பெருந்தோட்ட பகுதி மக்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து துன்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.

அண்மைக்காலமாக பெருந்தோட்ட பகுதிகளில் குளவிக் கொட்டுதல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது பெருந்தோட்ட பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓல்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் 11 தோட்டத் தொழிலாளர்களும்  லக்கம் சீர்பாத பிரிவில் ஒருவருமாக மொத்தம் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 மேலும்  கிங்கோரா பிரிவில் குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவர் கர்ப்பிணித்தாயாவார் . இவர் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும்  பத்தன திம்புள்ள தோட்டத்திலும் டிக்கோயா தோட்டத்திலும் லிந்துல்ல சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்திலும் டயகம தோட்டத்திலும்  இவ்வாறு தொழிலாளர்கள் கடந்த மாதம் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.

தேயிலைத் தோட்டங்கள் சீராக பராமரிக்கப்படாமல் காடு மண்டிக் கிடப்பதும்  குளவிகள் தேயிலை செடிகளுக்கு அடியில் கூடுகட்ட காரணமாக அமைகின்றது . 

கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட தோட்ட நிர்வாகங்கள் மக்கள் பாதுகாப்பாக கொழுந்து பறிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுத்தன. அதனால் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அவ்வளவாக முகங் கொடுக்கவில்லை.

ஆயினும் தற்பொழுது நிர்வாகம் இலாபம் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கின்றதே தவிர தொழிலாளர்களின் நலன் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை .

இந்த நிலைமை தொடராதிருக்க தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேயிலைத் தோட்டங்களில் இருக்கும் குளவிக் கூடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக  கொழுந்து பறிக்கப்படும் பகுதி முன் கூட்டியே தீர்மானிக்கப்படுவதால் அந்த பிரதேசத்தில் ஏதேனும் குளவிக் கூடுகள்  உள்ளனவா என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகும் .

அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களின் உயிரோடு எவரும் விளையாடக் கூடாது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்