(எம்.மனோசித்ரா)

மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தயாராகிக் கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளின் உண்மை தன்மை தொடர்பில் அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். அத்தோடு இந்த ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இறுதி அறிக்கை நாட்டுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவிற்கு இன்று திங்கட்கிழமை அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவுடன் மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராகிக் கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தல்களை பெற்றுக் கொள்வதற்காக இந்த கடிதம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பில் சர்ச்சைக்குரிய நிலைவரம் கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் நிலவிய போதிலும் 2019 ஒக்டோபர் மாதத்தில் அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியான பின்னரே அது தீவிரமடைந்தது.

எவ்வாறிருப்பினும் நவம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட போதிலும் அதற்கு பலத்த எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டதால் அந்த தீர்மானம் கைவிடப்பட்டது. அப்போது நடைபெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலில் பேசப்பட்ட பிரதான விடயங்களில் ஒன்றாகக் காணப்பட்ட இந்த ஒப்பந்த விவகாரம் தொடர்பில் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தினால் அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது. அதில் நவம்பர் 16 ஆம் திகதி தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் தெரிவு செய்யப்படும் புதிய ஜனாதிபதியுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் பின்னர் தற்போதைய அரசாங்கம் மில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் மீண்டும் ஆராய்வதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் குழுவொன்றை நியமித்தது. அந்த குழுவின் உள்ளடக்கம் , ஆயுட்காலம் மற்றும் அறிக்கை சமர்ப்பித்தல் என்பன தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு பதிலளித்த அப்போதைய சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறித்த ஒப்பந்தத்தை பரிசீலிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தின் போது குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் லலிதசிறி குணருவன், டீ.எஸ்.ஜயவீர, நிஹால் ஜயவர்தன, நாலக ஜயவீர உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் , இந்த குழுவின் இறுதி அறிக்கையை சமப்பிப்பதற்கு 4 மாத கால அவகாசம் தேவைப்படும் என்றும் கூறினார்.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன ஒப்பந்தத்தை பரிசீலனை செய்யும் குழு பிரதமரிடம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் அதன் பரிந்துரைகளுக்கு அமைய அதில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்று கூறினார். அத்தோடு அதில் சில உறுப்புரைகளில் நாட்டின் இறையான்மைக்கும் மற்றும் அரசியலமைப்பிற்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலான விடயங்கள் காணப்படுவதால் அது இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் அமையும் என்பதால் அவ்வாறான விடயங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாட தயாராக இருப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன இதன் போது குறிப்பிட்டார்.

நிதி தட்டுப்பாட்டை எதிர் நோக்குதல் மற்றும் கடன் நெருக்கடிகள் காணப்படும் நாடொன்றுக்கு முதலீட்டுக்கு தேவையான நிதி வளத்தை பெற்றுக் கொள்வது முக்கியமானதென மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தில் சுட்டிகாட்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட்டு தற்போது 6 மாதங்களை அண்மித்துள்ள நிலையில் இது வரையில் அந்த குழுவின் இறுதி அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கவில்லை. அதன் இறுதி பரிந்துரைகள் என்ன என்பது பற்றி நாட்டுக்கு தெரியப்படுத்தவில்லை.

இந்த நிலைமைக்குள் அரசாங்கம் மில்லேனியம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தயாராகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் எந்தளவிற்கு உண்மை தன்மை உடையவை என்பது பற்றியும் ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை தொடர்பிலும் தெரியப்படுத்துமாறு நாட்டு பிரஜை என்ற ரீதியில் கேட்டுக் கொள்கின்றேன்.