வாரிசு அரசியலும் கற்றுக்கொண்ட பாடங்களும் 

08 Jun, 2020 | 08:38 PM
image

சி.சி.என்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என  ஒரு தமிழத்திரைப்படத்தில்  நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கூறுவதில் பரம்பரை அரசியலும்  வாரிசு அரசியலும் கூட இடம்பிடிக்கின்றது.  இதில் என்ன ஆச்சரியங்கள் என்றால்  பரம்பரைக்கும்  வாரிசுகளுக்கும்  காலங்காலமாக வாக்களித்து வரும் மக்களில் ஒரு கூட்டமே திடீரென ‘எத்தனை காலத்துக்குத் தான் வாரிசுகளுக்கே வாக்களிப்பது மாற்றி யோசிப்போமே என்று கூறுவதாகும்.  

ஆனால் இறுதியில் என்ன நடக்கும்? எந்த காலத்திலும் தலைவர்கள் எதை செய்தாலும் தியாகமாகவே பார்க்கும்  தொண்டர்கள் தாம் ஏதாவது செய்தால் துரோகிப் பட்டம் கிடைக்கும் என வழமையான தெரிவையே மேற்கொள்வர். அதாவது  தலைவர் கைகாட்டும் அல்லது கை காட்டிச்சென்ற வாரிசுகளுக்கே தமது ஆதரவை தருவர். இது தான் மலையக அரசியலிலும் இடம்பெற்று வருகின்றது இனியும் அது தான் இடம்பெறும் . அதில் எந்த மாற்றங்களும் இல்லை. 

மாற்று அரசியல் தெரிவு என்றாலும் கூட  மலையகத்தில் என்ன தான் நடந்தது? மகனும் மகளும் வரவில்லையே தவிர குடும்ப அரசியல் செயற்பாடுகளிலிருந்து  எந்த அரசியல்வாதியும் விடுபடவில்லையே? அரசியல் பிரமுகரின் மகனோ அல்லது மகளோ  குறைந்தது ஒரு  உள்ளூராட்சி சபை ஒன்றில் சரி உறுப்பினர்களாக  இருக்கின்றார்களே?  அல்லது மாமானாரோ சகோதரரோ அவர்களின் இல்லதரசிகளோ  அரசியலில் ஈடுபடவில்லையென யாராவது கூறட்டுமே?

சரி இவர்களை எல்லாம் தெரிவு செய்தது யார்?  வாரிசு அரசியலையும் குடும்ப அரசியலையும் விமர்சிக்கும் மக்கள் கூட்டம் தானே ? தவறு எங்கு நடக்கின்றது என்பது இப்போது புரிகிறதா? ஆம் அந்த புரிதல் எல்லாமே அரசியல் அல்லது தொழிற்சங்க தலைவர்களின் அனுபவமே. நாம் இப்போது பேசுவது மலையக மக்களையாகும். அவர்களில் பெருந்தோட்ட தொழிலாளர் சமூகமாகட்டும், கல்வி அல்லது வர்த்தக சமூகமாகாட்டும் , அனைவரையும் புரிந்து தெரிந்து அரசியல் செய்வது தான் மலையக அரசியல்வாதிகளின் இராஜதந்திரம்.  இதை ஆரம்பத்தில் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானும்  பின்பு இ.தொ.காவிலிருந்து பிரிந்து சென்று ம.லையக மக்கள் முன்னணியை தன் வசமாக்கிய வே.இராதாகிருஷ்ணனும்  இறுதியாக அமரர் ஆறுமுகன் தொண்டமானும் செய்தார்கள்.  இதில் என்ன தப்பு? அவர்கள்  கை காட்டியவர்களுக்கு வாக்களித்து அதிகாரத்தை கொடுத்தவர்கள் இப்போது புதிதாக பேசுவதற்கு என்ன உள்ளது? குறித்த கட்சி பரம்பரை அரசியல் செய்கின்றது என குற்றஞ்சாட்டி வந்தவர்கள்  பாடம் புகட்டுகிறோம் என அடுத்த கட்சிக்கு ஆதரவளித்து அங்கு வாரிசுகளுக்கு  வாக்களித்தார்கள். அதுவும் தொடரவே  பின்பு வேறு கட்சிக்கு மாறி அங்கு குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்களித்தார்கள். கட்சிகள் தான் மாறினவே ஒழிய எங்கும் வாரிசு, குடும்ப, பரம்பரை அரசியல் மாறவில்லை. 

