் சுட்டுக்கொல்லப்போவதாகவும் அச்சுறுத்துகிறார்: அவர்களுக்கெதிராக நாட்டின் இராணுவத்தைப் பயன்படுத்தப்போவதாக எச்சரிக்கிறார்: அமைதிவழியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை படைப்பலத்தைப் பயன்படுத்தி அப்புறப்படுத்திவிட்டு, வணக்கஸ்தலம் ஒன்றுக்கு முன்பாக பைபிளை உயர்த்திப்பிடித்தவண்ணம் புகைப்படத்திற்குப் பாவனை காண்பிக்கிறார். 

அந்த அரசாங்கத்தை அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் உடனடியாகக் கண்டனம் செய்திருக்கும் என்பதுடன், மனித உரிமைகளை மதித்துச் செயற்படுமாறு அழைப்புவிடுத்திருக்கும். பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகமும் அதேபோன்றே செய்திருக்கும். ஜேர்மனியும், பிரான்சும் அதையே பின்பற்றியிருக்கும். 'போக்கிரித்தனமான நாடு' என்று முத்திரைகுத்தி அதற்கெதிராக அமெரிக்க காங்கிரஸ் சட்டமொன்றையும் நிறைவேற்றியிருக்கும். அடுத்து தடைகளும் விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தடவை வன்முஐறு ஆர்ப்பாட்டங்களையும், கலவரங்களையும், பொலிஸ் அட்டூழியங்களையும் ஜனாதிபதியின் அச்சுறுத்தல்களையும் காண்கின்ற அந்த நாடு அமெரிக்காவேயன்றி வேறெதுவுமில்லை. 

US Race Protests:George Floyd Died Of Neck Compression, It Was ...

நிராயுதபாணியான கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளாய்டி மினிசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸ் நகரில் வெள்ளையின பொலிஸ்காரர் ஒருவரால் முழங்காலினால் கழுத்து நசுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து மூண்ட ஆர்ப்பாட்டங்களும், கலவரங்களும் நாட்டின் நகரங்கள் பூராகவும் காட்டுத்தீ போல் பரவியிருக்கின்றன. இது 1968 ஏப்ரலில் கலாநிதி மார்ட்டின் லூதர்கிங் ஜுனியர் கொலையைத் தொடர்ந்து மூண்ட கலவரங்களை இது நினைவிற்குக் கொண்டுவருகின்றன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்ததையும் பொருட்படுத்தாமல் ஒருவார காலத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டங்களும், சூறையாடல்களும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. பொலிஸார் கடுமையான படைப்பலத்தைப் பிரயோகித்த போதிலும் அவை கட்டுக்கடங்கவில்லை. பல மாநில மற்றும் உள்ளுர் தலைவர்கள் அமைதிகாக்குமாறு விடுத்த வேண்டுகோள்களும் பயனளிக்கவில்லை. கலவரங்கள் மூண்டமைக்கான உடனடிக்காரணம் ப்ளாய்ட் கொலை என்கிற அதேவேளை, பல பிரச்சினைகளை ஒரேநேரத்தில் எதிர்நோக்கியிருக்கும் இலட்சக்கணக்கான அமெரிக்கர்களின் அடக்கிவைக்கப்பட்ட ஆத்திரமே இந்தக் கலவரங்களுடாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.

1968 சம்பவங்களுடன் சமாந்தரங்கள்

அமெரிக்காவின் நவீன வரலாற்றில் 1968 மிகவும் கொந்தளிப்பான வருடங்களில் ஒன்றாகும். வியட்நாம் போருக்கு எதிராக அமெரிக்கர்களின் ஆர்ப்பாட்டம் ஏற்கனவே தொடர்ந்து கொண்டிருந்தது. ரென்னசி மாநிலத்தில் மெம்பிஸ் நகரில் தங்குவிடுதியொன்றில் வைத்து கலாநிதி மார்ட்டின் லூதர்கிங் ஏப்ரல் 4 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். இருமாதங்கள் கழித்து ஜனாதிபதி வேட்பாளர் ரொபேட் எல்.கென்னடி லொஸ் ஏஞ்சல்ஸில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கலாநிதி கிங்கின் கொலை அமெரிக்கா முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்களை மூளவைத்தது. அந்தக் குழப்பங்கள் 'புனிதவாரக் கிளர்ச்சி' என்றழைக்கப்பட்டது. வாஷிங்டன் டி.சி, சிக்காகோ, பால்டிமோர், கன்சாஸ் சிட்டி எல்லாம் வன்முறை கலவரங்களால் சின்னாபின்னமானது. இவற்றில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் கறுப்பின இளைஞர்களாகவே இருந்தனர். அமெரிக்க உள்நாட்டு யுத்த வருடங்களுக்குப் பிறகு முன்னர் ஒருபோதுமே கண்டிராத வகையான உச்சவேகத்தை கலாநிதி கிங்கின் கொலைக்குப் பின்னரான கலவரங்களில் காணமுடிந்தது. பெருமளவானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டனர். 

