(நா.தனுஜா)

தமது நாட்டிற்கு மீளத்திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு இலவசமாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு லெபனான் அரசாங்கம் உடன்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்திருக்கிறது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்குத் திரும்ப அழைத்துச்செல்வதில் பின்பற்றப்படும் அணுகுமுறைகளின் பிரகாரம் லெபனானுக்கான இலங்கைத்தூதுவர் ஷானி கல்யாணரத்ன கருணாரத்ன லெபனான் தொழிலாளர் விவகார அமைச்சர் மாடமே லமியா யாமினுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.

இவ்விருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது கொவிட் - 19 வைரஸ் தொற்றுப்பரவல், புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்கள், லெபனானின் பொருளாதார நெருக்கடி, ஊழியர்களுக்கு ஊதியக்கொடுப்பனவு இடைநிறுத்தம், புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது மீண்டும் நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு இலவசமாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது குறித்து தூதுவர் தொழிலாளர் விவகார அமைச்சரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

அதேதினம், நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வதற்கு வழமையாகப் பெறப்படும் 100 அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக 20 அமெரிக்க டொலர்களை அறவிடுமாறு அமைச்சர் தூதரகத்திற்கு அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி லெபனானில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு இலவசமாக பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்வதற்கு உடன்பாடு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.