இந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது!

06 Jun, 2020 | 10:07 PM
image

''பிரதமர் நரேந்திரமோடியும், ஜனாதிபதி சீ ஜின்பிங்கும் தங்களுக்கிடையிலான தொடர்பு வழிகளைத் திறந்து வைத்திருக்கும் வேண்டும்''

-ஷிஷிர் குப்தா

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியும், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும் 2019 இல் சென்னைக்கு வெளியே மாமல்லபுரத்தில் நடத்திய இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வமற்ற உச்சிமாநாட்டின் போது இருதரப்பு உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் நிறைவை 2020 இல் கொண்டாடுவதற்குத் தீர்மானித்தார்கள்.

இந்தியாவினதும், சீனாவினதும் பாராளுமன்றங்கள், அரசியல்கட்சிகள், கலாசார மற்றும் இளைஞர் அமைப்புக்கள் இராணுவங்களுக்கு இடையேயானவை என்று சகல மட்டங்களிலும் பரிமாற்றங்களை ஆழப்படுத்துவதே அந்தக் கொண்டாட்டங்களின் பிரதான நோக்கமாக இருக்குமென்று கூறப்பட்டது. இரு நாகரிகங்களுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான தொடர்புகளின் சுவடுகளை ஆராயும் மாநாடொன்றை கப்பலில் நடத்துவது உட்பட 70 செயற்பாடுகளுக்கு ஏற்பாடு செய்வதென்றும் இரு தலைவர்களும் தீர்மானித்தார்கள். 

இந்த இன்னலமான இராஜதந்திரத் தோற்றப்பாடு மத்திய சீன நகரான வூஹானிலிருந்து (2018 இல் இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வமற்ற முதலாவது மாநாடு இந்த நகரிலேயே நடைபெற்றது) முதலில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவலையடுத்து லடாக்கின் கிழக்குப் பிராந்தியத்தில் போர்மேகங்கள் சூழ ஆரம்பித்ததையடுத்து அச்சந்தருவதாக மாறுமென்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. எல்லைப்பகுதிகளில் சமாதானத்தையும், அமைதியையும் பேணுவதற்கான விருப்பார்வமும், மேலதிகமாக நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்குப் பாடுபடுவதற்கான உறுதிப்பாடும் மீள வலியுறுத்தப்பட்ட மாமல்லபுரம் சந்திப்பிற்குப் பிறகு 7 மாதங்களுக்குள் இது நடந்திருக்கிறது. 

இருந்தாலும்கூட இன்று இந்திய இராணுவம் 3488 கிலோமீற்றர் நீளமான கட்டுப்பாட்டு எல்லையோர கல்வான் பள்ளத்தாக்கிலும், பாங்கொங் சோ ரோந்துநிலைகளில் மக்கள் விடுதலை இராணுவத்தின் (சீன இராணுவம்) கூட்டுப்படையணிகளின் இரு ஆக்கிரமிப்புக்களுக்கு முகங்கொடுக்கிறது.

மே மாதம் மக்கள் விடுதலை இராணுவம் முதலில் சிக்கிம் மாநிலத்தின் வடபகுதியில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் நாகு லா பகுதியில் ஊடுருவச்செய்தது. பிறகு கல்வான் பள்ளத்தாக்கின் மூன்று முனைகளிலும், பாங்கொங் சோவின் ஒரு முனையிலும் ஊடுருவச்செய்தது. லடாக்கில் நிலவரம் உறுதியானதாகவும், கட்டுப்படுத்தக்கூடியதாகவும் இருப்பதாக சீனப்பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கூறியிருக்கிறார். ஆனால் அது முற்றிலும் நிலவரத்தின் கடுமையைக் குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பகுதியில் இருநாட்டு இராணுவமும் முறுகல் நிலையில் இருக்கின்றன. இந்த சஞ்சலமான நிலவரம் இருதரப்பு உறவுகளுக்கு நல்லவையே அல்ல. அது வழமையாக அமைதியாகக் கிடக்கும் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை ஏற்கனவே பதற்றநிலைக்கு உள்ளாக்கியிருப்பதனால் தோன்றக்கூடிய ஆபத்தான நிலவரத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தயாராக வடக்கு எல்லையில் இந்தியா துருப்புக்களைக் குவிக்க நிர்பந்திக்கப்பட்டது. 

