(எம்.ஆர்.எம்.வஸீம்)

சனிக்கிழமைகளில் தபால் நிலையங்களை மூடும் தீர்மானத்தை தொடர்ந்து செயற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்திருக்கின்றது.

சனிக்கிழமைகளில் தபால் நிலையங்களை மூடிவிடுவதால் திணைக்களத்தின் செலவு பாரியளவில் குறைவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்கள வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.பொதுவாக ஒரு சனிக்கிழமை தினத்தில் தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் திறக்கப்படுவதால் சுமார் 20 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றதுடன், அவ்வாறான தினமொன்றில் தபால் நிலையங்களை திறப்பதால் சுமார் 3மில்லியன் ரூபா வரையான வருமானமே கிடைக்கப்பெறுவதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் செலவிடப்படும் 20 மில்லியன் ரூபாவில் 18 மில்லியன் ரூபா சனிக்கிழமை நாட்களில் பணி புரியும் ஊழியர்களுக்கான மேலதிக நாளுக்கான கொடுப்பனவாக செலவிடப்படுவதுடன் மீதி 2மில்லியன் ரூபாவும் ஒரு நாளுக்கான மேலதிக நேர கொடுப்பனவாக செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு இருந்தபோதும் சனிக்கிழமைகளில்  தபால் நிலையங்களை  மூடிவிடும் தீர்மானத்துக்கு ஒன்றிணைந்த தபால் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றது. இதுதொடர்பாக குறித்த சங்கம் தபால் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருக்கின்றனது. குறித்த கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கொரோனா பரவிக்கொண்டிருந்த சந்தர்பத்தில் தபால் ஊழியர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்பை கண்டுகொள்ளாமல், தபால் ஊழியர்கள் கஷ்டத்துக்கு மத்தியில் பணிபுரிந்து பெற்றுக்கொள்ளும் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் சனிக்கிழமை நாள் கொடுப்பனவு என்பனவற்றை இல்லாமலாக்கவே திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்திருக்கின்றது.

தபால் திணைக்களத்தின் இந்த தீர்மானத்துக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. அதனால் இந்த தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அனைத்து தபால் ஊழியர்களும் நாளை திங்கட்கிழமை முதல் தங்களது சாதாரண சேவை நேரத்தை மாத்திரம் மேற்கொள்வதாகவும் மேலதிக நேர சேவைக்காக தங்களுக்கு அழுத்தம் மேற்கொள்ளக்கூடாது எனவும் குறித்த கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடி இதுதொடர்பாக தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாக தபால்மா அதிபர் ராஹேண ஆரியரத்ன தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.