நேர்கண்டவர் – வீ.பிரியதர்சன்

மாரடைப்பு ஏற்பட்டு மூன்றாவது நிமிடங்களில் ஓய்ந்து போனது மாபெரும் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் இதயத்துடிப்பு, அவர் விட்டுச்சென்ற கனவுகளை தொடர்வதே கட்சியின் இலட்சியமாகவுள்ளது. இங்கு தலைமைத்துவம் என்பது ஒரு வெற்றிடமே, ஜீவனும் நானும் ஏனைய உறுப்பினர்களும் இணைந்து அவரது இலக்கை நோக்கி ஒருமித்து பயணிப்போமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் செந்தில் தொண்டமான் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய காணொளி நேர்காணலில் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தையும் இந்திய அரசாங்கத்தையும் இணைக்கும் பாலமாக தொடர்ந்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயற்படும் எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளரும் ஊவா மாகாணத்தின் முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய காணொளி நேர்காணலின் கேள்வி பதில்கள் பின்வருமாறு,

கேள்வி - தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம் பலரையும் துயரத்தில் ஆழ்தியுள்ளது. அன்றையதினம் நீங்களும் அவருடன் இருந்தீர்கள். அந்த நொடிகளை எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா.....

பதில் - கண்டிப்பாக..... அன்று பல நிகழ்ச்சிகள் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் பொதுவாக பல கூட்டங்களை நடத்தினார். வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படாமல் உள்ள இடங்களில் உடனடியாக வேலைத்திட்டங்களை ஆரம்பிக்குமாறு தெரிவித்திருந்தார். வீடமைப்புத்திட்டங்கள் தொடர்பில் குறிப்பாக ஸ்லப் வீடுகள் மலையகத்தில் அமைப்பது பற்றி கலந்துரையாடினார்.

அதன் பின்னர் மாலை வேளையில் இந்திய உயர் ஸ்தானிகரை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குமாறு அன்றையதினம் நண்பகல் என்னிடம் தெரிவித்தார். அதன் படி இந்திய உயர் ஸ்தானிகரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தெரிவித்திருந்தார். அமைச்சு வேலைத்திட்டங்கள் நிறைவடைந்த பின்னர் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான கேள்விகளை அவரிடம் நாம் எழுப்பியிருந்தோம். தேர்தலில் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்று வழிகாட்டுதல்களை வழங்கினார் எமக்கு. 

அதன் பின் நானும் ஜீவன் தொண்டமான், ரமேஷ்வரன், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா ஆகியோர் இணைந்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு சென்றோம். அன்றையதினம் இந்திய உயர் ஸ்தானிகருடன் ஒரு நீண்ட நேரம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அதில் தற்போதைய வீடமைப்புத்திட்டம் தொடர்பாக பேசப்பட்டது. அதன் போது 10 ஆயிரம் வீடுகளை ஸ்லப் முறையில் அமைக்கும் போது எதிர்காலத்தில் மக்கள் அதனை பெருப்பித்துக் கட்டமுடியும் என்று பேசியபோது அது தொடர்பில் நாளையதினம் நான் அமைச்சரவையில் பேசுவதாக ஆறுமுகன் ஐயா தெரிவித்தார். 

இந்தியத் தூதுவர் இதனை வரவேற்றார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு பற்றி கலந்துரையாடப்பட்டது. அதன் பின் பார்க் தோட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட வீடுகளுடன் ஒரு கிராமமொன்றை அமைப்பது தொடர்பிலான வேலைத்திட்டத்தை ஆறுமுகன் தொணடமான் இந்திய தூதுவரிடம் எடுத்துரைத்தார். தானும் அதில் வந்து கலந்துகொள்வதாக இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் நாங்கள் அமைச்சுக்கு சென்றோம். அங்கு இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பேசிய விடயங்கள் அனைத்தையும் எழுத்துமூலம் தயாரித்தோம். அதன் பின்னர் இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் முன்வைத்த கோரிக்கைகளை கடிதம் மூலம் தயாரித்து வழங்குமாறு தெரிவித்தார்.

அதன் பின்னர் நாங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக சென்றோம். அந்த நேரத்தில் பரத் அருள்சாமியும் எம்முடன் இணைந்து கொண்டார். அங்கு போனபோது பிரதமரின் செயலாளர் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோர் வழமையாக பேசுவதைப்போல ஆறுமுகன் தொண்டமான் ஐயாவுடன் சிரித்து பேசினார்கள். பின்னர் சிறிது நேரத்தில் பிரதமரும் வந்ததையடுத்து முதலில் சம்பளப் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார்.

