-சத்ரியன்

நாடாளுமன்றத்தைக் கலைத்தும், பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கும், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மனுக்களையும், உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.

இந்த மனுக்களை 10 நாட்களாக பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட பின்னரே, உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்திருக்கிறது.

10 நாட்களாக, மனுதாரர்கள் தரப்பு, மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் செவிமடுக்கப்பட்டு, 15 இடையீட்டு மனுதாரர்களின் கருத்துக்களும் அறியப்பட்ட பின்னரே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட, இதுவே ஒரு விசாரணை போல அமைந்திருக்கிறது. இந்த மனுக்களை சிவில் செயற்பாட்டாளர்களும், எதிர்க்கட்சிகளும் தான் தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டதானது, யாருக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது- யாருக்கு தொல்வியாக அமைந்திருக்கிறது என்ற வாதங்கள் இனி முன்னுரிமைப்படுத்தப்படும்.

தேர்தலை பிற்போடும் நோக்கிலேயே இந்த மனுக்களை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்திருப்பதாக, அரசதரப்பு குற்றம் சாட்டியிருந்தது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னரும் கூட, எதிர்க்கட்சிகள் தேர்தலை இழத்தடிக்க முயன்றன என்றும், அதற்கு நீதிமன்றம் சரியான தீர்ப்பை அளித்து விட்டது என்றும், அரசதரப்பு மகிழ்ச்சி வெளியிட்டிருக்கிறது.

ஆக, உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு, எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த தோல்வி என்றே ஆளும்கட்சி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் நீதித்துறை சரியாக செயற்பட்டிருக்கிறது என்று, ஆளும்கட்சி பிரசாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. வரும் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுவதற்கான ஒரு முக்கிய கருப்பொருளாக, ஆளும்கட்சி இதனைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது.

ஆனால், மக்களின் பாதுகாப்புக்காகவே தாங்கள் நீதிமன்றத்தை நாடியதாகவும், தேர்தலுக்குப் பயந்து அல்ல என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியிருக்கிறார்.

அதுபோலவே, தேர்தலை எதிர்கொள்ள அஞ்சுகிறார்கள் என்று ஆளும்கட்சியினரால் குற்றம்சாட்டப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட, தாங்கள் எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என்று கூறியுள்ளது.

உயர்நீதிமனறத்தின் தீர்ப்பு எதிர்க்கட்சிகளின் முயற்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அரசாங்கத்துக்கு சாதகமான முறையில் சூழ்நிலைகள் அமைந்திருக்கின்றனவா என்பதே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம். எப்படியாவது விரைவாக தேர்தலை நடத்தி முடிப்பது தான் அரசாங்கத்தின் இலக்காக இருந்தது.

கொரோனா தொற்றினால் நாட்டின் பொருளாதாரம் மோசமாக சீரழிந்து விட்டது. அரசாங்க செலவுகளுக்கே நிதி இல்லை. அதனைச் சமாளிக்க புதிய நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதனால் எதிரகாலத்தில் பணவீக்கம் மோசமடையும், பொருளாதார நெருக்குவாரங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் நாணயத் தாள்களை அச்சிட்டு அரசாங்கம் நிலைமையை சமாளிக்க முற்பட்டாலும், வெளிநாட்டு நாணயக் கையிருப்பு கரைந்து போய் விட்டது. இதனால், இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது.

இவையெல்லாம் அடுத்து வரும் மாதங்களில் அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை தீவிரப்படுத்தும். தற்போதுள்ள சூழலில் – பெரும்பாலான குடும்பங்கள், அரசாங்கத்திடம் இருந்து இரண்டு முறை 5000 ரூபா கொடுப்பனவை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது கொடுப்பனவை எதிர்க்கட்சிகள் தடுத்து விட்டன என்ற குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு, வாக்குகளை அறுவடை செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அதனால் தான், ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதற்கு ஏற்ற சூழல் உருவாகி விட்டது என்பதைக் காட்டுவதற்கு அரசாங்கம் பல்வேறு தளர்வுகளை கடந்த சில வாரங்களாக அறிவித்தும் வருகிறது.

ஆனால் கொரோனா தொற்று இன்னமும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. வெளிநாட்டில் இருந்து திரும்பியோர் தவிர, இராணுவத்தினர், கடற்படையினர் மத்தியில் இன்னமும் தொற்று கண்டறியப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இயல்பு நிலை திரும்பி விட்டது என்று கூறி நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறும் கனவில் இருந்த ஆளும்கட்சிக்கு, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பெரும் சவாலாக அமைந்தன. அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது அரசாங்கத்துக்கு வெற்றியளித்துள்ளதாக வெளிப் புறத்தில் தென்பட்டாலும், இது அரசாங்கத்துக்கு கிடைத்த முழு வெற்றியல்ல.

