(எம்.மனோசித்ரா)

லெபனானிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனையை கட்டணமின்றி அந்நாட்டிலேய மேற்கொள்வதற்கு லெபனான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மீண்டும் தாய்நாட்டுக்கு வர எதிர்பார்த்துள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் லெபனான் வழங்கியுள்ள நிவாரணத்தின் காரணமாக குறிப்பிட்டளவு அந்நியச் செலாவணியை இதனால் மீதப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :

குறிப்பாக கொவிட் 19 நோய்த்தொற்று பரவல் அதிகளவில் உள்ள நாடுகள் உட்பட வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனையை குறித்த நாடுகளிலேயே மேற்கொண்டு அறிக்கைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை கண்டறியுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அண்மையில் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

வெளிநாடுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது மீண்டும் நாட்டுக்கு வருகைதந்ததன் பின்னர் மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்கு மேலதிகமாகவாகும்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதுவராலயம் லெபனான் வெளிநாட்டு அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இலவசமாக அந்நாட்டிலேயே பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ள இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு வரும் கணிசமானவர்கள் கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் போது இந்நிலைமை மேலதிக பிரச்சினையாக உள்ளதாக கொவிட் ஒழிப்பு செயலணியுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளில் இருந்து மீண்டும் தமது நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு அந்நாடுகளிலேயே பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர் நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.