அப்போது மார்ச் 31 ஆம் திகதி ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக அறிவித்திருந்தீர்கள் அது தொடர்பான அனைத்து வேலைத்திட்டங்களையும் நாம் தயார் படுத்திவிட்டோம். கொவிட் 19 நாட்டில் பரவிய நிலையில் நான் இது தொடர்பில் கதைத்த போது, நீங்கள் கொவிட் 19 நிறைவடைந்த பின்னர் அதனை நிவர்த்தி செய்வதாக தெரிவித்திருந்தீர்கள். 

தற்போது நாடு பழைய நிலைக்கு வந்துவிட்டது. அதனை அமைச்சரவையில் பேசி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு முதலாவது கோரிக்கையாக பிரதமரிடம் முன்வைத்தார். பிரதமரும் இந்த ஆவணங்களை பார்த்துவிட்டு இது ஆக்கபூர்வமான விபரங்களாக உள்ளன. அது தொடர்பில் நான் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையில் பேசி ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடு செய்வோம். அல்லது போனால் கம்பனிகளுக்கு எச்சரிக்கையை கொடுப்போம் என்று தெரிவித்தார்.

அதன் பின் வீடமைப்பு திட்டத்தைப் பற்றி பிரதமரிடம் ஆறுமுகன் தொண்டமான் ஐயா தெரிவித்தார். கடந்த காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வேலைகள் நிறைவடையாததால் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளுக்கு மக்கள் குடிபுக முடியாதுள்ளனர். அதனை நிறைவேற்ற நிதி தேவையாகவுள்ளது என்று பிரதமரிடம் கேட்டார்.  அது தொடர்பில் நீங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் தயார் படுத்துங்கள் நான் நிதியை வழங்குகின்றேன் என பிரதமர் தெரிவித்தார். அனைத்து வீடுகளையும் ஸ்லப் வைத்த வீடுகளாக மாற்றவேண்டும் என்று ஆறுமுகன் ஐயா பிரதமரிடம் தெரிவித்த போது அதற்கும் பிரதமர் ஒப்புதல் அளித்தார்.

அதைவிட மலையகத்தில் இளைஞர்கள் வந்துள்ளனர் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்படவில்லை. ஏனையவர்களுக்கு வழங்கப்படுகின்றது ஆனால் கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களிலிருந்து மலையகத்தில் வந்துள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை . அவர்களுக்கு இந்த 5 ஆயரம் ரூபா நிதியை இந்த மாதத்தில் இருந்து வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும் என்று பிரதமரிடம் தெரிவித்தார்.

இதேவேளை, வேலைவாய்ப்பு வழங்கும் போது மலையக இளைஞர்களையும் உள்ளடக்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.  அது தானே நீங்கள் இருக்கின்றீர்கள் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் தனே என்று தெரிவித்தார் பிரதமர். இதனுடன் பிரதமருக்கிடையான சந்திப்பை நிறைவுசெய்துவிட்டு வெளியேறினோம்.

அங்கிருந்து நேரடியாக வீட்டுக்கு புறப்பட்டோம். வீட்டிலும் ரொம்ப சந்தேசமாக இருந்தார் தலைவர். பின்னர் பரத் அருள்சாமியும் ரமேஷ்வரனும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.  நானும் ஜீவன் தொண்டமானும் அங்கிருந்தோம். அதன்பின்னர் நானும் அங்கிருந்து வெளியேறிச்சென்று விட்டேன். அதன் பின்னர் நான் கேள்விப்பட்டேன் அவர் வீட்டில் இருக்கும் போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதென. உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டுபோயுள்ளனர். ஆனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னர் அவர் இறந்துவிட்டார். அவரது மரணவிசாரணை அறிக்கையில், மாரடைப்பு வந்து சரியாக 2 அல்லது 3 நிமிடங்களில் இதயத்திற்கு இரத்தம் செல்வது தடைப்பட்டுவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அவர் பல கனவுகள் வைத்திருந்தார். அந்தக் கனவுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்ய வேண்டும்.  அந்த கனவுகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளது. அவர் இறுதியாக தெரிவித்த அனைத்து விடயங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிறைவேற்றும். 

