(செ.தேன்மொழி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நாட்டின் சிவில் சட்டத்தை மீறி செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், துறைச்சார் தேர்ச்சி பெற்றவர்கள் ஊடாக முன்னெடுக்க வேண்டிய பிரிவுகளுக்கு இராணுவத்தினரை நியமித்து வருவது இராணுவ ஆட்சிக்கு வித்திடுவதாகும் என்றும் கூறினார்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருக்கும்  தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநீக்க சட்டவிதிகளை அரசாங்கம் மீறிவருவதுடன் , அமெரிக்க இராஜதந்திரி தொடர்பிலும் அக்கறையின்றி இருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இன்று தனது 55 ஆவது ஆண்டு அரசியல் வாழ்க்கையை கொண்டாடி வருகின்றார். இதனூடாகஇவர் சிவில் சட்டவிதிகளை மீறி வருகையில் , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இராணுவ ஆட்சிக்கு வித்திட்டு வருகின்றார். நிர்வாகத்துறை , கண்காய்வு , வெளிநாட்டு விவகாரம் , பொருளாதார முகாமைத்துவம் போன்ற துறைகளுக்கு பரீட்சைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் , அந்த துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களை விடுத்து இராணுவத்தினரை அவற்றில் அமர்த்துவது இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான நோக்கமாகும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநீக்க சட்ட விதிமுறைகளை மீறி அரசாங்கம் செயற்பட்டு வருவதை அண்மையில் அவதானிக்க கூடியதாக இருந்தது.

அவர்களது செயற்பாடுகளின் காரணமாக இவ்வளவு நாளும் கொரோனா வைரஸ் தொடர்பில் ஊடக முன்னிலையில் பல்வேற்று ஆலோசனைகளை வழங்கிவந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்க செயலணியினரும் அமைதி காத்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் சுகாதார பதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திற் கொள்ளாது அவர் இஷ்டம்போல நாட்டுக்குள் வந்துள்ளார்.

கடந்த காலங்களில்  நல்லாட்சி அரசாங்கம் அமெரிக்காவுக்கு துணைப்போவதாகா தெரிவித்துவந்த அமைச்சர்களான விமல் வீரவன்ச , உதய கம்மன்பில ஆகியோர் தற்போது எங்கே? இந்த அமெரிக்க இராஜதந்திரி தொடர்பான விவரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கலாம் தானே. தற்போது ஏன் அமைதியாக இருக்கின்றார்கள்? ஜனாதிபதி அமெரிக்க பிரஜை என்பதினாலா? இந்த விடயம் தொடர்பில் அலட்சியமாக இருத்தல் கூடாது. அதனால் இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக வெளிவிவகார அமைச்சர்  மற்றும் அமைச்சின் செயலாளர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.