1968 இற்கும் 2020 இற்கும் இடையே சமாந்தரங்கள் இருக்கின்றன. ப்ளாய்டின் கொலைக்கு முன்பதாக அமெரிக்கா ஏற்கனவே பாரிய பொருளாதார மற்றும் சுகாதாரப் பராமரிப்பு நெருக்கடிகளினால் தடுமாறிக்கொண்டிருந்தது. இதுவரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கர்களின் உயிர்களைப் பறித்திருக்கும் கொவிட் - 19 தொற்றுநோயினால் கறுப்பின சமூகம் அதனளவிற்கு ஒவ்வாத முறையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கடந்த நூற்றாண்டின் 30 களில் ஏற்பட்ட பாரிய பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் அமெரிக்கா தற்போது பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ப்ளாய்டின் மரணம் திரியைப் பற்றவைத்தது. ட்ரம்ப் நெருப்பைப் பற்றவைப்பவர் போன்று செயற்பட்டிருக்கிறார். 

Global Anger Grows Over George Floyd's Death, Hurting U.S. Image ...

கடந்த காலத்தில் அமெரிக்கா பல தடவைகள் இனவன்முறைகளைக் கண்டிருக்கிறது. 1992 இல் ரொட்னிகிங் என்ற கறுப்பரைக் கைதுசெய்து தாக்குதல் நடத்தியதில் அதீதமான படைப்பலத்தைப் பிரயோகித்தமைக்காக வழக்கு விசாரணைக்கு உட்பட்டிருந்த 4 பொலிஸ் அதிகாரிகளும் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் தொடர்ச்சியான கலவரங்களைக் கண்டது. 2014 இல் மைக்கல் பிரவுண் என்ற 18 வயதான கறுப்பின இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மிஸோரி மாநிலத்தின் பெர்குஷன் நகரில் வன்முறை ஆர்ப்பாட்டங்களை மூளவைத்தது. இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருப்பதென்ன? 'நியூயோர்க்கர்' பத்திரிகையின் ஆசிரியர் டேவிட் ரெம்நிக் வர்ணித்ததைப் போன்று 1968 ஆம் ஆண்டில் நடந்ததையொத்த 'ஒரு அமெரிக்கக் கிளர்ச்சியே' நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தக் கிளர்ச்சியின் அடிப்புறத்தில் ஆட்கொல்லித்தொற்றுநோய், தொழில்வாய்ப்பின்வை மற்றும் மோசமடையும் இன உறவுகள் என்ற முச்சவால்களைச் சமாளிக்கப் பெரிதும் போராடிக்கொண்டிருக்கும் பிளவுபட்ட ஒருநாடு இருக்கிறது.

'சட்டம், ஒழுங்கு' பிரசாரம்

1968 இல் ஆர்ப்பாட்டங்களை அடக்க ஜனாதிபதி லின்டன் பி ஜோன்ஸன் தேசிய காவலர்படையைக் களமிறக்கினார். ஆனால் ஜோன்ஸன்;, குடியியல் உரிமைகள் போராட்டத்தலைவர் கலாநிதி மார்ட்டின் லூதர்கிங் கொலை செய்யப்பட்டதற்கு முதல்நாளே அவர் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கைகளில் ஒன்றான 'நியாயமான வீடமைப்புச் சட்டம்' என்ற சட்டத்தை நிறைவேற்றுமாறு அமெரிக்க காங்கிரசுக்கு எழுதினார். 5 நாட்களுக்கு உள்ளாகவே 1968 ஆம் ஆண்டின் குடியியல் உரிமைகள் சட்டத்தின் தலைப்பு 8 சட்டமூலத்தை (நியாயமான வீடமைப்புச் சட்டம்) ஜனப்பிரிதிநிதிகள் சபை பெரியதொரு பெரும்பான்மை வித்தியாசத்தில் நிறைவேற்றியது.

