(லியோ நிரோஷ தர்ஷன்)

கொவிட் -19 உலக தொற்றுடன் சீனா தனது பல்துறைசார் விஸ்தரிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது.  குறிப்பாக தென் சீன கடல் விவகாரம் மற்றும் தற்போது இந்திய - சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை என்பன இவற்றில்  சில முக்கிய காரணிகளாகின்றது. இதனால் ஏற்கனவே வைரஸ் தொற்றுக்குறித்து சீனா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் உலக நாடுகள் தற்போது சீனாவிற்கு எதிரானதொரு கூட்டு நடவடிக்கைளை கையாண்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவுடன் தற்போது ஏற்பட்டுள்ள எல்லை முரண்பாடுகள் சீனாவிற்கு எதிராக உலக நாடுகளின் பார்வையை மேலும் வலுவடைந்துள்ளது. 

வழமையான இராணுவ பயிற்சி நடவடிக்கைளை மார்ச் , ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்திய எல்லை பகுதிகளில் வைரஸ் தொற்றுக்காரணமாக முன்னெடுக்க முடியாமல் போனது. குறித்த  மாதங்களில் காலநிலை இந்தியாவின்  எல்லை பகுதிகளில் சீராக  காணப்படுவதாலேயே குறித்த மாதங்களில் இந்திய வீரர்கள் அங்கு பயிற்சிகளில் ஈடுப்படுவார்கள். ஏனைய காலப்பகுதிகளில் கடும் பணிபொழிவு காணப்படுவதால் பயிற்சிகளில் ஈடுப்படுவது குறைவாகும். 

ஆனால் இந்தியாவில் ஏற்பட்ட கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால்  லடக் மற்றும் பாங்கொங் ஏரி பகுதிகள்  உட்பட எல்லை பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பயிற்சி நடவடிக்கைகள் குறைவாகவே காணப்பட்டது. அதே போன்று இந்து - திபெத் இராணுவ கூட்டுப் பயிற்சிகளும் இம்முறை முன்னெடுக்க முடியாமல் போனது. 

இதனை கூர்மையாக அவதானித்த சீனா எல்லை பகுதியில் இராணுவத்தையும் போர் தளபாடங்களையும் குவித்தது. அப்பகுதிகளில் இந்தியாவினால்  முன்னெடுக்கப்படும்  சாலைகள் எல்லை கோட்பாடுகளை மீறும் வகையில் அமைவதாக தெரிவித்து சீனா தன்பக்க நியாயத்தை கூறி வருகின்றது. 

எவ்வாறாயினும்  சீனாவிற்கும் - இந்தியாவிற்குமிடையிலான  எல்லை பிரச்சினை என்பது மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. இதனை மையப்படுத்தி 1962 இல் இரு நாடுகளுக்கும்  இடையில் பெரும் போரும் இடம்பெற்றது. இந்த எல்லை பிரச்சினைக்கு நிலையானதொரு கோட்பாடு இல்லாமையினால்  தீர்வை எட்டுவது என்பது கடுமையாக விடயமாகவே காணப்பட்டது. 

இவ்வாறானதொரு நிலையில் தான் 1988 ஆம் ஆண்டில் எல்லை பிரச்சினையை மையப்படுத்திய சீன-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.  அன்றைய இந்திய பிரதமராக இருந்த ரஜுவ் காந்தி மற்றும் சீன தலைவர் லீ பெங் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தனர். 

ஒரு வரையறுக்கப்பட்ட எல்லை என்பது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இன்றளவில் இல்லை. 1988 ஒப்பந்தத்தின் பிரகாரம்  உண்மையான கட்டுப்பாட்டு எல்லை கோட்பாடுகளுக்கு  (Line of Actual Control ) அமைவாக சீனா - இந்திய தமது எல்லைகளை வகுத்துள்ளன.  இந்த ஒப்பந்தத்தின் பிரகாரமே சீனா - இந்திய எல்லை பகுதியில்   இன்று வரை கடும் மோதல்கள் இடம்பெறாமலும் உயிர் ஏற்படாமலும் உள்ளது.