இந்தியாவை விமர்சிப்பவர்கள் சீனாவுடனான 1962 எல்லைமோதல்களைப் பற்றி நினைவுபடுத்த விரும்பக்கூடும் என்றபோதிலும், மோதல் மூளுமானால் மக்கள் விடுதலை இராணுவமும் கூட அதன் சொந்தப் பிராந்தியங்களைப் பாதுகாப்பதற்கு நாட்டுப் பகுதிகளிலிருந்து துருப்புக்களை நகர்த்த வேண்டியிருக்கும் என்பதே உண்மையாகும். தற்சமயம் சீனா இந்த எல்லையோரத்தில் 45,000 படையினரைக்கொண்ட பிரிவுகளை வைத்திருக்கிறது. அதேவேளை இந்தியாவை நோக்கியுள்ள மேற்குக்களத்தில் திபெத் மற்றும் சின்ஜியாங் இராணுவம் நிலைகொண்டிருக்கும் துருப்புக்களில் 6 - 8 பிரிவுகளை உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய தெரிவையும் சீனா கொண்டிருக்கிறது.

கிழக்கு லடாக்கில் படைகளின் மட்டங்களைத் துரிதமாக இந்தியா அதிகரிக்கும் நிலையில், எல்லைகளில் இதுவரையும் நடைமுறையிலிருந்த நிலைமை மீண்டும் ஏற்படுத்தப்படாவிட்டால் நாட்டுப்புறங்களிலிருந்து மேலதிக துருப்புக்களை மக்கள் விடுதலை இராணுவம் அழைப்பதற்குப் பெரிதாக நேரம் எடுக்காது. 

கட்டுப்பாட்டு எல்லைக்கு நெருக்கமாக இந்தியாவின் தொடர்பு வழிகளும், விமானத்தளங்களும் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது நிலவரம் மக்கள் விடுதலை இராணுவத்திற்குச் சாதகமானதாக இல்லாமல் போகக்கூடும். உதாரணத்திற்கு திபெத் மேட்டுநிலத்தில் இருந்து சீனாவின் ரஷ்யபாணி போர்விமானங்கள் கிளம்புவதனால் பெருமளவு குண்டுகளைத் தாங்கிச்செல்ல முடியாமல்பேர்கும். பல நாட்களாக முட்டுக்கட்டை நிலை நீடிப்பதால் இந்தியப்படைகள் தயாரில்லாமல் இருக்கக்கூடிய ஒரு நிலையில் தீடிரென அதிர்ச்சி தரத்தக்க வகையில் தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்பைப்பெறும் சீன மக்கள் விடுதலை இராணுவம் இழந்துவிட்டது. 

சீனத்தளபதிகள் எதிர்நோக்கும் அடுத்த கேள்வி தீர்க்கமான வெற்றியொன்றைத் தங்களது துருப்புக்களை வலிந்து ஏற்படுத்த முடியுமா என்பதாகவே இருக்கும். இந்திய இராணுவம் சகல விதமான சிக்கல்கள் மற்றும் சாதகமற்ற நிலைமைகளைச் சமாளித்து சண்டையிடக்கூடியது என்பதையும் எதிர்காலத்தில் சண்டையிடும் என்பதையும் கார்கில் போரை மிகவும் கருத்தூன்றி ஆராய்ந்திருக்கக்கூடிய எந்தவொரு தளபதியும் அறிவார். எல்லையில் சீனா இப்பொழுது படைப்பலத்தைக் காண்பித்து அச்சுறுத்துகின்ற போதிலும் இந்தியாவிற்கு பிரதமர் நரேந்திரமோடி என்ற மிகவும் பலம்பொருந்திய உறுதியான தலைவர் இருக்கிறார் என்பதையும் சீனா அறியும். அவர் கொவிட் - 19 வைரஸின் பரவலுக்காக சீனாவைக் குற்றஞ்சாட்டவில்லை. அவர் சின்ஜியாங்கில் சீன அரசாங்கம் சிறுபான்மையினர்களை நடத்துகின்ற முறை தொடர்பாக மனமறிந்து ஒரு மௌனத்தைக் கடைப்பிடிக்கிறார். ஹொங்கொங்கில் கொடுமையான சட்டங்கள் தொடர்பில் கருத்துச்சொல்லவில்லை. உலக சுகாதார நிறுவனத்தில் தாய்வானுக்கு அவதானி அந்தஸ்த்து வழங்குமாறு ஏனைய நாடுகள் வற்புறுத்துகையில், இந்தியா மௌனமாக இருக்கிறது. இவை எல்லாவற்றையும் சீனா அறியும். 

எல்லைத்தகராறு தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தையொன்றை வெளிப்படையாக விரும்புவதன் மூலமாக இந்தியா அதன் நெருங்கிய நேசஅணியான அமெரிக்காவையும் சம்பந்தப்படாமல் இருக்கச்செய்ய முடியும் என்பதுடன் அதன் மூலோபாய சுயாதீனத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். அயல்நாடுகளிடம் இருந்து வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கை (இது சீனாவை நோக்கிய ஒன்று என்பது தெளிவானது) துணிந்து எதிர் நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆற்றலை இந்தியா கொண்டிருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் சார்பில் சீனாவிற்கு எதிரான எதிர்ப்புணர்வுகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் இந்தியா இறங்கவில்லை. பெய்ஜிங் தான் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆசிய அயல்நாடுகளை இந்திய உபகண்டத்திலும் அதற்கு அப்பாலும் அதன் வல்லாதிக்கத்தை வெளிப்படுத்திக்காட்டப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதே உண்மையாகும். 