கற்றுக்கொண்ட பாடங்கள்

மலையகத்தில் நீண்ட கால அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு ஒரு விடயம் நன்றாகவே புரிந்திருக்கும். அதாவது தாம் அங்கம் வகிக்கும் கட்சியில் எப்போதும் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை தலைவர்களாகவே இருக்கும் இவர்கள் எக்காரணம் கொண்டும் அதிகாரத்தைப் பிடிப்பதற்கு எத்தனிப்பதில்லை. ஏனென்றால் அது தமக்குக் கிடைக்காது என்பது நன்றாகவே தெரியும். மேலும் மாற்றுக்கட்சிகளிடம் சென்று தஞ்சமடைவதும் சாத்தியமாகாது. ஏனென்றால் அங்கு நீண்ட காலமாக இருப்பவர்கள், இவர்களை புழு பூச்சி போல் தான் பார்ப்பர். மேலும் அங்கிருந்து வந்தவர் இங்கிருந்து செல்லமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே என்ற சந்தேகம் தலைமைக்கும் இருக்கும். ஆகவே அண்மைக்காலமாக மலையகத்தின் சிரேஷ்ட கட்சிகளில் இந்த கட்சித்தாவல்கள் என்பது, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அளவிலேயே  இருக்கின்றதென்பது உண்மை. 

தமக்குப்பிறகு தமது வாரிசுகளை ஏன் நியமிக்க வேண்டும் என்பதில்  தலைமைகள் பல பாடங்களை கற்றுக்கொண்டிருக்கின்றன.  உதாரணமாக இ.தொ.காவின் வளர்ச்சியில் தூணாக விளங்கிய எம்.எஸ்.செல்லச்சாமி பொதுச்செயலாளர் பதவியை கொண்டிருப்பது ஆபத்து என்பதை இறுதியில் விளங்கிக்கொண்ட  அமரர் தொண்டமான் எவ்வித சிரமங்களுமின்றி  அவரை தூக்கியெறிந்தார் அந்த இடத்தில் தனது மகன் வழி வாரிசான ஆறுமுகனை அமர்த்தி அழகு பார்த்தார். அதற்கு முன்பதாகவே அவரது மகன் இராமநாதனை மாகாண தமிழ்க் கல்வி அமைச்சராக  அமர்த்தி பார்த்து விட்டார் என்பது வேறு கதை. தொழிலாளர்கள் சந்தா செலுத்தியதாலும் அந்த பணத்திலேயே அமைப்பு கட்டியெழுப்பப்பட்டது என்பதினாலும்  அவர்களில் ஒருவரை ஏன் அழகுபடுத்தி பார்க்கக் கூடாது என்றெல்லாம் கேட்கக் கூடாது. அவர்களுக்கு வேறு பதவிகள் இருக்கின்றன.  ஆனால் அந்த அமைப்பிலிருந்து வெளியேறி புதிய கட்சி ஆரம்பித்த அமரர் சந்திரசேகர் வேறு மாதிரி யோசித்தார். மலையக மக்கள் முன்னணியை மக்கள் கட்சியாக ஆரம்பித்தார். மாற்றுச்சக்தியாக திகழ்ந்தார். ஆனால் இடையில் மரணித்து விட்டார். பின்பு என்ன நடந்தது? அவரது மனைவிக்கு தலைமைப் பதவி சென்றது. அந்த அம்மையாருக்கு அரசியல் சரிபட்டு வரவில்லை. ஒரு கட்டத்தில் கட்சி காணமால் போனது. இ.தொ.காவிலிருந்து பிரிந்து சென்ற வேலுசாமி ராதாகிருஷ்ணன் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார். மாற்றங்கள் நடந்தன. தனது வாரிசை  மாகாண சபை உறுப்பினராக்கினார். திருமதி சந்திரசேகரன் புறக்கணிக்கப்படுவதாக கதைகள் வந்ததும் அமரர் சந்திரசேகரனின் மகளை  பிரதி செயலாளராக்கினார். மாகாண சபை தேர்தலில் இடம் தரப்படும் என்று கூறப்பட்டது. அடுத்த பொதுத்தேர்தலில் நானே  வேட்பாளர் என்றார். பின்பு என்ன நடந்தது ? கட்சி ஸ்தாபகரின் வாரிசு பொறுத்தது போதும் என பொங்கியெழுந்து சுயேட்சையாக போட்டியிட வேண்டிய நிலைமை. அதாவது இ.தொ.காவிலிருந்து அமரர் சந்திரசேகர்  வெளியேறினார். ஆனால்  தனது தந்தையின் கட்சியிலிருந்து அனுஷா வெளியேற்றப்பட்டிருக்கிறார்.  அவருக்கு சட்ட ரீதியாக கடிதமும் அனுப்பப்பட்டிருக்கின்றது. 