கேள்வி - இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுப்பாலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காணப்படதுடன் அதில் ஆறுமுகன் தொண்டமான முக்கிய பங்கையாற்றியுள்ளார். அந்தவகையில் எதிர்காலத்தில் இலங்கை - இந்திய உறவுகளை எவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுக்கும் ?

பதில் - சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா காலத்தில் இருந்தே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் உறவுப் பாலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருந்து வருகின்றது. இந்நிலையில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் மறைவுக்கு பின்னர் ஆறுமுகன் ஐயா இலங்கை - இந்திய உறவுகளுக்கிடையில் மிகப்பெரிய உறவுப் பாலமாக இருந்தார். அந்த காலத்திலிருந்தே எம்மையும் இருநாடுகளுக்கிடையிலான பேச்சுக்களின் போது அழைத்துச் சென்றுள்ளார். எம்மையும் தமிழக அரசியல்வாதிகளுடன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அந்தத் தொடர்புகள் எப்போதும் குறையப்போவதில்லை. அந்த தொடர்புகள் இப்போதும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை மேலும் ஆழமாக வலுப்படுத்துவதுடன் இலங்கை அரசாங்கத்தையும் இந்திய அரசாங்கத்தையும் இணைக்கும் பாலமாகவே செயற்படும்.

கேள்வி - ஆறுமுகன் தொண்டமானின் மரணம் திடீரென ஏற்பட்ட சம்பவமாகவே பார்க்கப்படுகின்றது. அவர் நோய் தொடர்பில் அறிந்திருந்தாரா ? அல்லது சிகிச்சைகள் பெற்று வந்தாரா ? 

பதில் - பொதுவாக மாரடைப்பு வருவது யாருக்குமே தெரியாது . ஏதாவது அறிகுறிகள் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும். மாரடைப்பு வருவதை யாராலும் எதிர்வு கூறவும் முடியாது. அதேபோல் தான் சௌமியமூர்த்தி ஐயாவுக்கும் நுவெரலியாவில் வைத்து நெஞ்சுவலி வந்தது. வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்து கொழும்புக்கு கொண்டு வந்தோம் ஆனால் அவரும் அன்றிரவு இறந்து விட்டார். அவ்வாறு இருக்கும் போது நான் ஆறுமுகன் ஐயாவுடன் இருக்கும் காலத்தில் அவதானித்தது என்னவென்றால், மருத்துவ பரிசோதனைக்கு திகதி போட்டாலும் மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காகவே அந்த திகதிகளை காலம் தள்ளிபோடுவார். அவர் அநேகமாக உடலை பாதுகாப்பதைவிட மக்களின் குறைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்து மக்கள் பணிகளை முன்னெடுப்பார். வைத்தியசாலைக்கு செல்வதே கிடையாது. இந்த நேரத்தில் அவருக்கு இவ்வாறு மாரடைப்பு வரும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. 

கேள்வி - இவ்விதமான சூழ்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு நகரப்போகின்றது ? எதிர்கால திட்டங்கள் என்ன ? 

பதில் -  இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரையில் சௌமியமூர்த்தி ஐயா இறந்த பின்னர் ஆறுமுகன் தொண்டமான் பொறுப்பெடுத்தார். மக்கள் சேவைகள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றமடைந்து வந்துள்ளன. அதேபோன்று தலைவர் என்ற பதவிக்கு தற்போதும் அவர் உள்ளார் என்று தான் நினைக்கின்றோம். அவர் இல்லையென்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் கட்சியில் இருக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு  வேலைகளையும் பொறுப்புக்களையும் கொடுத்துள்ளார். இப்போது தலைவர் பதவி மாத்திரமே இடைவெளியாகவுள்ளது.  தலைவர் எங்களிடம் இருந்து என்னத்தை எதிர்பார்த்தாரோ ஒவ்வொருவரும் அந்தந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச்செல்வதே சரியானது. எதிர்வரும் காலங்களில் , காலத்திற்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப தேசிய சபை கூட்டப்பட்டு பதவிகளுக்கு ஏற்ப வெற்றிடங்கள் நிரப்பப்படும். 

