ஐ.தே.க.விற்கு புதிய தலைமை அவசியமே

மைத்திரியை-சஜித், மலிக், மங்கள தவறாக வழிநடத்தினர்

மத்தியவங்கி எனது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை

பிணைமுறிபற்றி கபீரிடமே கேள்வி எழுப்ப வேண்டும்

சிறிகொத்தவுக்கு கல்லெறிந்தவர்கள் வெளியேறியுள்ளனர்

ஒழுக்காற்று நடவடிக்கை இலக்குவைத்த செயற்பாடல்ல

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சிறுகுழுவொன்றே வெளியேறியுள்ளது. அதனால் கட்சிக்கு எவ்விதமான பதிப்புக்களும் இல்லை. வெளியேறிய குழுவின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டு கட்சி வலுவாக உள்ளது. இதனால் வெளியேறிய தரப்பினர் தடுமாற்றமடைந்துள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த பின்னர் வழங்கப்பட்ட காலத்தில் எவ்விதமான மறுதலிப்புக்களையும் செய்யாது தற்போது வேட்புமனுக்கள் செல்லுபடியற்றதாக கூறி மனுத்தாக்கல் 99பேர் இடைநிறுத்தம், ஒழுக்காற்று நடவடிக்கைகள், என்று கோர்வையாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகின்றதே?

பதில்:- வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் வழங்கப்படுகின்ற நேரத்தில் ஐந்து காரணங்களின் அடிப்படையிலேயே எமது மறுதலிப்புக்களைச் செய்ய முடியும். அக்காரணங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ளவர்களின் செயற்பாடுகள் காணப்படவில்லை. அதன் காரணத்தினாலேயே மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுத்து நீதிமன்றை நாடியுள்ளோம். அதுமட்டுமன்றி வேட்புமனுத்தாக்கல் செய்து 70 நாட்களின் பின்னரேயே இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு தற்போதும் ஒருவாரம் அவகாசம் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். 

கேள்வி:- உங்கள் கட்சியின் சட்டச்செயலாளர் வேட்புமனுத்தாக்கலுக்கு முன்னதாகவே; கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் தேர்தலில் சட்டவிரோதமாக போட்டியிடுகின்றார்கள் என்று கூறியுள்ளாரே?

பதில்:- ஆம், நாங்கள் யாரையும் இலக்கு வைத்துச்சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கட்சியிலிருந்து வெளியேறி வேட்புமனுக்களை தாக்கல் செய்தவர்கள் தமது நியாயப்பாடுகளை முன்வைப்பதற்குரிய காலத்தினை வழங்கியுள்ளோம். மேலும் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் எமது நடவடிக்கைகளை தாமதித்திருந்தோம். 

கேள்வி:- தனியொருவரின் நலனுக்காகவே ஒழுக்காற்று நடவடிக்கைகள் உள்ளிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக உங்களை சுட்டி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றதே? 

பதில்:- ‘ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணல்’ என்பது போன்று 99 பேர் வெளியேறுவதற்கு ஒருவர் காரணமென்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. அத்துடன் அவ்வாறான நிலைமையொன்று இருக்குமாயின் அத்தகைய கட்சியை, கட்சியென்றே கூறமுடியாது. 

உண்மையிலேயே, சிறுகுழுவினரின் வெளியேற்றத்தால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், சஜித் பிரேமதாஸ, கபீர் ஹாசீம் போன்றவர்கள் ஐ.தே.க. சீரழியும் என்றே கருதினார்கள். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. ஐந்து நாட்களில் புதிய முகங்களின் வரவுடன் ஐ.தே.க கடந்தகாலத்தில் இருந்ததை விடவும் மேலும் வலுவடைந்துள்ளது. இதனால் சூழ்ச்சி செய்தவர்கள் செய்வதறியாது தடுமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். 

கேள்வி:- தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளுக்கு முகங்கொடுத்துள்ள ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை முன்னிலைப்படுத்துவதால் தற்போதைய தேர்தலில் பின்னடைவுகளை ஏற்படுத்தாதா? 

பதில்:- கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சிக்குள்ளிருந்தவர்களே அவ்வாறானதொரு நிலைப்பாட்டை கட்டியெழுப்பினார்கள். மங்கள, கபீர், சஜித் போன்றவர்கள் இந்த நிலைப்பாட்டினை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்குவகித்திருந்தார்கள் என்பதே யதார்த்தமான விடயமாகும். 

கொரோனா வைரஸ் ஆபத்து இலங்கையில் ஏற்பட்டபோது, வெளியேறிச்சென்றவர்கள் தான் புத்திசாலிகள் என்றால் அவர்களிடத்திலிருந்து உருப்படியான யோசனைகள் வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எவ்விதமான செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கவில்லை. 

