(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அமைச்சுக்கள் மற்றும் அரச வேலைத்திட்டங்களுக்காக 123 பில்லியன் நிதி ஒதுக்கி வரவு செலவு சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளமை அரசியலமைப்பிற்கு முரணானதாகும்.

அரசாங்கத்தின் இவ்வாறான அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்கும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இலங்கை அரசியலமைப்பு இல்லாத நாடல்ல. எனவே இதனைப் பாவித்து அரசாங்கம் விளையாடுவதற்கு இடமளிக்க முடியாது.

பாராளுமன்றம் பிரயோசனமற்றது என்று தற்போதைய அரசாங்கம் காண்பிக்க முயற்சிக்கிறது.  225 பாராளுமன்ற உறுப்பினர்களில் யார் பொறுத்தமற்றவர்கள் என்று மக்களே தீர்மானிப்பர்.

இவ்வாறிருக்கையில் அரசியலமைப்பின் 150 (3) ஆவது உறுப்புரைக்கமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இம் மாதம் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையான மூன்று மாத காலத்திற்கு கூட்டு நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வரவு செலவு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமைச்சுக்கள் மற்றும் அரச வேலைத்திட்டங்கள் என்பவற்றுக்காக 123 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் இவ்வாறு நிதி ஒதுக்குவதற்கு எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை. பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் வரவு செலவு திட்டத்தை முன்வைக்கவும் முடியாது.

வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படாத சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள போது புதிய பாராளுமன்றம் கூடவுள்ள தினத்திலிருந்து மூன்று மாத காலத்திற்கான நிதியை கூட்டு நிதியத்திலிருந்து ஜனாதிபதியால் ஒதுக்கிக் கொள்ள முடியும் என்றே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படாமையால் புதிய பாராளுமன்ற அமர்விற்கான தினமும் அறிவிக்கப்படவில்லை. இவ்வாறிருக்கையில் ஜனாதிபதியால் நிதி ஒதுக்க முடியாது.

இவ்வாறான அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம் என்பதோடு இதற்கு பொறுப்பு கூறும் வரையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும் என்றார்.