\\

சொல்லப்போனால் 1975  ஆம் ஆண்டிற்கு பின்னர்  அங்கு இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட வில்லை. எல்லைகளில் பிரச்சினை ஏற்படும் போது அதனை தீர்த்துக் கொள்ள இரு தரப்பு உயர் மட்ட குழுவொன்று அமைத்தல் , இராணுவ தாக்குதல் மற்றும் கைதுகள் இடம்பெறாதிருக்கும் வகையிலேயே ஒப்பந்தம் அமையப்பெற்றுள்ளது.

1988 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டு வரை சுமார் நான்கு ஒப்பந்தங்கள் எல்லை பிரச்சினையை மையப்படுத்தி சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில்  திடீரென  சீனா ஏன் எல்லை பகுதிகளில் பெரும் தொகையான படைகளை குவிக்க வேண்டும் ? எல்லை பிரச்சினையை மையப்படுத்தி மற்றுமொரு போரை இந்தியா மீது சீனா தொடுக்க விரும்புகிறதா ? அல்லது தனது போர் ஆளுமையை உலகிற்கு வெளிப்படுத்த விரும்புகின்றதா? போன்ற கேள்விகள் ஏற்படுகின்றன. ஆனால்  பதற்றத்தை தோற்றுவித்துள்ள சீனா பெரும் ஆயுத போர் வரை செல்ல கூடிய வாய்ப்புகள் தற்போதைக்கு இல்லை என்பதும் ஒரு பார்வையாகும். 

அந்தவகையில் சீனாவிற்கு எதிராக இடம்பெறும் உலக அரசியல் முக்கியமானதாக அமைகின்றது. இதன் போது தாய்வான் ஊடான உலக அரசியலை கவனத்தில் கொள்ள வேண்டும். தாய்வானின் ஜனாதிபதி சாய் இங்-வென் மீண்டும்  ஆட்சி பொறுப்பை மூன்று வாரங்களுக்கு முன்பதாக ஏற்றிருந்தார். இதற்காக இடம்பெற்ற நிகழ்வில் பல முக்கியஸ்தர்கள் இணைய வழியாக இணைந்திருந்தனர். இந்தியா சார்பில் மீனாட்சி லெக்ஹி மற்றும் ராவுல் கேசவன் ஆகிய இரு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த நிகழ்வில் இணைந்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அமெரிக்காவின் இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவும் இந்த நிகழ்வில் இணையம் வழியாக கலந்துக்கொண்டிருந்தார்.  சீனாவிற்கு எதிரான இராணுவம் உட்பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாய்வான் உடன்படும் என்ற நிலைப்பாட்டை ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர்  சாய் இங்-வென் அறிவித்திருந்தார். 

இவ்வானதொரு நிலையில் தாய்வானை தன்னுடையதொரு நாடாக கருதும் சீனாவால் இந்த நிகழ்வையும் இந்திய - அமெரிக்க பிரசன்னத்தையும்  அனுமதிக்க முடியவில்லை. ஒரு சீனா என்ற கோட்பாட்டில்  கடும் போக்கினை கையாளும் சீனா தாய்வானின் நகர்வுகளை கட்டுப்படுத்த முனைகிறது. இந்திய பிரதிநிதிகள் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறித்து சீன ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடப்பட்டன. 