ஐ.தே.க.தலைவர் நாட்டை பாதுகாக்கவல்ல, பொருளாதாரத்தினை மீட்கவல்ல யோசனைகளை சர்வதேச ரீதியான அவதானிப்புடன் வழங்கியிருந்தார். இதுவே நல்லதொரு உதாரணமாகின்றது. வாய்வீரம் காட்டுபவர்கள் வெளியேறிவிட்டார்கள். நடைமுறைச்சாத்திய செயற்பாடுகளை முன்னெடுத்து வெற்றிபெறுவர்கள் தற்போதுள்ளார்கள். இதுதான் கட்சியின் உண்மையான மாற்றமாகும். 

கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் சஜித் தோல்வியடைவதற்காக ஐ.தே.க.வினுள்ளேயே குழிகள் வெட்டப்பட்டதாக கூறப்படுகின்றதே?

பதில்:- தேர்தல் முடிவுகள் வெளிவரமுன்னரேயே வெற்றிபெற்றுவிட்டதாகவே கருதினார்கள். வெற்றி பெற்றிருந்தால் அவர்களின் உழைப்பென்றும் தோல்வி அடைந்ததால் எங்களின் உழைப்பென்றும் அர்த்தப்படுத்துவது வேடிக்கையாகவுள்ளது. 

கேள்வி:- ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவ பின்னடைவுகளுக்கு கட்சியிலிருந்து வெளியேறிய தரப்பு காரணமாக இருந்துள்ளதா?

பதில்:- ஆம், அண்மைய காலத்தில் நடைபெற்ற விடயமொன்றல்ல. ரணில் விக்கிரமசிங்கவிடத்திலும் தவறுகள் இல்லாமலில்லை. அவர் பக்கச்சார்புடனேயே கட்சியை கொண்டு சென்றார். அப்படியிருக்க அந்த தவறால் ஏற்பட்ட பின்னடைவுகளை இலக்கு வைத்தே வெளியேறிய தரப்பின் தாக்குதல்களும் இருந்தன. இதனால் கட்சிக்குள் பலவீனமான நிலைமை அதிகமாகியது. தற்போது அந்த நிலைமை நீங்கியுள்ளது. புதிய உலக ஒழுங்கை மையப்படுத்தி கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சிந்திக்க வேண்டியுள்ளது. 

கேள்வி:- ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைமை அவசியமென்பதை உணர்கின்றீர்களா?

பதில்:- ஆம், ஆனால் தற்போதிருக்கின்ற தலைமையை விடவும் சிறந்த தலைமையே அவசியமாகின்றது. அவ்வாறானதொரு தலைமை கிடைக்கும் வரையில் பொறுமையாக இருக்கவேண்டும். இருப்பதையும் பறிகொடுத்து விட்டு எதனையும் செய்ய முடியாது. 

கேள்வி:- தனது அரசியல் இலாபத்துக்காக ரணில் விக்கிரமசிங்கவின் முடிவுகளில் ரவி கருணாநாயக்க ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி?

பதில்:- கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் ஐ.தே.க.வினுள் தொடர்ந்தும் பிரச்சினைகள் காணப்படுகின்றன என்று மக்களுக்கு தவறான அபிப்பிராயத்தினை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு கூறி மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் கட்சியுடனும், தலைமையுடனும், எம்முடனும் இருப்பவர்கள் நிலைமை என்வென்று நன்கறிவார்கள். 

கேள்வி:- மத்தியவங்கி பிணைமுறிகள் மோசடியில் தங்களுக்கு தொடர்பில்லையென்று தொடர்ச்சியாக கூறுகின்றபோதும்….? (குறுக்கிடுகிறார்)

பதில்:- உண்மை அதுதானே.

கேள்வி:- நீங்கள் நிதி அமைச்சராக இருந்துள்தோடு தற்போதும் பிணைமுறிகள் தொடர்பில் உங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன? கைது செய்யப்படவுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது?

பதில்:- 2015ஆம் ஆண்டு பெப்ரவரியில் தான் இந்த மோசடி இடம்பெற்றிருக்கின்றது. நான் நிதி அமைச்சராக இருந்தபோதும் மத்தியவங்கி உட்பட வங்கிகள் எனது அமைச்சின் கீழ் காணப்பட்டிருக்கவில்லை. அப்படியிருக்க மத்திய வங்கி மோசடி தொடர்பில் என்னிடத்தில் கேள்விகளை தொடுத்தால் நான் என்ன பதிலளிப்பது. 