ஆகவே இதெல்லாம் இ.தொ.காவிலும் நடக்கும் என்று ஏன் அமரர் ஆறுமுகன் கணக்குப் போட்டிருக்க முடியாது? அது தான் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள். ஆகவே சரியான நேரத்தில் தனது வாரிசை கட்சி ஊடாக களத்திலிறக்கி விட்டார். இப்போது புதிதாக ஒன்றுமே நடந்து விடப்போவதில்லை. நிச்சயமாக சில மாதங்கள் ஏன் வருடங்கள் சென்றாலும் கூட அவரின் வாரிசு தான் தலைமைத்துவ பொறுப்பை ஏற்கப்போகின்றது. இது மலையக அரசியலில் வழமையாக இடம்பெறும் காட்சிகள் என்ற படியால் வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் எல்லாம் கட்சியிலுள்ளவர்களை ஒன்றும் செய்யப்போவதில்லை. 

தற்போதைய மலையகத்தின் அரசியல் சூழ்நிலைகள் வேறு. புதிய கட்சிகள் தொழிற்சங்கங்களெல்லாம் தோற்றம் பெற்று நிலைத்து நிற்க முடியாது. தாம் நிலைத்திருக்க வேண்டும் என பாரம்பரிய அல்லது பிரதான கட்சிகளின் இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்கள் நினைப்பதால் வேறு வழியின்றி வாரிசு அரசியலை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளே இங்கு அதிகம். அது தான் தற்போது அமரர் ஆறுமுகனின் மறைவுக்குப் பிறகு இ.தொ.காவிலும் நடக்கின்றது. 

கற்றுக்கொண்ட பாடங்கள் என்ற அனுபவம் என்பது கட்சிகளின் தலைமைகளுக்கு மட்டுமல்ல…. குறிப்பிட்ட கட்சிகளின் இரண்டாம் நிலை தலைவர்களுக்கும் தான். ஆகவே அந்த செல்நெறியே தற்போது மலையக அரசியலை ஆட்டுவித்துக்கொண்டிருக்கின்றது. இதை தடுத்து நிறுத்துவது கடினம். இனி இந்த சூழ்நிலையிலேயே மலையக அரசியல் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. 

இது வேண்டாம் என்று கூறும் வாக்காளர்கள் தாராளமாக மாற்று கட்சிகளுக்கு ஆதரவு தரலாம் என்பது எழுதப்படாத விதி ஆனால் அங்கும் வாரிசு அரசியல் தோற்றம் பெறாது என்பதற்கு எந்த உத்தரவாதங்களும் இல்லை. 

அதே வேளை இது வேண்டாம் என்று கூறும் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள் கட்சியை விட்டே செல்லலாம் என்பது வாரிசுகளை குளிர்விக்க தயாராகவிருப்பவர்களின்  குரல். ஆனால் அவர்கள் செல்லும் இடங்களில் வரவேற்பு எப்படியிருக்கும் என்பது ஏற்கனவே அவ்வாறு போனவர்களின் கற்றுக்கொண்ட பாடங்களாக இருக்கும். கட்சிகளில் உள்ளவர்களும் வாக்காளர்களும் என்ன முடிவு செய்தாலும் அங்கு புதிதாக ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பதே யதார்த்தம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49