(இரா.செல்வராஜா)

சனிக்கிழமைகளில் தபால் நிலையங்களை மூடுவதற்கு தபாற் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு திணைக்கள் தொழிற் சங்கங்கள் கடும் எதிர்பை தெரிவித்துள்ளன.

அத்துடன் எதிர்வரும் எட்டாம் திகதி திங்கட்கிழமை முதல் எட்டு மணிநேர சேவையில் மாத்திரமே ஈடுப்படுவது என்றும் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.இது குறித்து தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்னவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , சனிக்கிழமைகளில் தபாலகங்களை மூடுவதற்கு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாக எதிர்வரும் செவ்வாய்கிழமை அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

தபாற் நிலையங்களின் தற்போதைய நிலைமை குறித்து ஒன்றிணைந்த தொழிற்சங்க செயலாளர் சிந்தக்க பண்டாரவை தொடர்புகொண்டு கேட்டபோது  அவர் கூறியதாவது, தபாற் திணைக்கள ஊழியர்களுக்கு நீண்டகாலமாக மேலதிக வேளை கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. அத்துடன் தற்போது சனிக்கிழமைகளில் தபாற் நிலையங்களை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டதன் காரணமாக மத்திய தபாற் பரிவர்தனை நிலையத்தில் ஏனைய இடங்களிலும் சுமார் 20 இலட்சத்துக்கு அதிகமான கடிதங்கள் தேங்கி கிடக்கின்றன.

இந்த நிலையில் சனிக்கிழமைகளில் தபால் நிலையங்களை மூடுவதும், மேலதிக வேளை நேர கொடுப்பனவுகளை வழங்க மறுப்பதும் அநீதியானது. இதனால் பொதுமக்களே பெரிதும் பாதிப்படைவார்கள்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எட்டு மணி நேர கடமையில் மாத்திரமே ஈடுபடுவோம் என்றார்.