எனக்கு தந்த பணியை சிறப்பாக முன்னெடுத்தமையொரு குற்றமா? அதற்காகத்தான் என்மீது சேறுபூசுகின்றார்களா? பிணைமுறிகள் மோசடி தொடர்பில் வங்கிகளை தனது அமைச்சின் கீழ் கொண்டிருந்த கபீர் ஹாசீமிடமோ அல்லது மங்கள சமரவீரவிடமோ, மலிக் சமரவிக்கிரமவிடமோ ஏன் கேட்பதில்லை. அவர்களிடத்தில் தான் இதுபற்றிய கேள்விகளை தொடுக்க வேண்டும். 

சரி என்னை கைது செய்ய விரும்பியிருந்தால் ஏன் ஐந்து வருடங்கள் காத்திருந்தீர்கள். பாராளுமன்றத்தினை கலைத்து தேர்தல் நெருக்கும் வரையில் பொறுமை காத்திருந்தார்களா? 

கேள்வி:- அப்படியென்றால் பிணைமுறிகள் விடயத்திற்கும் உங்களுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லையென்று கூறுகின்றீர்களா?

பதில்:- ஆம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, தமது நலன்களுக்காக சஜித், மலிக், மங்கள, கபீர் போன்றவர்கள் நன்றாக பயன்படுத்தியுள்ளார்கள். அவர்கள் மைத்திரியிடம் தவறான சிந்தனைகளை உருவாக்கினார்கள். அவர்களால் தான் வீணான குற்றசாட்டுக்களும் பரப்பப்பட்டுள்ளன. உண்மையிலேயே இவர்கள் அனைவரும் முதுகெலும்பற்ற அரசியல்வாதிகள்.

கேள்வி:- பிணைமுறிவிடயத்தில் உங்களுக்கு தொடர்பில்லையென்றால் ஏன் அமைச்சுப்பதவியை துறந்தீர்கள்? 

பதில்:- ஊடகங்கள் மூலமாக என்னை மையப்படுத்தியே செய்திகள் வெளியிடப்பட்டன. அதனை உள்ளீர்க்கும் மக்களும் முழுமையாக நம்பிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ஆகவே தான் நானாகவே அமைச்சுப்பதவியை துறந்து விசாரணைகளை முன்னெடுக்க வழிசமைத்திருந்தேன். என்னில் தவறிருந்திருந்தால் அதிகாரத்தினை கைவிட்டிருக்கமாட்டேன் அல்லவா? இலங்கை மத்தியவங்கி எனது கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் நான் எதற்கு அஞ்சவேண்டும் என்ற மனநிலையிலேயே அன்றிருந்தேன். அதனாலேயே பதவியை துறக்கும் முடிவையும் எடுத்தேன். 

கேள்வி:- இலங்கை மத்தியவங்கியினுள் பிணைமுறிகள் தொடர்பான மோசடி இடம்பெற்றிருக்கின்றது என்பiதாவது அறிந்திருந்தீர்களா? 

பதில்:- 2015இல் நடைபெற்ற விடயத்தினை திடீரென 2017இல் என்னிடத்தில் கேட்டார்கள். என்னை பொறுப்புக்கூறுமாறும் வலியுறுத்தினார்கள். எதனையும் அறியாத நான் என்ன செய்வேன். இந்துப்பத்திரிகை செய்திக்காக உங்களை பொறுப்புக்கூறச் சொல்லமுடியுமா? அதுபோன்று தான் என் நிலைமையும் இருந்தது. 

கேள்வி:- இந்த விடயத்தில் உங்கள் கட்சித்தலைவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளதல்லவா?

பதில்:- என்ன குற்றச்சாட்டுக்கள் உள்ளன?

கேள்வி:- மத்திய வங்கிய ஆளுநராக அர்ஜுன் மகேந்திரனை நியமித்த முறையிலிருந்து பிணை முறிகள் மோசடி வரையில் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றதே?

பதில்:- அவர் தனக்கு தெரிந்தவரை அப்பதவிக்கு நியமித்தார். அவ்வாறு தனக்கு தெரிந்த சிறந்த அனுபவசாலியொருவரை நியமித்தமை தவறாக இருக்கலாம். ஆனால் அங்கு மேற்கொள்ளப்பட்ட தவறுகளை எவ்வாறு ஏற்றுக்கொள்வது. 

கேள்வி:- உங்களுடைய ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்புக்காக முன்னெடுக்கப்பட்ட பணிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய பூரண ஒத்துழைப்புக்களும் ஐ.தே.க.வின் சிங்கள, பௌத்த வாக்குகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? 

பதில்:- இவ்வாறான நிலைப்பாடொன்று காணப்படுமாயின் அது அடிப்படைவாதத்திலேயே மேலெழுந்ததொன்றாக  இருக்கும். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது, அவற்றை மறைத்துக் கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியாது. அந்த நிலைப்பாட்டிலிருந்தே நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். 

