(எம்.எம்.மின்ஹாஜ்)

இனிமேல் ஐக்கிய தேசியக் கட்சியே எனது கட்சியாகும். எனது தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாகும். ஆகையால் நான்  ஏமாற்றும்  செயற்பாடுகளில் ஈடுபடமாட்டேன். 2020 ஆம் ஆண்டு நாட்டின் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியே தீரும். அதற்காக முழு மூச்சுடன் நான் செயற்படுவேன் என பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனையை கொண்ட பூதங்கள் மீளவும் உயிர்த்தெழ ஆரம்பித்துள்ளன. ஆகையால் இந்த பூதங்களை விரட்டியடித்து நல்லாட்சியை ஏற்படுத்த அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

ஜனநாயகக்கட்சியின் தலைவரும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டார். இந்நிகழ்வு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதன்போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி எனக்கு பாரியளவில் உதவிகளையும் ஒத்தாசைகளையும் புரிந்துள்ளது. என்னை அரசியலில் பிரவேசிக்க வைத்த பெருமை ஐக்கிய தேசியக் கட்சியையே சாரும். ஆகவே இந்த கட்சிக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளே எனக்கு அதிகளவில் கிடைக்கபெற்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல தருணத்தில் எனக்கு ஆதரவு வழங்கி செயற்பட்டிருந்தார். 

எனினும் குறித்த தேர்தலில் என்னால் வெற்றி பெற முடியாமல் போனாலும் எனது கொள்கைகளும் நோக்கங்களும் தற்போது அமுலாகியுள்ளமை பராட்டத்தக்கது. நாட்டில் ராஜபக்ஷ குடும்ப ஆட்சி தோற்கடிக்கப்பட்டு , ஊழல் மோசடி இல்லாமல் ஆக்கப்பட்டு, நல்லாட்சி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எனது நோக்காக இருந்தது. ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியில் அது நிறைவேறியுள்ளது.