(செ.தேன்மொழி)

தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐ.தே.க.வுக்கும் இடையிலேயே பொதுத்தேர்தலில் பிரதான போட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனுடாக அவர் மொட்டுக்கே வாக்களியுங்கள் என்று கூறுவதாகவே எமக்கு தோன்றுகின்றது. இல்லை என்றால் அவ்வாறு கூறவேண்டிய அவசியம் இல்லை.

ரணிலுக்கு வாக்களிப்பதும் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிப்பதும் ஒரே மாதிரியான தீர்மானமே  என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியதன் பின்னர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொழிற் சங்க அமைப்புகளுக்கான பொறுப்பை என்னிடமே கையளித்துள்ளார்.

அதனை நாங்கள் உரியமுறையில் செயற்படுத்தி வருகின்றோம். இந்நிலையில் கடந்த 26 வருடங்களாக எமக்கென்ற ஒரு ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதினால் இந்த உறுப்பினர்களுக்கு பல குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை நாங்கள் நிவர்த்தி செய்து கொண்டே முன்னேர வேண்டும்.

இவ்வாறான நிலையில் ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடமிருந்து தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க அமைப்புகளின் உறுப்பினர்கள் எனக்கு தெரியப்படுத்தினர்கள்.

நான் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கினேன். ஐ.தே.க.வை விட்டு நாங்கள் முழுதாக வெளியேற வில்லை. கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடனே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.