அமெரிக்க - சீன உறவுகள் : அதிகரிக்கும் பதற்றநிலை

08 Jun, 2020 | 10:44 PM
image

* புதிய வகையான பனிப்போரொன்றைத் தவிர்ப்பதற்கு இருநாடுகளும் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்.

சீனாவிலிருந்து பயணிகள் விமானங்கள் ஜூன் 16 ஆம் திகதி முதல் வருவதற்கு தடை விதிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் எடுதத தீர்மானம் இருநாடுகளுக்கும் இடையிலான அதிகரிக்கும் பதற்றநிலையின் இன்னொரு வெளிப்பாடே தவிர வேறொன்றுமில்லை. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2018 இல் தொடங்கிய வர்த்தகப்போரொன்றுக்கு இன்னமும் முழுமையாகத் தீர்வு காணப்படவில்லை. கொவிட் - 19 தொற்றுநோயை சீனா கையாண்ட முறை தொடர்பாக அந்நாட்டை ட்ரம்பும், அவரது நிர்வாகத்தின் ஏனைய அதிகாரிகளும் கடந்த சில மாதங்களாக அந்நாட்டைத் தாக்கி வருகிறார்கள். 

ஹொங்கொங் விசேட நிர்வாகப் பிராந்தியத்திற்கென புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்திய பெய்ஜிங்கின் நடவடிக்கையை ஆட்சேபித்து அந்தப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா இதுவரை வழங்கிவந்த விசேட வர்த்தக அந்தஸ்த்தை முடிவிற்குக் கொண்டு வருவதற்கும் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது.

சீனா மீது வாஷிங்டன் திரும்பத் திரும்பத் தொடுக்கின்ற தாக்குதலும், பெய்ஜிங்கின் பதிலடி நடவடிக்கைகளும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமும், இரண்டாவது பெரிய பொருளாதாரமும் புதியதொரு பனிப்போருக்குள் பிரவேசித்திருக்கின்றன போன்ற தோற்றப்பாட்டைக் காட்டுகின்றன.

கொவிட் - 19 தொற்றுநோய் பரவத்தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் மாதத்தல் சர்வதேச விமான பறப்புகள் மீது கட்டுப்பாடுகளை சீனா அறிமுகப்படுத்தியிருந்தது. அந்தக் கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை இன்னமும் நடைமுறையில் இருக்கின்றன. இத்தகைய தகராறுகள் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பின் ஊடாகத் தீர்வு காணப்படக்கூடியவை ஆகும். சீனா ஏற்கனவே இதுவிடயத்தில் தளர்வுகளைச் செய்வதற்கான சமிக்ஞைகளைக் காட்டியிருக்கிறது. அதாவது ஜூன் 8 முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமானப்பறப்புக்களை மீண்டும் தொடங்க வெளிநாட்டு விமானசேவைகளை பெய்ஜிங் அனுமதிக்கிறது. 

ட்ரம்பிடம் வேறு சிந்தனை ஏதாவது இருக்கிறதோ இல்லையோ, சீனாவை நோக்கிய அமெரிக்காவின் ஒட்டுமொத்த அணுகுமுறையே பெரிய பிரச்சினையாகும். கடந்த நான்கு வருடங்களில் அந்த அணுகுமுறையில் பகைமை கடுமையாக அதிகரித்திருந்தது. வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் தொடங்கி தொற்றுநோய் மற்றும் ஹொங்கொங் வரை சமருக்கான கோடுகள் வரையப்பட்டுவிட்டன - ஒரு திரிபுவாத வல்லரசு என்று பென்டகன் 2018 இல் அழைத்த சீனா வாஷிங்டனின் பிரதான எதிரியாக இருக்கிறது.

அதாவது பனிப்போர் காலத்தின் போது சோவியத் யூனியன் அமெரிக்காவிற்கு எவ்வாறு இருந்ததோ அந்த நிலையை இன்று சீனா பிடித்திருக்கிறது. சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருந்த அளவிற்கு, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் இன்னும் மோசமானவையாக மாறவில்லை. பெய்ஜிங்கும் வாஷிங்டனும் பொருளாதார மற்றும் நிதி ரீதியில் பிணைக்கப்பட்டவையாக இருக்கின்றன. கெடுபிடி யுத்தகாலத்தில் இருந்ததைப் போன்று உலகம் இரண்டு கோட்பாட்டு ரீதியான முகாம்களாகப் பிளவுபட்டிருக்கவில்லை. இருநாடுகளுக்கும் இடையில் இராணுவ மோதலொன்றுக்கான சாத்தியம் மிகமிகக் குறைவு. 

ஆனால் 1970 களில் சீனாவுடனான உறவுகளில் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் மாற்றத்தை ஏற்படுத்திய பிறகு, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டுப்பங்காண்மையை வரையறை செய்த ஒத்துழைப்பு மற்றும் அமைதியான வர்த்தக யுகம் ஒரு ஆக்ரோஷமான தலைமைத்துவப் போட்டிக்கும், பரஸ்பர அவநம்பிக்கை ஆழமாவதற்கும் வழிவகுத்திருப்பது போல் தோன்றுகிறது.

வைரஸ் தொற்று நோயினாலும், மிகப்பெரிய உலகப்பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு இப்பொழுது ஏற்பட்டிருக்கும் ஆழமான பொருளாதாரப் பின்னடைவினாலும் நெருக்குதலைச் சந்தித்திருக்கும் தேர்தல் வருடமொன்றில் தனக்கேற்பட்ட துரதிஷ்டங்களுக்குப் பழியைப் போடுவதற்கு ஒரு எதிரியைக் கண்டுபிடிக்க ட்ரம்ப் முயற்சித்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் சீனாவுடனான பதற்றநிலை மேலும் கடுமையாகத் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் ஒரு எதிரியை விரும்பியது. அந்த எதிரியை அது சீனாவில் கண்டுபிடித்தது. இருநாடுகளின் தலைவர்கள் தற்போதைய தங்களது போக்குகளை மாற்றி, இழந்துபோன பரஸ்பர நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பவில்லையானால் புதிய வகையான ஒரு பனிப்போர் உலகத்தின் மீது திணிக்கப்படும்.

(த இந்து)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32
news-image

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறுபான்மையினருக்கு...

2024-12-08 15:49:06
news-image

மிரட்டப்படும் எதிர்க்கட்சிகள்

2024-12-07 11:12:36
news-image

வரலாற்றுத் திருப்பமாகுமா?

2024-12-07 10:36:56
news-image

ஓரிரவு கொள்கை வீதத்தால் இலங்கையின் பொருளாதாரத்தில்...

2024-12-08 11:00:25
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆயுள் அதிகம்

2024-12-08 12:55:25
news-image

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் சிபாரிசுகளில் தொடரும் மர்மம்...

2024-12-08 11:08:15