சௌமியமூர்த்தி தொண்டமான்  ஐயா காலத்தில் ஆறுமுகன் ஐயா வேகமாகவும் விவேகமாகவும் செயற்படுவார். சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா விவேகத்துடன் செயற்படுவார். இருவரும் ஒரு ஒத்துப்போகும் தன்மையுடன் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடிந்தது. சௌமியமூர்த்தி தொண்டமான் இறந்த பின்னர் ஆறுமுகன் தொண்டமான் பொறுப்பேற்று செயற்படுத்தினார். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சந்தா வாங்காத அமைப்பாக மாற்ற வேண்டும் என அவர் விரும்பினார். இதற்குரிய மாற்றுவழிகள் குறித்து நாம் தொடர்ந்து திட்டமிட்டு வந்துள்ளோம். என்ன காரணம் என்றால், எங்களுக்கு ஒரு தொழிற்சங்கம், அலுவலகம், ஊழியர்கள் இருக்கிறார்கள். இதற்கான செலவுகள் உள்ளது. இவர்களுக்கு ஒரு மாற்றுவழியை ஏற்பாடுசெய்தால் நாம் அவர் ஆசைப்பட்டவாறு சந்தா வாங்காத அமைப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிஸை முதல் தொழிற்சங்கமாக மாறும் .

அடுத்ததாக ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் விரும்பியது மலையகத்தில் வீடுகளை ஸ்லப் வைத்த வீடுகளாக கட்டுதல். அதனை நாங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். 

மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைத்தல் தொடர்பில் ஆறுமுகன் தொண்டமான் ஐயா விரும்பியிருந்தார். இது சௌமியமூர்த்தி ஐயா காலத்தில் இருந்தே முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதனை ஆறுமுகன் தொண்டமான் இறுதிக்கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளார். அது நடைமுறைப்படுத்தப்படும் போது ஆறுமுகன் ஐயா இல்லை. ஆனால் அவரின் விருப்பின் பேரில் பல்கலைக்கழகம் வெகுவிரைவில் மலையகத்தில் ஆரம்பிக்கப்படும். 

மலையகத்தின் அனைத்து பகுதிகளிலும் கல்வித்தரம் மற்றும் பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவது தொடர்பில் நானும் அவரும் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளோம். அதனையும் நாம் நிறைவேற்றுவோம். 

அதேபோன்று மலையகத்தில் வீட்டுக்கு ஒருவரை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பவேண்டும் என்ற விருப்பு ஐயாவிடம் இருந்தது. இதைவிட காணி உரிமை பெற்றுக்கொடுத்தல் போன்ற விருப்புகளும் ஐயாவிடம் இருந்தது அதனையும் நாம் நிறைவேற்றுவோம்.

அனைத்தையும் விட அடுத்துவரும் தலைமுறை தோட்டத் தொழிலாளியாக இருக்கக்கூடாது. பால் கறப்பதற்கு இயந்திரங்கள் உள்ளன, அதேபோன்று தேயிலை கொளுந்து பறிப்பதற்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறையினர் அனைவரும் கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்று தேயிலைத் தோட்டங்களுக்கு தொழிலுக்கு செல்லாது அவர்கள் அனைவரும் வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று தான் எமது நகர்வுகள் உள்ளன. அந்த நேரத்தில் தொழிற்சங்கம் என்று ஒன்று தேவையில்லை. சமுதாயத்தை முன்னேற்றுவது என்பது எமது நோக்கம். 

கேள்வி - நீங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் கடந்த 12 வருடகாலமாக செயற்பட்டு வருகின்றீர்கள். முக்கிய பொறுப்புக்களை கையாண்டுள்ளீர்கள். அத்துடன் அரசியல் அனுபவத்தையும் கொண்டுள்ளீர்கள் . அதைவிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு குடும்ப கட்சி என்ற விமர்சனமும் உள்ளது. இந்நிலையில் நீங்கள் தலைவராக வரலாம் என்ற கருத்துக்களும் உள்ளன....

பதில் - பொதுவாக மக்களுக்கு சேவை செய்வதற்கு தலைவர் பதவியை பெற்றுக்கொண்டால் தான் சேவை செய்ய முடியும் என்றில்லை. 12 வருடங்களாக நான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் சேவையாற்றியுள்ளேன். இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து மக்களுக்கு சேவை செய்வதற்கு எமக்குள்ள பொறுப்புக்களே போதும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

எம்மிடம் இருக்கும் பொறுப்புக்களை வைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். பொறுப்புகள் இல்லாதவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

கேள்வி - பொதுவாக எல்லோரிடமும் உள்ள கேள்வி.. செந்தில் தொண்டமானா ? ஜீவன் தொண்டமானா என்ற நிலை வருமானால்...உங்கள் தீர்மானம் எவ்வாறு அமையும் ? கட்சியில் உள்ளவர்களின் ஆதரவு எவ்வாறு அமையும் ?