சீனாவிற்கு எதிரான செயற்பாடுகளில் இந்தியா பின்னணியில் செயற்படுகின்றதாகவே அந்த செய்திகளும் சீனாவின் செயற்பாடுகளும் தற்போது அமைந்துள்ளன. மறுப்புறம் கொவிட்-19 வைரஸ் எவ்வாறு உருவாகியது என்பதை கண்டறிய அனைத்துலக விசாரணைக்கு 122 நாடுகள் கைச்சாத்திட்டிருந்தன. அதில் இந்தியாவும் கைச்சாத்திட்டது. அத்துடன் தற்சார்பு பொருளாதாரம் குறித்து இந்தியாவின் நகர்வுகள் அமைந்துள்ளமையினால் இந்திய உற்பத்திகள் அதிகரித்து சீனா உற்பத்திகளின் இறக்குமதிகளில் வீழ்ச்சி ஏற்படலாம் . இவ்வகையான நடவடிக்கைகள் தன் மீதான இந்தியாவின் மறைமுக தாக்குதலாகவே சீனா தற்போது கருதிவருகின்றது. 

எனவே தான் திடிரென எல்லை பகுதிகளில் சீனா படைகளை குவித்து  போர் அச்ச சூழலை ஏற்படுத்தி வருகின்றது. இவ்வாறானதொரு பதற்ற சூழலை ஏற்படுத்துதன் ஊடாக மீண்டுமொரு உயர் மட்ட பேச்சு வார்த்தையை நடத்தி இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொள்ள கூடிய முயற்சியாக கூட இது இருக்கலாம் .

இந்தியாவும் எல்லைகளில் படைகளை குவித்து வருகிறது. தற்போது  சீனாவிற்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளுடன்  செயற்படும் நாடென்றால் அது அமெரிக்கா தான் . அண்மையில் கூட  லேசர் தாக்குதல் தொடர்பில்  நடுக்கடலில்  அமெரிக்கா சோதனையிட்டுள்ளது. அதே போன்று மீண்டும் அணுவாயுத சோதனை குறித்து அமெரிக்க அறிவிப்புகளையும் விடுத்துள்ளது. 

சீனாவிற்கும் - இந்தியாவிற்குமான எல்லை பிரச்சினையில் இந்தியாவிற்கு சார்பாக இஸ்ரேல் தனது அறிவிப்பை விடுத்துள்ளது. மேலும் எல்லையில் சீனா பிரச்சிணை செய்வதாக அமெரிக்காவும் அறிவித்துள்ளது. அதே போன்று அவுஸ்திரேலியாவுடன் இருதரப்பு சந்திப்பில் கலந்துக்கொள்ளவுள்ள இந்தியா , இங்கே இராணுவ ஒத்துழைப்புகள் குறித்தும் கவனம் செலுத்தும் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக இந்தியாவை சூழ வலுவானதொரு ஆதரவு கூட்டணி உருவெடுத்து வருகின்றது. சர்வதேச எல்லைகளில் சீனா  எங்கெல்லாம்  பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றதோ , அங்கெல்லாம் சீன எதிர்ப்பு கூட்டணியகள் வலுவடைந்து வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து  அனைவரின் எதிர்பார்ப்புகளும் கூர்மையாக  இருந்த நிலையில் இந்தியாவிற்கான ரஷ்ய தூதுவர் முக்கிய அறிவிப்பை விடுகின்றார். அதாவது சீனாவிற்கும் இந்தியாவிற்கும்  இடையில் பல ஒப்பந்தங்கள் காணப்படுகின்ற நிலையில் அதன் பிரகாரம்  தீர்வு காண்பது சிறந்தது. இங்கு ரஷ்யா யாருக்கும் ஆதரவாக கருத்துரைக்கவோ செயற்படவோ செய்யாது என குறிப்பிட்டிருந்தார். எனவே பேச்சுகளின் ஊடாக தீர்வு காணும் நோக்கில் சீன- இந்திய  ஒப்பந்தத்தின்  பிரகாரம் அமையப்பெற்ற குழு இன்று ஞாயிற்றுக்கிழமை (07-06-2020) சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். ஏற்கனவே இராணுவ அதிகாரிகள் மட்டத்தில்  இடம்பெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில் இன்றைய சந்திப்பு இடம்பெறவுள்ளமை முக்கியம்சமாகும்.