ஜம்மு - காஷ்மீரில் 307 ஆவது சரத்து மோடி அரசாங்கம் இரத்துச்செய்ததன் ஒரு விளைவே லடாக் முறுகல்நிலை என்ற வாதம் எடுபடக்கூடியதல்ல. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பெய்ஜிங்கிற்கு விரைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர், அந்தப் பிராந்தியத்தில் மேலதிகமாக எந்த நிலப்பரப்பையுமோ அல்லது சர்ச்சைக்குரிய பகுதிகளையோ இந்தியா உரிமை கோரவில்லை என்று சீன அரசாங்கத்திற்கு உறுதியாகக் கூறியிருந்தார்.

எல்லையில் வலிய வந்து வம்பிற்கு இழுப்பது போன்ற சீனாவின் செயற்பாடுகள் பிரச்சினையை மேலும் அதிகரித்திருக்கிறது. உலகை கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிக்கத்தொடங்குவதற்கு முன்னதாக 1919 ஜனவரி தொடக்கம் நவம்பர் வரை 5168 கோடி டொலர்களாக இருந்த இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப்பற்றாக்குறையைக் குறைக்குமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை பெய்ஜிங் கவனித்து உகந்த நடவடிக்கை எடுப்பதில் அக்கறை காட்டவில்லை. இருந்தும் கூட இருதரப்பு வேறுபாடுகளைத் தகராறுகளாக மாற்றுவதில்லை என்று இரு தலைவர்களும் முன்னர் பற்றுறுதி கொண்டிருந்த நிலையில் கிழக்கு லடாக்கில் தங்கள் தங்கள் படைகளை முகாம்களுக்கு வாபஸ் பெறுவது இரு தரப்பினரது நலன்களுக்கு உகந்ததாக இருக்கும். கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டின் எந்தவொரு பகுதியிலும் ஒருதலைப்பட்சமான மாற்றங்களை சீனா செய்வதற்கு இந்தியா அனுமதிக்கப்போவதில்லை. எல்லையோரம் இந்தியா மேற்கொள்கின்ற சட்டபூர்வமான உட்கட்டமைப்புப் பணிகள் தொடர்பில் மோடி அரசாங்கம் சீனாவின் நெருக்குதல்களுக்கு உள்ளாகப் போவதில்லை. அந்தப்பணிகள் இந்தியாவின் சொந்தப் பிராந்தியத்திற்குள்ளேயே இடம்பெற்று விடுகின்றன. 

எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் விசேட பிரதிநிதிகளின் 21 சுற்றுப்பேச்சுவார்த்தைகள் எந்தப் பயனையும் தராதநிலையில் தங்கள் தங்கள் நிலைகளை அறிந்துகொள்வதற்கு ஏதுவாக எல்லையில் கிழக்குப் பிரிவினதும், மேற்குப் பிரிவினதும் வரைபடங்களை இருதரப்பினரும் குறைந்தபட்சம் பரிமாறிக்கொள்வதற்கான நேரம் இது.

இரண்டு தலைவர்களும் தங்களது தொடர்பு வழிகளை எப்போதும் திறந்து வைத்திருக்க வேண்டிய தேவையிருக்கிறது. ஏனென்றால் இருதரப்பினதும் உயர்மட்ட அதிகாரிகளும், இராணுவங்களும் வரலாற்று ரீதியான முரண்பாடுகளையும், பழைய மோதல்களையும் தங்கள் மனதில் கொண்டிருக்கிறார்கள். அவற்றுக்கு அப்பால் அவர்களால் சிந்திக்க முடியவில்லை. இருவருக்கும் இடையிலான நேரடித்தொடர்பு மேலும் முக்கியம் பெறக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் தலாய்லாமாவின் இடத்திற்கு அடுத்ததாக வர இருப்பவரை விரைவில் தெரிவு செய்யவேண்டியிருக்கிறது. பஞ்சன்லாமா விடயத்தில் நடந்துகொண்டதைப் போன்று தனது சொந்த வேட்பாளரை சீனா இந்த விடயத்திலும் பிரேரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் கூடுதல் சனத்தொகையைக் கொண்ட - உலகின் முதலாவது, இரண்டாவது பெரிய இராணுவங்களைக் கொண்ட இவ்விரு நாடுகளும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது.

(ஷிஷிர் குப்தா ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13