அரசாங்கம் திட்டமிட்டபடி, ஜூன் 20ஆம் திகதி பொது தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டிருந்தால், அதுவே அரசாங்கத்தின் வெற்றியாக அமைந்திருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பொதுத் தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்களின் மீதான பரிசீலனையின் தொடக்கத்திலேயே, தாங்கள் ஒரு விடயத்தில் வெற்றியைப் பெற்று விட்டதாக ஜனதாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கூறியிருந்தார். அது சரியானதே.

மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட போது, முதல் நாளிலேயே, தற்போதைய சூழலில் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு எதிராகவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த திகதியில் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவே அறிவித்த நிலையில், எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த விடயம் நடந்தேறி விட்டது.

ஆனால், எதிர்க்கட்சிகள் இன்னும் சில மாதங்கள் குறிப்பாக செப்ரெம்பர் வரை தேர்தலை பிற்போட வேண்டும் என்று கருதின. கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தேர்தலை நடத்தலாம் என்றே குறிப்பிட்டன.

அந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறாவிடினும், ஜூன் 20இல் தேர்தலை நடத்துவதை தடுப்பதில் இந்த மனுக்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.

இந்த மனுக்களின் மூலம் தேர்தலை தள்ளிவைப்பதும், நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதும் தான் எதிர்க்கட்சிகளின் இலக்காக இருந்தது. ஆனால் எந்தச் சூழலிலும் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில்லை என்று ஜனாதிபதியும் பிரதமரும் திட்டவட்டமாக கூறியிருந்தனர்.

நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், நாடாளுமன்றத்தைக் கூட்டப் போவதில்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றப் போவதில்லை என்ற தொனியில், அவர் அவ்வாறு கூறவில்லை.

உயர்நீதிமன்றம் கலைப்பை ரத்து செய்தாலும், நாடாளுமன்றத்தைக் கூட்டாமல், தவிர்ப்பதற்கு தனக்கு வழிகள் உள்ளன என்பதையே அவர் குறிப்பிட்டிருந்தார். நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விட்டு, மீண்டும் கலைப்பு அறிவித்தலை வெளியிடலாம். அதற்குள்ளாகவே நாடாளுமன்றம் இயல்லபாகவே செப்ரெம்பரில் கலைந்து விடும் என்று மாற்று திட்டங்களை அரசாங்கம் வைத்திருந்தது.

இவ்வாறான முடிவில் அரசாங்கம் இருந்த சூழலில், உயர்நீதிமன்றம் நாடாளுமன்ற கலைப்பு உத்தரவுக்கு எதிராக தீர்ப்பை அளித்தாலும், அது எதிர்க்கட்சிகளின் வெற்றியாக அமைந்து விடாது. ஏனென்றால் அவர்கள் எதிர்பார்க்கும், நாடாளுமன்றத்தை மீளக் கூட்டும் திட்டம் நிறைவேறியிருக்காது.

எனவே, இரண்டாவது விடயத்தில் கூட, எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்து விட்டன என்று குறிப்பிட முடியாது. இவ்வாறானதொரு நிலையில் இருந்து பார்க்கும் பாது, அடிப்படை உரிமை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதானது அரசாங்கத் தரப்பின் வெற்றியாகவோ, எதிர்க்கட்சிகளின் தோல்வியாகவோ அடையாளப்படுத்தக் கூடிய ஒன்று அல்ல.

ஆனால், இதனை எதிர்க்கட்சிகளின் தோல்வியாகவே ஆளும்தரப்பு பிரகடனம் செய்யப் போகிறது. வரும் நாட்களில் அதனையே பெரும் பிரசாரமாக மாற்றப் போகிறது.

2018 ஒக்ரோபர் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால், இழந்து போன கௌரவத்தை, மீளக் கட்டியெழுப்புவதாற்கான வாய்ப்பாக ஆளும்கட்சி இந்த உத்தரவைப் பயன்படுத்த முயற்சிக்கும்.

இந்தநிலையில், சாதாரண மக்கள் இதனை எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறார்கள் என்பதே முக்கியம். அவர்கள் இது யாருக்கு சாதகமானது என்று கருதுகிறார்கள் என்பது கூட, தேர்தலில் தாக்கத்தைக் செலுத்தக் கூடிய காரணிகளில் ஒன்றாக இருக்கக் கூடும்.