பொதுவாக ஜீவன் தொண்டமானும் நானும் எவ்விதமான முறுகலிலும் ஈடுபடக்கூடதென்பதில் எப்போதுமே உறுதியாக உள்ளோம். ஜீவன் தொண்டமானும் நானும் எப்போதும் ஒரு பதவிக்கு போட்டி போட மாட்டோம். அது எமது கொள்கையாகவே உள்ளது. இருவரும் ஒரே பதவிக்கு போட்டி போட்டால் தான் ஒரு சிக்கல் நிலை உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. 

அந்தப் பதவிக்கு ஜீவன் தொண்டமான் போட்டி போடுவதாக இருந்தால் நான் போட்டி போட மாட்டேன். எனக்கிருக்கும் வேலைத்திட்டத்தை நான் முன்னெடுத்துச் செல்வேன். இந்த இடத்தில் பார்க்கும் போது செந்தில் தொண்டமானா ஜீவன் தொண்டமானா என்பதில்லை முக்கியம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனம் என்றைக்குமே பிளவுபடாது இருக்க வேண்டும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு 80 வருடத்திற்கு மேற்பட்ட வரலாறு உள்ளது. இது எங்களது குடும்ப சொத்துக் கிடையாது. நாங்கள் அந்த அமைப்பில் உள்ள சேவகர்கள் தான். 80 வருட வரலாற்றில் எத்தனையோ பேரின் உடல் உழைப்பு, உயிரிழப்பு, எவ்வளவோ தியாகங்கள் உள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை கட்டியெழுப்புவதில் அனைவரது ஒத்துழைப்புகளும் உள்ளது. இது ஒரு குடும்ப சொத்து என்று அனேகர் ஒரு மாயையை வளர்த்து வைத்துள்ளனர். ஜனநாயக முறையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னோக்கிச் செல்லும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏனையவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. அந்தவகையில் எதிர்காலத்தில் சௌமியமூர்த்தி தொண்டமானும் ஆறுமுகன் தொண்டமானும் எவ்வாறான கொள்கையில் கொண்டு சென்றார்களோ அதே கொள்கையில் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பயணிக்கும். 

கேள்வி  - அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வலம் தொடர்பில் பல விமர்சனங்கள் அரசியல்வாதிகளாலும் சமூக ஊடகங்ளிலும் முன்வைக்கப்பட்டு வந்தன. அரசியல் செயற்பாடு போன்று இடம்பெற்றதாக கருத்துகள் வெளியாகின. இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?

பதில் - இது ஒரு அரசியல் கட்சி. அவர் ஒரு தலைவர், இது தொடர்பில் பல ஊடகங்களில் பல கருத்துக்கள் தேவையான கோணங்களில் வெளியாகின. அனைவருமே மலையகத்தில் இன்று ஒரு தலைவனை இழந்துள்ளார்கள் ஆனால் ஜீவன் தொண்டமானை எடுத்துக்கொண்டால் அவர் ஒரு தந்தையை இழந்துள்ளார். அப்படி பார்க்கும் போது இந்த நேரத்தில் இதை அரசியல் செய்வதென்பது அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவுக்கு ஒரு மன வருத்தத்தையும் மனவேதனையையும் அளிக்கும். இவ்வாறு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகும் கருத்தையும் விமர்சனத்தையும் பார்க்கும் போது தான் அனைவருக்கும் மன வருத்தமாகவுள்ளது.

கேள்வி - அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறு அஞ்சலி நிகழ்வில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் வே. இராதாகிருஷ்ணன் பங்கெடுத்திருந்தார். அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ.எம். சுமந்திரன் கலந்துகொண்டிருந்தார். ஆனால் இவர்களுக்கு அஞ்சலி உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென விமர்சனங்கள் வெளியாகியுள்ளதே....