லின்டன் ஜோன்ஸன் அந்த நெருக்கடி சூழ்நிலையைக் கையாண்ட முறையையும், ஜனாதிபதி ட்ரம்ப் தற்போதைய நெருக்கடியை கையாளும் முறையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ட்ரம்பின் அணுகுமுறை இராணுவவாதத்தன்மை கொண்டதாக இருக்கிறது. அதுவே ஆர்ப்பாட்டக்காரர்களை ஆத்திரமூட்டி சமூகத்தில் பிளவுகளை ஆழப்படுத்திக் கொண்டிருக்கிறது. ரிச்சட் நிக்ஸனின் வழிமுறையை ட்ரம்ப் பின்பற்றியிருக்கிறார் என்பது தெளிவானது. 

1968 இல் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு நிக்ஸனின் பிரசாரம் 'சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டது. சட்டம், ஒழுங்கு என்பது அந்த இடத்தில் கறுப்பின ஆர்ப்பாட்டக்காரர்களின் வன்முறைகளினால் வெள்ளைப் பெரும்பான்மையினர் கொண்டிருந்த பீதியை பெருப்பிக்கத்துக் காட்டுகின்ற ஒரு இனவெறித் தொனியுடனான மறைபொருள் செய்தியாகும். 'சட்டம், ஒழுங்குப் பிரசாரம்' நிக்ஸனின் அரசியல் வாய்ப்புக்களில் ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. நிக்ஸன் அந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் பெருவெற்றி பெற்றார். 

பொருளாதர நிலவரத்தை அடிப்படையாக வைத்து வெள்ளை மாளிகையில் மீண்டுமொரு பதவிக்காலத்திற்கு தனக்கு வாய்ப்பைத் தருமாறு இனிமேலும் ட்ரம்பினால் அமெரிக்கர்களிடம் கேட்கமுடியாது. பொருளாதாரம் தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுவருகிறது. அதிகரிக்கும் வன்முறைகள் மற்றும் உள்நாட்டுக் குழப்பநிலைக்கு மத்தியில் ட்ரம்பின் பிரசாரம் நிக்ஸன் பாணியில் செல்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை சட்டம், ஒழுங்கு அமெரிக்காவில் மீள நிலைநிறுத்தப்பட வேண்டுமென்று அழைப்புவிடுத்தார். பிறகு அன்றைய தினமே ஜனாதிபதி ட்ரம்ப் இராணுவத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கப்போவதாக அச்சுறுத்திய பிறகு 'நான் உங்களது சட்டம், ஒழுங்கு ஜனாதிபதி' என்று கூறினார். ஆனால் அங்கே ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. நிக்ஸன் ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்குவைத்துத் தனது பிரசாரத்தை முன்னெடுத்தபோது அவர் ஜனாதிபதியாக இருக்கவில்லை. இங்கே இப்போது ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருக்கிறார். அவர் அதிகாரத்தில் இருக்கையில் அமெரிக்க நகரங்கள் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கின்றன. (த இந்து)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலம்பெயர்வில் புதுத்திறன் வளர்த்து உள்நாட்டில் தொழில்...

2023-09-29 18:57:24
news-image

இலங்கை சுற்றுலாத்துறையின் முதுகெலும்பான தேசிய விமான...

2023-09-29 17:50:38
news-image

பொருளாதார நெருக்கடி நூல் விற்பனையிலும் தாக்கம்...

2023-09-29 14:00:32
news-image

38 நிபந்தனைகளை மாத்திரம் நிறைவேற்றியுள்ள இலங்கை...

2023-09-27 14:40:25
news-image

ஒடுக்குமுறை நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு தெரிவு...

2023-09-27 13:42:35
news-image

நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுச் சட்டமூலம் “ஜனாதிபதியின்...

2023-09-27 11:41:14
news-image

சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் ;...

2023-09-26 19:45:02
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுலா தினநிகழ்வுகள் 

2023-09-26 17:30:26
news-image

எதிர்கால இயற்கை பாதுகாப்பை சிதைக்கும் அபிவிருத்தி...

2023-09-26 15:00:53
news-image

இத்தாலியின் வெளியேற்றத்தால் தகர்ந்து போகும் சீனாவின்...

2023-09-26 11:09:20
news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48