பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி மற்றும் தற்போதைய ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமட் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று  உறுதிசெய்யப்பட்டுள்ளது.

61 வயதான அப்பாஸி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கட்சியின் மூத்த துணைத் தலைவராக இருக்கும் அப்பாஸி, ஊழல் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பால் தனது கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் பதவி இழந்த  பின்னர் 2017 ஆகஸ்ட் முதல் 2018 மே வரை பிரதமராக பணியாற்றினார்.

கொரோனா வைரஸ் பரிசோதனை அறிக்கையைப் பெற்ற பின்னர் அவர் தனது வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று அவரது கட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மத் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி  இருப்பதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஷேக் ரஷீத் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்," என்றும், அவர் சுய தனிப்படுத்தலில் உள்ளார் என்றும் மருத்துவர்களின் ஆலோசனையின்படி இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி  தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான ஷர்ஜீல் மேமனுக்கும் ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்பின் மாகாண சட்டமன்ற உறுப்பினர் சவுத்ரி அலி அக்தரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

செய்தித் தொடர்பாளர் அக்தர் வீட்டில் தனிமையில் இருப்பதாகவும், வைரஸின் அறிகுறிகளைக் காட்டிய பின்னர் தன்னைத்தானே பரிசோதித்ததாகவும் பகிர்ந்து கொண்டார். 2018 தேர்தலில் பஞ்சாப் சட்டமன்றத்தின் பைசலாபாத் III இலிருந்து அக்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு மாகாண அமைச்சர் உட்பட குறைந்தது நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் வெளியுறவு அலுவலகத்தில் இரண்டு மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட, ஐந்து பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக நேற்று வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் 103,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு,2,067 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.