பதில் - இது தொடர்பாக மனோ கணேசன் அவரது வருத்தத்தை பதிவுசெய்திருந்தார். நான் உடனடியாக அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு விளக்கத்தை கொடுத்தேன். தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஏனைய கட்சிகள் வந்து எங்கள் தலைவரைப் பற்றிபேசும் போது எமக்குத் தான் பெருமை. மாநில இறுதிச் சடங்காக இதனை திட்டமிட்டிருந்தபடியாலும் இதனை மாநில அதிகாரிகள் முன்னெடுத்தமையாலும் எமக்கு நேர வரையறைகள் கொடுக்கப்பட்டது. நல்ல நேரங்கள் வழங்கப்பட்டன மாலை 4.35 மணிக்கு காரியங்களை ஆரம்பிக்க வேண்டும் அதேநேரம் மாலை  5.30 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று. எங்களது மதக்கலாச்சாரங்களின் படி எமக்கு செய்ய வேண்டிய முறைகள் ஏராளம் இருந்தது. அத்துடன் மக்கள் வீதிகளில் இருந்து அஞ்சலி செலுத்துவதற்கு மக்கள் குழுமியதால் நேரகாலத்திற்கு இறுதி அஞ்சலி செய்யும் இடத்திற்கு செல்ல முடியாமல் போன நிலையில், அங்கு கடமையில் இருந்த உத்தியோத்தர்கள் நிகழ்வுகளை குறைத்துவிட்டனர். குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் கூட எந்த அஞ்சலி உரையையும் ஆற்றவில்லை. ஜீவன் தொண்டமான் மாத்திரமை் தந்தையென்கிற முறையில் அஞ்சலி உரையாற்றினார். அது தொடர்பில் சுமந்திரன் ஐயாவுக்கும் தொடர்பு கொண்டேன். ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை. நேரில் சந்திக்கும் போது எங்கள் மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்வேன்.

கேள்வி - இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் அவரது வாக்குறுதிகள் முக்கியமாக 1000 ரூபா சம்பளப் பிரச்சினை, அதற்காக அவர் இறுதித் தருணம் வரை எடுத்த நடவடிக்கைகள் அவரின் மறைவையடுத்து மறைந்து விடுமா ?

பதில் - ஆறுமுகன் தொண்டமான் ஐயா வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையுமே இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் உள்ள ஒவ்வொரு பொறுப்பாளரும் முழுமையாக நிறைவேற்ற உண்மையாக செயல்படுவோம். ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினையுட்பட அனைத்தையுமே நாங்கள் தீர்த்து வைப்போம்.

கேள்வி - மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எவ்வாறு சாத்தியப்படுத்தும் ? இதுவும் ஒரு தேர்தல் வாக்குறுதியாக அமைந்து விடுமா ?

பதில் - மலையகத்தில் பல்கலைக்கழகம் என்ற வேலைத்திட்டம் அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கீழ் காணப்படுகின்றது. இது சம்பந்தமாக ஆறுமுகன் தொண்டமான் ஐயா பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். அதன்படி மலையகத்தில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். அதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. தலைவரின் இலட்சிமும் அதுவாகத்தான் இருந்திருக்கின்றது. இலட்சியத்தை கண்டிப்பாக நாங்கள் நிறைவேற்றுவோம். 

கேள்வி - ஜீவன் தொண்டமானுக்கு அரசியல் அனுபவம் குறைவு என்று பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற நிலையில் இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன ?

பதில் - கடந்த காலங்களில் ஆறுமுகன் தொண்டமான் ஐயா கடந்த 26 வருட கால பாராளுமன்ற அரசியல் வாழ்க்கையில் எடுத்த முக்கியமான முடிவுகளில் ஜீவன் தொண்டமானுக்கு முக்கிய பங்குள்ளது. ஜீவன் தொண்டமானுக்கு முக்கியமான பங்கு இருக்கும் போது, ஜீவன் தொண்டமான் எங்கள் அனைவருடன் இணைந்து முடிவெடுக்கும் போது அவருக்கு 26 வருட பாராளுமன்ற அனுபவமும் கிடைக்கின்றது. அதனால் அவருடைய அரசியல் அனுபவத்தைப் பற்றி கேள்விகள் எழுப்புவது அவரைப் பற்றி தெரியாவதர்களுக்கு புரியாதபுதிராக இருக்கும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்குள்ளே இருக்கும் செயற்பாட்டு கட்டமைப்பை தெரிவந்தவர்களுக்கு ஜீவன் தொண்டமானுக்கு சிறந்த அரசியல் அனுபவம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.