(எம்.மனோசித்ரா)


தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய வரையறுக்கப்பட்ட மக்களுடன் ஆராதனைகளை மேற்கொள்வதற்காக கிறிஸ்தவ தேவாலயங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.


இன்று ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு புனித மரியாள் தேவாலயத்தில் நடைபெற்ற விசேட ஞாயிறு ஆராதனையின் போதே பேராயர் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.


இது தொடர்பில் பேராயர் மேலும் தெரிவிக்கையில்,


தேவாலயங்களில் நாளாந்த ஆராதனைகளை நடாத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என்று கோருகின்றோம்.


கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் அடையாளம் காணப்பட்ட நாள் முதல் வீட்டிலிருந்தே பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு கத்தோலிக்க மக்கள் வேண்டப்பட்டிருந்தனர். அதற்கமையவே அனைவரும் செயற்பட்டனர்.  


ஆகவே, தற்போதைய நிலைக்கு அமைய வரையறுக்கப்பட்ட மக்கள் தொகையுடன் தினமும் கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனைகளை நடாத்த அனுமதி வழங்குமாறு கோருகின்றோம்.


ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகவும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்தார்.