கூட்டமைப்பு உட்பட சகல தரப்பும் ஒத்துழைப்புக்களை வழங்கியது. அந்த செயற்பாட்டில் வெற்றியடைந்தால் எமது அரசாங்கத்திற்கு நற்பெயரும், அபிமானமும் உயர்ந்துவிடும் என்பதால் இறுதித்தருணங்களில் அச்செயற்பாடுகளுக்கு தேர்தல்முறையில் மாற்றம் வேண்டும் என்றுகூறி பின்னடைவுகளை ஏற்படுத்தினார்கள். 

கேள்வி:- இனப்பிரச்சினைக்கான தீர்வாக உங்களிடமுள்ள முன்மொழிவு என்னவாகவுள்ளது?

பதில்:- என்னைப்பொறுத்தவரையில் மூன்று இனங்களும் சமத்துவமாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டும். சமஷ்டியென்றோ, ஒற்றையாட்சியென்றோ சொற்களை பற்றிப்பிடித்துக்கொண்டிருக்காது பிரிக்கப்படாத, பிளவுபடாத நாட்டினுள் அதியுச்ச அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதேயாகும். ஒருபிரச்சினையை தீர்ப்பதற்கு முனைப்புச்செய்து பிறிதொரு பிரச்சினை தோற்றம் பெற்றால் அது தீர்க்கமுடியாதவொன்றாகிவிடும். ஆகவே அதனை முறையாக கையாள வேண்டும். 

கேள்வி:- சமத்துவம் பற்றி குறிப்பிடும் நீங்கள் அண்மையில் ஐ.தே.கட்சி சிங்கள, பௌத்த கொள்கையை அடியொற்றும் வகையில் மீளத்திரும்பிவிட்டதாக கூறியிருந்தீர்களே?

பதில்:- இந்த வினாவை தொடுத்தமைக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன். நான் ஒரு அடிப்படைவாதியல்ல. எமது கட்சியும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கியதொன்றாகும். அப்படியிருக்கையில் இவ்வாறான கருத்தொன்று நிச்சியமாக என்னிடத்திலிருந்து வெளிப்பட்டிருக்காது என்பதை உறுதியாக கூறமுடியும். 

அதேநேரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு துணைபோனவர்கள் எம்முடன் இருக்கின்றார்கள், பௌத்த சமயத்தினை நிந்தித்தவர்கள் எம்முடன் இருக்கின்றார்கள், அடிப்படைவாதத்தினை மறைமுக நிகழ்ச்சி நிரலாக கொண்டிருப்பவர்கள் எம்முடன் இருக்கின்றார்கள் என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். தற்போது அவ்வாறான ஒருவரும் இல்லை என்றும் புதிய உத்வேகத்துடன் கட்சி உள்ளதென்றே கூறியுள்ளேன். 

கேள்வி:- ஐ.தே.க.வில் உள்ள தற்போதைய குழாமினை பிரதமர் மஹிந்த பாதுகாத்து வருவதாக விமர்சிக்கப்படுகின்றதே?

பதில்:- சிறிக்கொத்தாவுக்கு கல்வீசிச் சென்றவர்களின் இயலாமையின் வெளிப்பாடேயாகும். 

கேள்வி:- பொதுத்தேர்தலின் பின்னர் ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள  பங்காளி சிறுபான்மை கட்சிகளை இணைத்துக்கொள்வீர்களா?

பதில்:- எமது கட்சி ஸ்தாபிக்கப்படுகின்றபோது சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதிகள் கட்சியின் ஊடாகவே தெரிவானார்கள். அந்த நிலைமை பிற்காலத்தில் மாற்றப்பட்டுவிட்டது. தற்போதைய சூழலில் அவ்வாறான தெரிவினையே எதிர்பார்க்கின்றோம். கட்சிக்கு வெளியில் சென்று சிறுபான்மை தரப்பின் ஆதரவினை தேடுவதை விடவும் கட்சியின் ஊடாக சிறுபான்மை பிரதிநிதிகளை உருவாக்குவதற்கு முனைகின்றோம். 

கேள்வி:- மீண்டும் கூட்டு அரசாங்கமொன்றை ஏற்படுத்த ஐ.தே.க இசையுமா?

பதில்:- கூட்டு அரசாங்கம் என்பதை விடவும் தேசிய பொருளாதாரம் என்பதே சரியாக இருக்கும். அவ்வாறான நிலைமையொன்றுக்கு அவசியமில்லை. அதிகளவான ஆசனங்களை பெறுகின்றபோது ஆட்சியமைப்பதற்கு பல மாற்று வழிகள் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. 

(நேர்காணல்:- ஆர்.ராம்)