(எம்.மனோசித்ரா)

பொது போக்குவரத்து தொடர்பிலான இறுதி தீர்மானம் நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் அறிவிக்கப்படும் என்று என்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்திருக்கும் அவர் அதில் மேலும் கூறியிருப்பதாவது :


நாளை முதல் பொதுப் போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வருவதற்கு ஏற்கனவே ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது.

கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கைக்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் சுகாதார பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட்டன. அதில் கொழும்பு , கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை முன்னெடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதே வேளை நாளை திங்கட்கிழமை பொதுப் போக்குவரத்து தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் சுகாதார அமைச்சின் பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு அமைய போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

தற்போது முன்னெடுக்கப்படும் பொது போக்குவரத்து சேவைகள் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் தனியார் மற்றும் அரச பேரூந்துகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் சேவையில் ஈடுபட்டுள்ள பேரூந்துகளின் எண்ணிக்கை போதாமலிருக்கிறது.
அதற்கான மாற்று வழியாக சுற்றுலாப் பிரயாணிகளுக்கான சேவைக்காக பதிவு செய்யப்பட்டுள்ள பேரூந்துகளை தற்காலிகமாக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேரூந்துகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெடுக்கப்படும். இதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.