(ஆர்.யசி)

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிக்க ஜனாதிபதி நியமித்துள்ள விசேட ஜனாதிபதி செயலணியை  கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவுள்ளதுடன் இதற்கான கண்காணிப்பு செயற்பாடுகளில் நாடு பூராகவும் 20 ஆயிரம் புலனாய்வுத் துறையினர் கடமைகளில் அமர்த்தப்படவுள்ளதாகவும் அரச தரப்பு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி இன்னமும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படாது போனாலும் கூட எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் தேர்தலை நடத்த முடியும் என்ற எதிர்வுகூறல்களை தேர்தல்கள் ஆணைக்குழு கூறிவருகின்றது.

எவ்வாறு இருப்பினும் நாளைய தினம் தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான ஆயத்தங்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கூடி ஆராயவுள்ளது.

இந்நிலையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிக்க ஜனாதிபதி விசேட நடவடிக்கைகள் சிலவற்றை முன்னெடுத்துள்ளார்.

சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அமைச்சரவை இணைந்த கொவிட் -19 செயலணி வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இம்மறை சுகாதார வழிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டால் அவர்களும் முழுமையாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் என ஜனாதிபதி  செயலணிக் கூட்டத்தில் கூறியுள்ளார்.

அதேபோல் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த ஜனாதிபதி கடந்த வாரம் நியமித்த விசேட ஜனாதிபதி செயலணியை இம்முறை தேர்தல் கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் கூடிய அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து ஜனாதிபதி அமைச்சர்களுடன் பேசியுள்ளார். ஆகவே இம்முறை பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில்  நடத்தப்படுவதற்கான  சாத்தியங்கள் அதிகமாக உள்ள காரணத்தினால் இப்போதே தேர்தல் கண்காணிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அதற்கான ஜனாதிபதி செயலணி தமக்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க தயராக வேண்டும் எனவும் ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் தரப்பில் இருந்து தெரிய வருகின்றது.

மேலும் நடைபெறவுள்ள  பொதுத் தேர்தலில் சகலரும் சுகாதார வழிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து நோய் பரவல்களில் இருந்து விடுபடும் விதத்தில் செயற்படுகின்றனரா என்பதை இரகசியமாக கண்காணிக்க நாட்டில் சகல பகுதிகளுக்கும் சுமார் 20 ஆயிரம் புலனாய்வு அதிகாரிகளை கடமைக்கு அமர்தவுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள முப்படைகளையும் பயன்படுத்த ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாகவும் விசேட ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களில் ஒருவர் உறுதிப்படுத்தினார்.