(நா.தனுஜா)


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நிறுவப்பட்டுள்ள இரண்டு புதிய ஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், அரசாங்கமும் அரசியல்வாதிகளும் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாத்து வலுவூட்டும் விதமாக செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.ஒழுக்கமானதும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும், கிழக்கிலங்கையில் புராதன சின்னங்களைப் பாதுகாப்பதற்காவும் ஜனாதிபதி கோததாபய ராஜபக்ஷவினால் இரண்டு ஜனாதிபதி செயலணிகள் நிறுவப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இரண்டு ஜனாதிபதி செயலணிகள் நிறுவப்பட்டமை தொடர்பில் எமது அமைப்பு மிகுந்த அவதானம் செலுத்தியிருக்கிறது.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும், எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும் வலுவிழக்கச் செய்யுமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த பின்னர் இது நடைபெற்றிருக்கிறது.

இந்த இரு ஜனாதிபதி செயலணிகளின் நியமனம் தற்போது உருவாகிவரும் பிரச்சினைக்குரிய சர்வாதிகாரம் மற்றும் இராணுவமயமாக்கம் ஆகிய போக்குகளையும், அரசியலமைப்பு ரீதியான ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு ஏற்பட்டிருக்கும் பாரிய தாக்கம் என்பவற்றையும் வெளிக்காட்டி நிற்கிறது.

ஒழுக்கமானதும், சட்டக் கட்டுப்பாடுடைய  சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி பாதுகாப்புச் செயலாளரினால் தலைமை தாங்கப்படுவதுடன், அச்செயலணியின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் முன்னாள், இந்நாள் இராணுவ மற்றும் சட்டம், பாதுகாப்புடன் தொடர்புடைய அதிகாரிகளாகவே இருக்கின்றனர்.

குறித்த செயலணிக்கு 'சமூகவிரோத செயற்பாடுகளை' கண்காணிக்கும், தடுக்கும் பணிகள் வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும், அதற்குரிய சரியான பொருள்கோடல் வழங்கப்படாத நிலையில் அத்தகைய செயல்களுக்கு எதிரான செயலணி எவ்வாறு நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த ஜனாதிபதி செயலணியானது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதை மாத்திரம் பணியாகக் கொண்டிருக்கிறதா அல்லது விரிவானதொரு மட்டத்தில் நின்று செயற்படுமா என்பது குறித்த சந்தேகங்களும், இதன் அதிகார எல்லைகள் பற்றிய குழப்பங்களும் இருக்கின்றன.

மற்றைய செயலணி கிழக்கிலங்கையின் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டிருக்கிறது. இச்செயலணி கிழக்கிலுள்ள பல்லின அடையாளத்தை மறைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டிருக்கிறதா என்பது உள்ளடங்கலாக பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன.

இத்தகைய நியமனங்கள் அனைத்தும் நிறைவேற்றதிகாரத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையில் சமநிலையொன்று பேணப்பட வேண்டிய தேவையின்றி ஆட்சி செய்யக்கூடிய வாய்ப்பு ஜனாதிபதிக்குக் காணப்படும் சந்தர்ப்பத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

அத்தோடு அதிகரித்துவரும் இராணுவமயமாக்கல் மற்றும் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதில் முன்னாள், இந்நாள் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்பு என்பன குறித்தும் நாம் வெகுவாக விசனமடைந்திருக்கின்றோம். இந்நிலையில் அரசாங்கமும், அனைத்து அரசியல்வாதிகளும் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாத்து, வலுவூட்டும் வகையில் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.