Published by T. Saranya on 2020-06-09 20:35:40
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோரப் பகுதியில் டைனமெட் வெடி மருந்து வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (09.06.2020) மதியம் 1.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
மீன் பிடிக்காக டைனமட் வெடி தயார் செய்யும் போது டைனமைட் வெடித்து சிதறியதில் டைனமைட் தயார் செய்தவர் உட்பட இருவர் படுகாயமடைந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.
இவ்வாறு வெடிப்பு சம்பவத்தின் போது கிண்ணியா இடிமன் -5,கிண்ணியா பகுதியை சேர்ந்த 35 வயதுடைய செயினுலாப்தீன் நவாஸ் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார் எனவும், மற்றொருவர் கிண்ணியா,பெரியாற்றுமுனையை சேர்ந்த ஜௌபர் ரிசான் வயது (26)உடைய குடும்பஸ்தர் படுகாயமடைந்தவர் எனவும் தெரியவருகிறது.
படுகாயமடைந்த ரிசான் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.