(எம்.மனோசித்ரா)

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் ஏமாற்றுபவர்களுக்கும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று கூறியதாகவே தெரிவிக்கப்படுகிறது.

அவர் கூறிய இந்த விடயம் எவ்வாறு பொது ஜன பெரமுனவின் வாக்குகளை பாதிக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி கேள்வியெழுப்பினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேராசிரியர் ஹூல் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

பேராசிரியல் ஹூல் கூறிய கருத்துக்களில் எவ்வித தவறும் இறுப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அந்த கருத்துக்களை அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்தாகக் கூறவில்லை. மாறாக தனது தனிப்பட்ட கருத்தாகவே குறிப்பிட்டுள்ளார். ஆனால் நாட்டில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தும் பொறுப்பைக் கொண்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அல்லது  தேர்தல்கள் ஆணையாளர் நிச்சயம் மக்களிடம் இதனை வலியுறுத்த வேண்டும்.

ஏமாற்றுபவர்களுக்கும் ஊழல் மோசடிகளுக்கும் ஈடுபடுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பேராசிரியர் ஹூல் கூறிய கருத்து பொதுஜன பெரமுனவின் வாக்குகளை பாதிக்கும் என்று ஜீ.எல்.பீரிஸ் கூறுகின்றார். அவ்வாறெனில் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஹூல் கூற வேண்டும் என்று ஜீ.எல்.பீரிஸ் எதிர்பார்க்கின்றாரா என்றார்.

இதன் போது பேராசிரியர் ஹூல் விடுதலைப் புலிகளின் கருத்தை வெளிப்படுத்துவதைப் போன்று இருக்கிறது என்று விமர்சிக்கப்படுவதாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிதற்கு பதிலளித்த அவர் , ஏமாற்றுபவர்களுக்கும் ஊழல் மோசடிகளுக்கும் ஈடுபடுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதை எந்த வகையில் விடுதலைப் புலிகளின் கருத்தாகக் கொள்ள முடியும் என்றார்.